WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

16.5.2014 வெள்ளி முதல்  பன்னாட்டு எழுத்தாளர்கள் கூடி எழுதும்  பெருந் தொடர்  விழுதல் என்பது.... வாசிக்கத் தவறாதீர்கள். பகுதி 1 (மேலும்)

16.5.2014 வெள்ளி முதல்  பன்னாட்டு எழுத்தாளர்கள் கூடி எழுதும்  பெருந் தொடர்  விழுதல் என்பது.... , பகுதி 1 (மேலும்)

பகுதி 2  தொட
ர்கிறது.....

இத் தொடரும் 1வது தொடரின் எழுத்தாளர் ஏலையா முருகதாசன் அவர்களால்  எழுதப்பட்ட மிகுதிக் கதை 2 வது பகுதியாக வருகிறது.

கோப்பிக் கடைக்கு போன பெண் திரும்பி வந்து ஏதோ சொன்னாள். வானில் எல்லோரையும் ஏறச் சொன்னார்கள். கடவுச்சீட்டை கேட்ட விதமும் வானில் ஏறச் சொன்ன விதமும் கடுமையான தொனியாகவிருந்தது. வான் எங்களை ஏற்றியபடி ஓடிக் கொண்டிருந்தது.

கடவுச்சீட்டை வாங்கிவிட்டார்கள் இனி நேரே விமான நிலையத்திற்குத்தான் கொண்டு போவார்கள் என்ற நினைப்பில் ஒடுங்கிப் போயிருந்தேன். பாகிஸ்தான்காரன் மெதுவாக அல்லா அல்லா என்று சொல்லிக் கொண்டிருந்தான். மற்றவர்களில் சிலர் வானின் மேல்பகுதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் கண்களை மூடியபடி இருக்கையில் சரிந்திருந்தார்கள்.

ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் எங்களை ஏற்றிக் கொண்டு வந்த காவல்துறையினரின் வானும் காரும் ஒரு கட்டிடத்தின் முன்னால் நின்றன. வானின் கண்ணாடி யன்னலுக்கூடாகப் பார்த்தேன். அவர்களின் மொழியில் காவல்நிலையம் என எழுதப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டேன்.

எங்கள் எல்லோரையும் இறங்கச் சொல்லி எங்களுக்கு முன்னுக்கு  இரண்டு காவல்துறையினரும் பின்னுக்கு இரண்டு காவல்துறையினருமாக எங்களை கட்டிடத்தின் உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள்.

அந்தக் கட்டிடத்திற்குள் அகலமான கண்ணாடிகள் பொருத்தப்பட்ட பல அறைகள் இருந்தன. அறைகளுக்குள் பல காவல்துறையினர் வேலை செய்து கொண்டிருந்தனர். சிலர் நடைபாதையில் காணப்பட்டனர்.

எங்களை கட்டிடத்தின் உள்ளேயுள்ள நடைபாதையில் அழைத்துக் கொண்டு போகும் போது அறைகளுக்குள்ளிருந்தவர்கள் எங்களைக் கண்களால்  மற்றையவர்களுக்கு ஜாடைகாட்டி   ஏதோ சொல்வது தெரிந்தது. எங்களை கேலி செய்வது போல் சிரித்தார்கள். ஆனால் சிரிப்பின் சத்தம் வெளியே வரவில்லை.

சொந்த மண்ணை விட்டு வந்தால் மற்றவர்களின் கேலியையும் கிண்டலையும் சகித்துத்தான் ஆக வேண்டும். தன்மானம் சுயமரியாதை எல்லாம் எங்கள் நிலையினால் கருகிச் சாம்பலானது.


நான்கு காவல்துறையினரும் எங்களை மேல் மாடியிலுள்ள பெரிய அறையொன்றுக்குள் கொண்டு போய் அங்குள்ள நாற்காலிகளில் உட்காருமாறு  ஆங்கிலத்தில் சொன்னார்கள். நாங்களிருந்த அறையின் எல்லாப் பக்கங்களிலும் அகலக் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட அறைகள் இருந்தன.

