WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

STORY Part 1

இதோ!  நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பெருந்தொடர்கதை  பண்ணாகம் இணையத்தில்

விழுதல் என்பது எழுகையே........
16.5.2014 இல் குதுகல ஆரம்பம்

இதோ!  நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பெருந்தொடர்கதை  பண்ணாகம் இணையத்தில்

விழுதல் என்பது எழுகையே........

தமிழ் இணையத்தள வரலாற்றில் முன்னோடிச் செயல்.புலம்பெயர்  படைப்பாளிகளின் எழுத்துப் பயணம் இது.............

சுவிற்சலாந்து, ஜேர்மனி, கனடா, டென்மார்க்,அவுஸ்திரேலியா, நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கூட்டாக எழுதுகிறார்கள் .
பகுதி 1 எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்துடன் கதை ஆரம்பமாகிறது. .

பகுதி 1  தொடரை  ஏலையா முருகதாசன் ,கல்லாறு சதீஸ் இருவரும் எழுதுகிறார்கள்.

ஏலையா க.முருகதாசன் அவர்கள் .
கவிஞர், நாடகக் கலைஞர், எழுத்தாளர், கட்டுரையாளர்

நாடக எழுத்து, நடிப்பு, தயாரிப்பு: (ஊரில்: நாடகங்கள்: நல்ல தீர்ப்பு, நீங்காத நினைவு, சிதைந்த வாழ்வு, நீரோட்டம் (தெல்லிப்பழை, அம்பனை கலைப்பெருமன்றம், முதல் பரிசாகிய ஏழு தங்கப் பதங்கங்களை வென்றன.
சிறந்த நடிகர்: (நீங்காத நினைவு 1970)
பரிசளித்துக் கௌரவித்தவர்: நடிகமணி திரு.வி.வி. வைரமுத்து அவர்கள்
ஜேர்மனியில்: எழுதி, நடித்து, இயக்கித் தயாரித்த நாடகங்கள்: ஊருக்குப் போவோம், எமது உறவுகள், இன்னுமா உறக்கம், காவலரண்.
ஏலையா  சஞ்சிகை ஆசிரியர்:

அதில் தொடர்கதைகள் „கார்த்திகா“ என்ற புனைபெயரில்: „நெடுஞ்சுவர், எமக்கென்றொரு விதி, போராட்டம், சதுரங்களும் நேர்க்கொடுகளும், தூரிகை,நிர்மாணம், நினைவுகள், பல சிறுகதைகள், கட்டுரைகள்.
குறும்படம்: கனவுகள், வீடியோ நாடகம்: „நான்  ஏன் இங்கிருக்கிறேன்“ (ஜேர்மன் மொழி)
வகித்த பதவி: பொறுப்பாளர், சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் (2004 – 2010 சித்திரை வரை)
எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும்: வெற்றிமணி (ஜேர்மனி), பண்ணாகம் இணையத்தளம் (ஜேர்மனி) கனடா உதயன் பத்திரிகை, அக்கினிக்குஞ்சு இணையத்தளம் (அவுஸ்திரேலியா) காற்றுவெளி (இணைய சஞ்சிகை, இங்கிலாந்து)

பகுதி 1     கலாநிதி திரு. கல்லாறு சதீஸ் அவர்கள் .
கவிஞர், கலைஞர், எழுத்தாளர்
வெளியீடு செய்து நூல்கள்: „பனிப்பாறைகளும் சுடுகின்றன (சிறுகதைத் தொகுப்பு  1999) „சொர்க்கங்களும் தண்டிக்கின்றன“ (சிறுகதைத் தொகுப்பு 2004, „ எதிரிகள்  யார்?“என்ற சிறுகதைiயும் ஜேர்மன் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.

பெற்ற விருதுகளும், பட்டங்களும்.
கௌரவ கலாநிதி விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன், அமெரிககா 2008)
„வாழ்க்கைச் சாதனையாளர்“ விருது ( வழங்கியவர்கள்: கொம்பிளிமெண்ட் ரி மெடிசன் 2009)
கலாநிதி கௌரவ விருது ( வழங்கியவர்கள்: உலகத் தமிழ் பல்கலைக் கழகம், அமெரிககா 06.04. 2014 )
„சிறந்த எழுததாளர்“ அன்னத்தூவி மனதுக்காரர்“( வழங்கியவர்: கவிப்பேரரசு திரு.எம்.வைரமுத்து அவர்கள்)
பங்குபற்றிய இலக்கிய மாநாடு: உலகச செம்மொழி மாநாடு 2010 (சமர்ப்பித்த உரை „கடல்  கடந்த தமிழும்;, தமிழர்களும்)

....
இதோ!  நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த பெருந்தொடர்கதை 


''விழுதல் என்பது எழுகையே.......''.