சோர்ந்து போய் உட்கார்ந்திருந்தோம் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எதுவும் நடக்கலாம் என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது. எனது இதயம் துடிக்கும் சத்தம் நெஞ்சுகு;கூட்டையும் தாண்டி எனக்குக் கேட்டது.
நான்கு காவல்துறையினரில் ஒருவரின் கையில் எங்கள் கடவுச்சீட்டுக்கள் இருந்தன. நான்கு பேரும் பக்கத்து அறைக்குள் போனார்கள். கடவுச் சீட்டுக்களைக் கொண்டு போனவர் மேசையின் முன்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவரிடம் கொடுத்தார்.
அந்தப் பெண் ஒவ்வொரு கடவுச்சீட்டாக விரித்துப் பார்த்தார். பிறகு தொலைபேசியில் பேசினார். பெரிய கண்ணாடி யன்னலூடாக உள்ளே நடப்பதைப் பார்க்க முடிந்தது. உற்றுப் பார்ப்பது போல் பார்க்காது தற்செயலாகப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கண்கள் எரிந்தன, இமைகளை விரல்களால் தடவிவிட்டேன். சில நிமிடங்கள் சென்றன. காவல்துறையினரின் சீருடையிலில்லாத ஒரு பெண் ஒரு சிறிய பெட்டியில் எதையோ கொண்டு வந்தார். எங்கள் ஒவ்வொருவரின் முன்னும் பெட்டியை நீட்டி அதற்குள் இருப்பதை ஆங்கிலத்தில் எடுக்கச் சொன்னாள்.

பெட்டிக்குள் புதிய பல்துலக்கும் பிறஸ்கள் இருந்தன. பிறஸ்ஸை எடுத்துக் கொண்டே நன்றி சொன்னேன். எல்லோருக்கும் பிறஸ்களைக் கொடுத்து முடித்ததும் மூடப்பட்டிருந்த ஒரு அறையின் கதவைத் திறந்து எங்கள் எல்லோருக்கும் கேட்கும்படியாக” இது கழிவிடமும் முகம் கழுவும் இடமுமாகும். முகம் கழுவும் இடத்தில் பற்பசையிருக்கின்றது. இங்கே பல்லைத் தீட்டி முகத்தை கழுவுங்கள். முக்கியமாக உங்கள் உள்ளங் கைகளை சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் போய்விட்டாள்.

பல்துலக்கி முகத்தைக் கழுவினோம். உள்ளங்கைகளை சவர்க்காரம் போட்டுக் கழுவினோம். கைதுடைப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கடுதாசியை எடுத்து முகத்தைத் துடைத்தோம். ஆனால் முகத்திலிருந்த ஈரத்தன்மை போகவில்லை.
எனது நாற்காலிக்கு வந்த நான் ஊரிலிருந்து கொண்டு வந்த சிறிய பையை மெதுவாகத் திறந்தேன். பையை மடியில் வைத்தபடியே பைக்குள்ளிருந்த சாரத்தின் ஒரு பகுதியை மேலே இழுத்து முகத்தை துடைத்தேன்.

அப்பொழுது நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. சீருடையில்  காவல்துறைப் பெண்ணும் சீருடை அணியாத  ஒரு பெண்ணும் இரண்டு தட்டுகளில் ஒன்றில் சிறிய சிறிய பாண் துண்டுகளை ஒருவரும் இன்னொருவர் பிளாஸ்ரிக் குவளைகளில் கோப்பியும் கொண்டு வந்து மேசையில்  வைத்தார்கள்.

பாணைச் சாப்பிட்டுவிட்டு கோப்பியைக் குடிக்குமாறு சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். உண்மையில் நான் வியப்படைந்துவிட்டேன். வீதியில் நின்ற எங்களுடன்  கடுமையாக நடந்து வானில் ஏற்றி வந்து பின்னர் கண்ணாடி யன்னலுக்கூடாக கேலி செய்தமைக்கும் எதிர்மாறாக நடைபெற்ற காவல்துறையினரின் மனிதாபிமான செயலைப் பார்த்து என்னைக் கவலை  உணர்வு ஆட்கொண்டது.

ஐரோப்பிய நாடுகளில் ஒரு மனிதன் நீரின்றியோ உணவின்றியோ இறக்கக்கூடாது என்ற அடிப்படைச் சட்டம் ஒன்று இருக்கிறது என்பதை  ஊரிலிருந்த போது பத்திரிகைகளில் வந்த வெளிநாட்டுச் செய்திகள் மூலம் அறிந்திருக்கிறேன்;

அதை கண்கூடாகக் கண்டேன். எழுந்து போய் பாண் துண்டுகளை எடுத்துச் சாப்பிட்டோம். இரண்டு பாண் துண்டுகளுக்கு இடையில் ஜாமும் பட்ரும் பூசப்பட்டிருந்து. பாணைச் சாப்பிட்டபடியே கோப்பியைக் குடித்தோம். பாலைவனத்தில் தாகத்தினால் தவிக்கும் போது தண்ணீர் கிடைத்தது போல் இருந்தது.

சாப்பிட்டு முடிந்ததும் சில நிமிடங்கள் செல்ல, ஒரு சீருடை அணியாத ஆண்  ஒருவர் எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஒவ்வொருவராக  ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றார். எனது முறை வந்தது எனது பெயரைச் சொல்லி அழைக்க எழுந்து அவருடன் சென்றேன்.

அந்த அறையில் காவல்துறையின் சீருடையுடன் அதிகாரி போல் ஒருவரும் எனது நிறத்தில் ஒருவரும் ஒரு மேசைக்கு முன்னால் உட்கார்ந்திருந்தனர். அந்த அதிகாரி என்னை உட்காரச் சொன்னார். என்னை அறைக்குள் அழைத்து வந்தவரும் அதிகாரிக்கு எதிராக உட்கார்ந்தார்.

அது அகலமான மேசை. நான் எனது நிறத்திலுள்ளவருக்கு எதிராக உட்கார்ந்திருந்தேன். என்னை அழைத்து வந்தவருக்கு முன்னால் ஒரு ஒலிப்பதிவுக் கருவியிருந்தது. அவர் ஒலிப்பதிவுக் கருவியிலிருந்த  ஹெட்போனை தலையில் கொழுவினார். எல்லாமாக நான்கு சிறிய ஒலிவாங்கிகள் ஒவ்வொருவரின் முன்னாலும் மேசையில் பொருத்தப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது இனி என்ன நடக்கப் போகின்றது என்று மனம் பதைபதைத்தது. நான் ஒரு குற்றவாளி போல் கால்களை ஒடுக்கி வைத்து கைகளை முன்னால் கட்டியவாறு நுணிக்கதிரையில் உட்கார்ந்திருந்தேன். எங்கள் நால்வருக்கு முன்னாலும் கண்ணாடிக் குவளைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஒரு சிறிய தட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது.
என்னிறத்தில் உள்ளவரைக் காட்டி 
“ இவர் பெயர் இராஜேஸ்வரன், இவர் சுவிற்சலாந்தின் அரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளர்.

இவர் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழர். உங்களை விசாரிக்கப் போகிறோம். நீங்கள் உண்மையச் சொல்ல வேண்டும்.

நீங்கள் உண்மை சொல்லவில்லையென்று நாங்கள் அறிந்தால் உங்களை இருபத்திநாலு மணித்தியாலத்திற்குள் எங்கிருந்து வந்தீர்களோ அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி விடுவோம்.

இவர் நீங்கள் சொல்வதை மொழிபெயர்பார். நான் கேட்பதையும், நீங்கள் சொல்வதையும், அவர் சொல்வதையும் நாங்கள் ஒலிப்பதிவு செய்வோம்” எனச் சொல்லி நிறுத்தினார்.


எனது முகம் வியர்க்கத் தொடங்கியது. நெஞ்சில் வியர்வை அரும்பி வயிற்றுப் பகுதியில் வழிந்தது. முகத்தில் அரும்பிய வியர்வையை மெதுவாக துடைத்தவாறு “ ஓம்” என்பதற்கு அறிகுறியாக தலையை ஆட்டினேன்.