 உங்கள் பண்ணாகம் இணையத்தில்
                            இதோ கதை தொடங்குகிறது

(முதற் பகுயில் எழுதியவர்கள்-   கல்லாறு சதீஸ்- சுவீஸ், ஏலையா முருகதாசன்- யேர்மனி).
தொடர் 1

பெருந்தொடர்கதை

விழுதல் என்பது எழுகையே ...............

                                லர்களின் வாசம் பிடிக்கவில்லை. குயில்களின் கீதம் பிடிக்கவில்லை. மயில்களின் நடனம் பிடிக்கவில்லை. இப்படி இன்னும் என்னென்ன பிடிக்கவில்லை. பைத்தியம் பிடிக்கவில்லை.

பைத்தியம் பிடிக்கக்கூடாது......

ஆன்மா தவிக்கின்றது. கணங்கள் ஒவ்வொன்றும் அனாதைப் பிணமாவேனோ எனும் அச்ச எண்ணம் என்னைத் திணறச் செய்கின்றது. முகம் வியர்க்கின்றது. அக்கம் பக்கம் பார்த்து மெதுவாகத் துடைத்துக் கொள்கிறேன்.
வந்துவிட்டேன், விமான நிலையத்தின் இறுதி நிமிடங்கள் என்னை உந்தித் தள்ளுகிறது.

இறுதியாக இலங்கைத்தீவின் மடியிலிருந்து என் பாதங்களைத் தூக்கி வைத்து விமானத்தில் ஏறுகின்றேன்.
பிறந்தது முதல் வாழ்ந்துவந்த தேசத்தை விட்டு காற்றை உதைத்து விமானப்பறவை மேலே மேலே எழுந்து மேகங்களைக் கிழிக்கிறான். கண்ணாடியூடாக பூமிப் பந்தைப் பார்க்கிறேன். இது என் கிராமமாக இருக்குமோ, ஆவலில் உற்றுப் பார்க்கின்றேன்.

மீண்டும் என்று இத்தேசம் வருவேனோ..........

என் தேசத்தைப் பிடித்த நோயின் கோரம் என்று தீர்ந்து போகுமோ. போகிறேன், என் தேசம் விட்டு, என் கிராமம் விட்டு, என் உறவுகளை விட்டுப் போகிறேன்.
நான் மட்டும் போகவில்லை. எனக்கு மட்டும் இந்தச் சோகம் இல்லை. என் தேசம் விட்டுப் போக முடிந்த எல்லோரும் இலட்சம் இலட்சமாய்ப் போனார்கள்.

எனக்கு எங்கே போவதென்று தெரியாது. எப்படிப் போவதென்றும் தெரியது.

பலபேர் போகும் திசையில் நானும் போகிறேன். இது பெரும் பயணம். சட்ட ரீதியான பயணம் அல்ல. ஆபத்துக்கள் நிறைந்த பயணம். விமானத்திலிருந்து இன்னுமொரு தேசத்தைப் பார்க்கிறேன். அது அழகாக இருந்திருக்க வேண்டும்.
பச்சைப் புல்வெளிகளும், அழகிய கட்டிடங்களுமாய் மனதை கிளர்ச்சி கொள்ள வைத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு அப்படியேதும் நடக்கவில்லை. எத்தனை பேரிடம் இந்த பயணத்திற்காக பணம் வாங்கினேன். இறுதிப் பிரிவின் போது உறவுகளின் எத்தனை கேள்விகளை எதிர் கொண்டேன்.

இதயம் நொறுங்க விடை பெற்றேன், உயிரைக் காக்க எத்தனை வலிகள்.........

இவ்வாழ்வில் எங்கேனும் ஒரு தேசத்தில் புகலிடம் தேட வேண்டும். சரியாகப் புகலிடம் பெற யார் சொல்லித் தருவார்கள். செய்முறை படித்து செயல் என்பதைவிட செயலூடாகச் செயல். செய்துதான் பார்ப்போமே.