அந்த அதிகாரி தனக்கு முன்னால் மேசையில் கிடந்த எனது கடவுச்சீட்டை எடுத்து விரித்துப் பார்த்தபடியே மொழிபெயர்ப்பாளரைப் பார்த்து அவரது மொழியில் ஏதோ சொன்னார்.

மொழிபெயர்ப்பாளர் என்னைப்பார்த்து கேட்கத் தொடங்கினார். அதிகாரி சொல்லச் சொல்ல மொழிபெயர்ப்பாளர் தமிழில் என்னிடம் கேட்டார்.

“உங்களுக்கு என்ன பெயர்? “
“தருமசீலன்”

“எத்தனை வயது? ”
“பத்தொன்பது”

“உங்களின் அப்பா பெயர் என்ன?”
“மார்க்கண்டு”

“உங்களின் அம்மாவின் பெயர் என்ன?”
“கண்மணி”

“நீங்கள் வேலை செய்கிறவரா?”

“இல்லை படிக்கிறவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தவன்”

“இந்த நாட்டுக்கு எதற்காக வந்தனீங்கள் ?”
„ ................................“
நான் மௌனமாயிருந்தேன்.

 அதிகாரி மொழிபெயர்ப்பாளரை கூர்ந்து பார்த்தார். மொழிபெயர்ப்பாளர் „அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இப்படி மௌனமாகவிருக்க முடியாது“ என்றார்.


என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அந்த விநாடிப் பொழுதுகளில் எனக்குள் முரண்பாட்டுப் பதில்கள் கேள்விகள் வந்து போயின, ஒரு முடிவிற்கு வந்தவனாக,

„பயத்திலை“ என்றேன்.

„உங்கள் நாட்டிலிருந்து எதில் வந்தனீங்கள்?“
„விமானத்தில்“

„விமானத்தின் பெயர்?“
„ தெரியாது“

„உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?“
„ஓரளவு தெரியும்“

„எந்த நாட்டில் வந்து இறங்கினனீங்கள்?“
„ .....  ........  ... ஆஸ்த்திரியாவில்“

„அங்கிருந்து எங்கள் நாட்டிற்கு எப்படி வந்தனீங்கள்?; “
„பேருந்தில்“

„பேருந்தின் பெயர் என்ன?“
„ பார்க்கவில்லை.......தெரியாது“

குரல் கரகரத்தது. தொண்டைக்குள் எச்சில் அடைத்தது.

அதிகாரியின் முகத்தில் ஒரு அலட்சியப் புன்னகை வந்து போயிற்று. எனக்கு முன்னாலிருந்த தண்ணீர்க் கண்ணாடிக் குவளையைக் காட்டி குடிக்கச் சொன்னார்.

எடுத்துக் குடித்தேன்.

தொண்டையை செருமிக் கொண்டேன். தொடர்ந்தன கேள்விகள்.

„ சாரதியின் பெயராவது தெரியுமா?“
„ தெரியாது“

„ நீங்கள் வந்த பேருந்தில் எத்தனை பேர் வந்தார்கள்?“
„பத்துப் பேரென்று நினைக்கிறன்“

„எல்லாரும் உங்கள் நாட்டுக்காரர்களா?“
„இல்லை நான் மட்டுந்தான் சிறீலங்காவைச் சேர்ந்தவன்“

„ இன்று காலை கோப்பிக்கடையில் ஒரு தமிழரைச் சந்தித்தீர்களா, அவரைத் தெரியுமா, அவர் உங்கள் உறவினரா, அவர் உங்களை சந்திக்கத்தான் வந்தாரா?“
„ இல்லை... இல்லை... அவர் எனது உறவினர் அல்ல. அவரை யாரென்று எனக்குத் தெரியாது“

„உங்கள் நாட்டிலிருந்து இந்த நாட்டிற்கு வரும்வரை பணம் எப்படி கிடைத்தது?“
„ஊரில் பலரிடம் அம்மா கடன் வாங்கியும் தனது தாலிக்கொடியை விற்றும் காசு தந்தார்“

அதிகாரி தாலிக்கொடியென்றால் என்னவென்று அம்மொழிபெயர்ப்பாளரைக் கேட்பது போல் தெரிந்தது.