புதிய தேசத்தில் தங்கும் விடுதியில் இன்னும் பலருடன் தங்க வைக்கப்படுகிறேன். ஐரோப்பிய தேசம் நோக்கிப் போக வேண்டும். மீண்டும் ஒரு சோகம் தாக்காத வாழ்வைத் தேட வேண்டும்.

எந்த இனம் எம்மை நாடோடியாக்கியதோ, அந்த இனத்தின் வருகைக்காக காத்திருந்தோம். அவர் வருகையில்தான் அது புரிந்தது. எங்களின் கடவுட்சீட்டுக்கள் வாங்கப்பட்டன. மீண்டும் பல நாட்கள் காத்திருப்பு தொடர்ந்தது.
காதலுக்காக காத்திருத்தல் சுகமாக இருக்கலாம். கடவுட்சீட்டுக்காக காத்திருத்தல் எத்தனை வலி என்பதை அனுபவித்து அறிந்தேன்.

எங்களிடமிருந்த பணங்கள் வாங்கப்பட்டன. எங்களில் பலர் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டோம். நாம் சென்ற பாதையை மௌனத்தின் ஒலியில்தான் பேச முடியும். இன்றும் அந்தக் கணங்களை இதயத்தில்  ஏற்றி நினைத்துப் பார்க்கையில் உடல் ஒரு கணம் அதிர்ந்து துடிக்கும்.

நகரும் வீட்டில் நாங்கள் ஏற்றப்பட்டோம். ஏற்றியவர் ஒரு வெள்ளைக்காரர். நள்ளிரவில் அந்தப் பயணம் தொடங்கியது. அது ஒரு நாட்டின் எல்லையை அந்த நாட்டுப் படைக்கே தெரியாமல் கடந்து நுழைந்து கொள்ள வேண்டிய பயணம்.

அது எனக்குப் புரிந்து போனதால் தூக்கம் கெட்டுப் போனது. சிறு துவாரத்தினூடாக வீதியைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.
இயற்கைக் கடன்களுக்குக்கூட நிறுத்தப்படாது ஓடிய வாகனம் திடீரென்று நிறுத்தப்பட்டது. அது வெறும் ஐந்து நிமிடங்கள்தான். மீண்டும் ஓடுகிறது, ஓடிக் கொண்டேயிருக்கிறது.

நேரம் அதிகாலை ஐந்து மணி. இப்போது எங்கள் அனைவரையும் இறங்குமாறு பணித்தார் அந்த வெள்ளைக்கார்.
என் பாதங்கள் தொட்ட அந்தப் பூமி சுவிற்சலாந்தின் சூரிச் மாநகரம்.

இதில் இருந்து தொடரை எழுதியவர்: ஏலையா க.முருகதாசன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுது. எங்களை இறக்கிவிட்ட இடம்  மூன்று தெருக்கள் சந்திக்கும் ஒரு சந்தியாகவிருந்தது. குளிர் வாட்டி எடுத்தது. ஆங்காங்கே குவியலாக வெள்ளை வெளேர் நிறத்தில் பனிக்குவியல்கள் குவிக்கப்பட்டிருந்தன.
அந்த நேரத்திலும் காரில் போவோர் வருவோர் எங்களை உற்றுப் பார்த்துக் கொண்டே சென்றனர். நடந்து போவோரும் எங்களைப் பார்த்து தங்கள் மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டு போனார்கள். அந்தத் தொனி எங்களை ஏசுவது போல் இருந்தது.

பேருந்துச் சாரதி ஆளுக்கு இருபது பிராங்குகளை தந்துவிட்டு பேருந்தை வேகமாக எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
எங்கள் பத்துப்பேரில் நான் மட்டுமே தமிழன். மற்றவர்கள் வேறுவேறு நாட்டுக்காரகள்;. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தோம். சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்குமே என அங்கலாய்த்தது மனம். என்னோடு நின்ற பாகிஸ்தான் நாட்டுக்காரனுக்கு மட்டும்  ஆங்கிலம் தெரிந்திருந்து. கோப்பி குடித்தால் நன்றாக இருக்குமே என்று நான் ஆங்கிலத்தில் சொன்ன போது அவனும் தலையை ஆட்டினான். நாங்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசியதை மற்றவர்கள் கவனித்தார்கள். என்ன பேசுகிறீர்கள் என்பது போல் எம்மை சைகையால் கேட்டார்கள்.