தாலிக்கொடியை தலிக்கொடி என்று உச்சரித்ததிலிருந்து நான் விளங்கிக் கொண்டேன்.மொழிபெயர்ப்பாளர் தனது விரலில் உள்ள மோதிரத்தைக் காட்டி ஏதோ சொன்னார்.

அதிகாரியின் முகம் சிறிது வாடியதைக் கவனித்தேன். என்னை அனுதாபத்துடன் உற்றுப் பார்த்தார். தொடர்ந்து அதிகாரி ஏதோ சொன்னார்.


இத்துடன் முதல் கட்ட விசாரணை முடிந்துவிட்டது. அடுத்தடுத்து விசாரணைகளுக்கு உங்களுக்கு அறிவிப்பார்கள். இனி அடுத்து உங்களை படம் எடுப்பார்கள், உங்கள் கைரேகைகளை பதிவு செய்வார்கள். உங்கள் கடவுச்சீட்டில் ஆறு மாதத்திற்கான தற்காலிக வதிவிடா தருவார்கள்.

உங்களை ஒரு விடுதியில் கொண்டு போய் விடுவார்கள். அங்குதான் நீங்கள் இருக்க வேண்டும்“ என்று மொழிபெயர்ப்பாளர் சொல்லி முடித்தார். விசாரணையை ஒலிப்பதிவு செய்தவர் ஒலிப்பதிவுக் கருவியை நிறுத்தினார்.


சில விநாடிகள் செல்ல பக்கத்திலிருந்த கண்ணாடி அறையிலிருந்து ஒரு பெண் சில தாள்களைக் கொண்டு வந்து அதிகாரியிடம் கொடுத்தாள்.
அது அச்சடிக்கப்பட்ட தாள்கள்.


அதிகாரி மொழிபெயர்ப்பாளரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பாளர் என்னைப் பார்த்து, அதிகாரி கேட்ட கேள்விகளும் நீங்கள் சொன்ன  பதில்களும் இத்தாள்களில் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன. நான் சொன்ன பதில்கள் அத்தனையும் உண்மையானவை என உறுதிப்படுத்துகிறேன் என்பதற்கு கீழ் கையொப்பமிட வேண்டும்“

 என்று கையொப்பமிட வேண்டிய இடத்தை மொழிபெயர்ப்பாளர் காட்டினார்.

மார்க்கண்டு தருமசீலன் என்ற பெயருக்கு மேல் கையொப்பமிட்டேன்.


நான் கையொப்பமிட்டதும் அதிகாரி மீண்டும் அந்தப் பெண்ணிடம் தாள்களைக் கொடுத்தார்.எதிலுமே எனது மனம் இலயித்துக் கொள்ளாத போதும். வேகம் வேகமாக அங்கு வேலைகள் நடப்பதைப் பார்த்து விநாடிப் பொழுதுகளில் வியப்பு ஏற்பட்டது.
பக்கத்து அறையிலிருந்து காவல்துறை சீருடை அணிந்த ஆண் வந்து என்னை அழைத்துச் சென்றார். என்னை நிற்க வைத்தும் தனியாக முகத்தையும் பல கோணங்களில் படம் எடுத்தார்.

அவர் ஆங்கிலத்தில் பேசினார். ஒரு மேசைக்கு முன்னால் இருந்த கதிரையில் உட்காரச் சொன்னார். மேசையலிருந்த ஒரு தட்டையான கருவி மேல் வலது உள்ளங்கையை வைக்கச் சொன்னார். ஒரு வெளிச்சம் என் கையை தடவிச் சென்றது. இடது உள்ளங் கையையும் வைக்கச் சொன்னார்.

எனக்கு முன்னால் இரண்டு தாள்களைக் கொண்டு வந்து வைத்தார். அவை சாதாரண தாள்கள் போலிருக்கவில்லை. வித்தியாசமாகவிருந்தன. இரண்டு தாள்களிலும் மார்க்கண்டு தருமசீலன் என எனது பெயர் இருந்தது.

எனது இரண்டு உள்ளங்கைகளையும் தூரிகையொன்றினால் சுத்தம் செய்தார். இரண்டு பெருவிரல்களிலும் மையொன்றைப் பூசி தாளில் அழுத்துமாறு சொன்னார், தாளின் மேல் அழுத்தினேன். பிறகு இரண்டு உள்ளங்கை முழுவதிலும் மையைப்பூசி தாள்களில் அழுத்தச் சொன்னார். இதற்காககத்தான் எங்கள் உள்ளங்கைகளை அந்தப் பெண் கழுவச் சொல்லியிருக்கலாம் என நினைத்தேன்.

பக்கத்திலிருந்த சின்ன தண்ணீர்த் தொட்டியைக் காட்டி கையைக் கழுவச் சொன்னார். கைகளை கழுவியதன் பின் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அந்த அறையிலிருந்த இன்னொரு கதவைத் திறந்துவிட்டார்.

நாங்கள் ஆரம்பித்தில் அமர்ந்திருந்த அறையில் போய் அமர்ந்தேன். என்னோடு வந்த சிலர் அங்கிருந்தனர். சிலரைக் காணவில்லை. பாகிஸ்தான்காரன் அங்கிருந்தான். எழுந்து என்னருகில் வந்து உ;டகார்ந்து ஆங்கிலத்தில்“என்ன கேட்டார்கள்“ என்றான் நான் எதுவுமே பேசாதிருந்தேன்.


இப்பொழுது எல்லாரும் வந்துவிட்டார்கள். எல்லாருடைய கடவுச்சீட்டையும் என்னை விசாரித்த அதிகாரி கொண்டு வந்து அவரவர்க்கு கொடுத்தார்.தயக்கத்துடன் கடவுச்சீட்டை விரித்தேன். உள்ளே நான்காக மடிக்கப்பட்ட தாளிருந்தது. அதையும் விரித்துப்பார்த்தேன். அந்த நாட்டு மொழியில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. ஆறு என்ற இலக்கம் அடைப்புக்குறிக்குள் இருந்ததைப் பார்த்து ஆறுமாத தற்காலிக வதிவிட அனுமதி இதுவாகத்தான் இருக்குமென  என நினைத்தேன்.

காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த நான்கு காவல்துறையினரும்  எங்களை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். மேல்மாடிக்கு வந்த அதே பாதையால்தான் திரும்பவும் அழைத்துச் சென்றார்கள். எங்களை கேலி செய்தவர்கள் இருந்த அதே கண்ணாடி அறையைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தோம்.

எதேச்சையாக அந்த அறையைத் திரும்பிப் பார்த்தேன். பல காவல்துறையினர் இருந்தார்கள். அதில் ஒருவர் ஏதோ குடித்துக் கொண்டிருந்தார். அவர் எங்களைப் பார்த்து இடது கையை விமானம் தரையிலிருந்து மேல்நோக்கி எழும்புவது போல் பாவனை செய்து சிரித்தார்.

நீங்கள் திரும்பிப் போகப் போகிறீர்கள் என்பதைத்தான் அவர் அப்படிச் செய்து காட்டியிருக்கிறார். எனது கடவுச் சீட்டிற்குள்ளிருந்த தாளில் ஆறுமாத தற்காலிக வதிவிட அனுமதியிருந்ததால் அவரின் பாவனை எனக்குள் எந்தப் பதட்டத்தையும் கொண்டு வரவில்லை. தலையைக் குனிந்தபடி நடந்து கொண்டிருந்தேன்.

முன்பு கொண்டு வந்து இறக்கிய அதே வானில் காவல்துறையினர்  எங்களை ஏறச் சொன்னார்கள். வான் ஓடிக் கொண்டிருந்தது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் துரும்பாக அகதிவாழ்வுச் சட்டத்திற்குள் அகப்பட்டு அதன் இழுவைக்குள்  போய்க் கொண்டிருந்தேன்.