கோப்பி குடித்தால் குளிருக்கு நல்லது என்று பெருவிரலை வாய்க்கருகில் கொண்டு போய்க் காட்டினேன். அவர்களுக்கும் அது தேவைப்பட்டது. பனி மெல்ல மெல்ல பெய்யத் தொடங்கியது. பார்க்க அழகாகத்தான் இருந்தது. ஆனால் குளிரைத் தாங்க முடியவில்லை.

பேருந்து சாரதி ஒவ்வொருவருக்கும் குளிரைத் தாங்குவதற்காக கோற் கொடுத்திருந்தார். கோற்றை பின்பக்கமாக உயர்த்தி தலையை மூடிக் கொண்டேன்.

நாங்கள் நின்ற இடத்திற்கு எதிரே இருந்த சிறிய கடை திறக்கப்பட்டது. அது கோப்பிக்கடை. குளிரிலிருந்து தப்புவதற்கும் கோப்பி குடிப்பதற்குமாக வேகமாக கடைக்குள் போனோம்.

கடைக்காரர் எங்களை ஏறெடுத்துப் பார்த்தார். அவர் மொழியில் ஏதோ கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்பது எங்களுக்குப் புரியவில்லை. நான் கொபி என ஆங்கிலத்தில் சொன்னேன்.

கோப்பிக்கடையின் வெக்கை இதமாக இருந்தது. கோப்பிக்கடைக்காரர் தனக்கு முன்னாலிருந்த தட்டில் ஒவ்வொரு கோப்பியாக வைக்க ஒவ்வொருவராக எங்களிடமிருந்த சுவிஸ் பணத்தைக் கொடுத்து கோப்பிக் கோப்பையை எடுத்தோம். மிகுதிப் பணத்தை கோப்பிக்கடைக்காரர் தந்தார். எண்ணிப் பார்க்காமல் அப்படியே கோற்றின் பைக்குள் போட்டேன்.

கோப்பியின் சூடு குளிருக்கு அமிர்தமாகவிருந்து. அப்பொழுது ஒருவர் கோப்பிக் கடைக்குள்ளே நுழைந்தார்.

அவர் எனது நிறத்திலிருந்தார். அவர் கோப்பிக்கடைக்காரரிடம் கோப்பி வாங்கிக் குடித்தபடியே என்னையும் பாகிஸ்தான்காரரைக் கண்டதும் மெதுவாக எனக்கருகில் வந்தார். என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் “இந்தியனா ஸ்ரீலங்காவா” எனக் கேட்டார். “ஸ்ரீலங்கா “என்றவுடன் அவர் முகத்தில் ஒரு ஆர்வம். நான் தமிழன் என்பதைப் புரிந்து கொண்ட அவர் „ நானும் தமிழன்தான் „ என்றார்.

எனக்குச் சந்தோசமாகவிருந்தது. அப்பொழுது, கோப்பிக்கடைக்காரர் அவரிடம் ஏதோ கேட்டான். அதற்கு அவர் பதில் சொன்னார். என்ன கேட்டவர் என்றேன். “நீங்கள் எனக்குச் சொந்தமா, சந்திக்கவா வந்தீர்கள் என்று கேட்கிறார் நான் இல்லையென்று சொல்லிவிட்டேன்” என்றார்;.

கோப்பிக் கடைக்கார் மெதுவாக உள்ளே போவதைக் கவனித்தேன். உள்ளே அவர் யாருடனோ பேசுவது போல் கேட்டது. வந்தவருக்கு விளங்கிவிட்டது. அவர் மெதுவாகச் சொன்னார் “கோப்பிக்கடைக்காரன் காவல்துறையோடு தொலைபேசியில் பேசுகிறான். உங்கள் எல்லாரையும் பற்றிச் சொல்கிறான், என்னைப் பற்றியும் சொல்கிறான். நான் கெதியிலை போறன். நான் இங்கை நின்றால் என்னையும் அவர்கள் விசாரிப்பார்கள், பெரிய பிரச்சனையாகிவிடு;ம் பயப்பட வேண்டாம்” எனச் சொல்லியவாறே அவர் வேகமாக கடையை விட்டுப் போய்விடுகிறார்.