வானின் கண்ணாடிக்கூடாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். உயர்ந்த கட்டிடங்கள் சுத்தமான வீதிகள், அழகழகான கடைகள் என பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன. அப்பாவின் முகம், அம்மாவின் முகம், தங்கச்சியின் முகம்;, ஊரிலுள்ளவர்களின் முகங்கள் படித்த பள்ளிக்கூடம், ஓடித்திரிந்த ஒழுங்கை, யாழப்பாண பல்லலைக்கழக வளாகம் என நினைவுக்குள் வந்து கொண்டிருந்தன. கூடவே பத்மகலாவின் முகமும் வந்து நின்றது.

என்னுடைய இன்றைய நிலையினாலும் ஊரின் நினைவினாலும் கண்கள் கசியத் தொடங்கியது. வானின் கண்ணாடியோடு சாய்ந்து கொண்டேன். அகதி முகாம் எப்படியிருக்கும்,  அங்கே தமிழர்கள் இருப்பார்களா அல்லது மற்றைய நாட்டுக்காரர்களும் இருப்பார்களா. எல்லாரையும் ஒரு பெரிய மண்டபம் போன்ற ஒன்றில் தங்க வைப்பார்களா அல்லது தனித்தனி அறைகளில் விடுவார்களா என யோசித்துக் கொண்டிருந்தேன்.

இருபது நிமிடங்கள் வரை ஓடிய வான்  ஒரு அழகிய கட்டிடத்தின் முகப்புக் கேற்றைத் தாண்டிப் போய் நின்றது.
அது நான்கு மாடிக் கட்டிடம். எங்களை இறங்கும்படி காவல்துறையினர் சொன்னார்கள். கட்டிடத்தைப்  பார்த்தபடியே இறங்கினேன். கீழே பல நாட்டுச் சிறுவர்கள் ஒடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் சில சிறுவர்கள் தமிழ்ப்பிள்ளைகள். ஒரு சிறுவன் „எல்லாரும் வாங்க இங்கை ஒரு புதுத்தமிழ் மாமா வருகிறார்“ என்றான். என்னை நோக்கி ஓடிவந்த சிறுவர்கள் காவல்துறையினரைக் கண்டதும் தயங்கி நின்றனர்.

மேல் மாடிகளின்  அரைச் சுவரில் கைகளை வைத்தபடி சிலர் நின்றிருந்தனர். எங்களையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிலர் எங்களை நோக்கி கையசைத்தனர். காவல்துறையினர் எங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கட்டிடத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.
அங்கே ஒரு வரவேற்பு அறையிருந்தது.

எங்களைக் கண்டதும் ஒருவர் தனது அறையை விட்டு வெளியே வந்தார். காவல்துறையினர் அவருக்கு கைலாகு  கொடுத்தனர், அவரிடம் சில தாள்களை  கொடுத்துவிட்டு அவர்கள் விடைபெற்றுச் சென்றுவிட்டனர். காவல்துறையினருடன் பேசியவர் அந்த அகதி முகாமின் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என நினைத்தேன்.


எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி ஒவ்வொருவராக அந்தப் பொறுப்பாளர் அழைத்தார். ஏற்கனவே அந்த கட்டிடத்தில் இருந்த பலர் எங்களைப்  பார்க்க அங்கே   குழுமிவிட்டனர். அவர்களில் தமிழர் பலர் இருந்தனர். ஆபிரிக்க நாட்டவரும் இருந்தனர். என்னை இன்னும் கூப்பிடவில்லை. நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். தமிழர் ஒருவர் கனிவாக பார்த்துக் கொண்டே வந்து என்னருகில் உட்கார்ந்தார், அவரைத் திரும்பிப் பார்த்தேன் அவர்............... (தொடரும் பகுதி 3

பகுதி 3  இலண்டனில் இருந்து திருமதி .நிவேதா உதயராசன் எழுதுகிறார்.