காவல்துறையினர் என்றதும் பயம் பிடித்துக் கொண்டது. காவல்துறையினர் வரப்போகிறார்கள் என்பதை நான் மற்றவர்களுக்குச் சொல்லவில்லை. ஆனால் உள்ளுக்குள்ளை பயம் ஆட்டிப் படைத்தது. என்ன நடக்கப் போகுது எது நடக்கப் போகுது என்று தெரியவில்லை. எங்களை கைது செய்து உடனடியாகவே அவரவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுவார்களோ என மனம் பதைபதைத்து.அப்படி அனுப்பி விட்டார்களானால் அங்கு என்ன நடக்குமோ………

மெதுவாக கடையை விட்டு நான் வெளியேற எல்லோரும் வெளியே வந்தார்கள். சந்தியை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். கோப்பிக்கடைக்குள் வந்து என்னோடு பேசியவர் உங்கள் நாட்டுக்காரரா என மற்றவர்கள் கேட்டார்கள். நான் “இல்லையென்று” பொய் சொன்னேன்.

என்னோடு நிற்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை என்னால் அறிய முடியவில்லை. உண்மையச் சொல்லப் போய் அதனால் பிரச்சினை ஏதாவது வந்துவிட்டால் என்ற பயம் என்னைப் பொய் சொல்ல வைத்தது.

மனதுக்குள் அழுதேன்”என்ன வாழ்க்கையடா இது, நாதியற்று அனாதைகளா கையறு நிலையில் குளிரில் நடுச்சந்தியில் நிற்கிறேனே” என நினைத்த போது  கண்களை கண்ணீர் அடைத்தது.

குளிரினால் மூக்கிலிருந்து சளியும் நீருமாக எனது மீசையில் வளிந்து உறைந்தது. எல்லோருக்குமே எனது நிலைதான். சிலர் தும்மத் தொடங்கினார்கள். காற்சட்டைப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை எடுத்து மீசையில் உறைந்து நின்ற சளியையும் நீரையும் துடைத்தேன். துடைக்கத் துடைக்க அடிக்கடி மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. எங்கே போய் எங்களை அகதியாக பதிவதென்று தெரியவில்லை. யாரையாவது கேட்கலாம் என்றால் யாரைக் கேட்பது என்றும் தெரியவில்லை.

கோப்பிக் கடையில் சந்தித்தவரைக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் கோப்பிக் கடைக்காரனுக்கு பயந்து வேகமாக போய்விட்டார். ஒரு சுவிஸ் நாட்டுக்கார் எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்கலாம் என நினைத்து அவருக்கருகில் போனேன். அவர் என்னைக் கண்டதும் தனது கையை உதறிக் காட்டிவிட்டு வீதியின் மறுபக்கம் போய்விட்டார். நட்டநடுச் சந்தியின் ஓரத்தில் ஒரு பிச்சைக்காறர்களாக நாங்கள் நின்றோம்.

கையில் கட்டியிருந்த மணிக்கூட்டைப் பார்த்தேன் ஏழு மணியாகிக் கொண்டிருந்தது. அங்குமிங்குமாக நடப்பதிலும் கால்களை உதறுவதுமாகவும் உள்ளங் கைகளை தேய்ப்பதுமாக இருக்கையில் நீல விளக்கு சுழன்று சுழன்று எரிய ஒருவித சத்தத்துடன் ஒரு கார் எம்மை நோக்கி வந்து கொண்டிருந்து. அதற்குப் பின்னால் ஒரு வானும் வந்து கொண்டிருந்தது.

எங்களுக்கருகில் வந்து நின்ற காரிலிருந்தும் வானிலிருந்தும் கடும்நீல நிற உடையில் நான்கு பேர் கம்பீரமாக தடதடவென இறங்கினார்கள். காரிலும் வானிலும் பொலிஸ் என எழுதப்பட்டிருந்தது.

வந்தவர்களில் ஒரு காவல்துறைப் பெண் கோப்பிக்கடையை நோக்கிப் போனாள். மற்றைய மூன்று பேரும் எம்மைச் சூழ நின்றபடி பாஸ்போர்ட் என்றனர். எங்களிடம் இருந்த கடவுட்சீட்டுக்களை அவர்களிடம் கொடுத்தோம். கொடுக்கும் போது கை நடுங்கியது. 

தொடரும்......பகுதி 2 இல்  எழுதுபவர் ஏலையா முருகதாசன்