WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

பலநாடுகளைச் சேர்ந்த பிரபலமான எழுத்தாளர்கள் தொடராக எழுதும் பெருந் தொடர்
''விழுதல் என்பது.......''

விழுதல் என்பது...... பகுதி  6 -7


பகுதி 7 ஆசிரியர் அறிமுகம்


இயற்பெயர் திரு.திருச்செல்வம் திலீபன்


புனைபெயர் - நோர்வே நக்கீரன்


சுமார் 13-15 கையெழுத்துப்பத்திரிகை அரசடி சனசமூகநிலையம்

ஈழநாடு வீரகேசரி இலங்கை ஒரிபரப்புக்கூட்டுத்தாபனம் கவிதை சிறுகதை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கவிதை சிறுகதை இசையும் கதையும் அறிவிப்பாளர்.

கலைக்கோவில் நாடகமன்றம் வடலியடைப்பு- நடிகன்

கலையொளி நாடகமன்றம் இணுவில் - நடிகன்

புலத்தில்

தமிழ்நாதம் வானொலி:- அறிவிப்பாளம்;நிகழ்ச்சித்தயாரிப்பாளர் (முக்கிய நிகழ்ச்சிகள்- இலக்கியத் தென்றல் (பாடல்களில் கவிநயம்; இலக்கியநயம்;இசையும் கதையும்;சிறுகதை; கவிதை இன்னும்)

குழந்தைகளுக்கான சிரிக்கும் சிட்டுகள்

தேன்தமிழ்ஓசை சிலநிகழ்ச்சிகள் 

தமிழ்சங்கம்; நோர்வே இந்துக்கலாச்சாரமன்றம்;தமிழ்நோர்வே இணைவுகூடம்;- நாடகங்கள்-எழுத்து; பாடல்; நெறியாளுகை; நடிப்பு.

4கவிதைத் தொகுப்புகள்

1)கவிமலர்கள்

2)துப்பாக்கியில் துளிர்விடும் தேசம்

3)நள்ளிரவுச் சூரியன்

4)கவிமணிகள்

என்படைப்புக்கள் வெளியான தளங்கள். ஈழநாடு வீரகேசரி  இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஒன்று இரண்டு;துருவக்குரல்;நம்நாடு; உதயன் யாழ்ப்பாணம்; உதயன் கனடா;சுவடுகள்;முத்துக்கமலம்;சர்வதேசத்தமிழர்;ஐரோப்பியநேரம் வானொலி;தமிழ்நாதம்;தேன்தமிழ்ஓசை;நோர்வே தமிழ்சங்கம்;துருவக்குரல்; புதியபாதை; தளிர்;காற்றுவெளி;அக்கினிச்குஞ்சுகள்; தேசம்நெட்; இனியொரு

பரிசுகள்: தங்கப்பதக்கம் உதயன்

இலக்கியப்பணிக்கான சிறப்புப் பரிசு நோர்வே தமிழ்சங்கம்
 தொடர்கிறது பகுதி 6,  எழுதியவர்  திரு.நோர்வே நக்கீரா


காதலில் விதைபட்டான் 

கண்ணீரில் அடைபட்டான்

சாதலின் காதல்தனில்

சந்தோசமாய் பிடிபட்டான்

கண்ணினிலே கண்குத்திக் கண்மணிகள் கரைகையிலே

கண்ணீரே காதல் சொல்லும் காரிகைமனம் என்னவென்று

பெண்ணோடு பிறந்த விந்தப் பேதமைகள் மறைகையிலே

மனதோடு காதல் வந்து மார்பினிலே சாய்ந்து கொள்ளும்.காதல் கொள் மனத்தால் கண்கள் கண்ணீர் சுமந்தன. கண்ணீர் வென்னீராகி நெஞ்சில் விழுந்து, நனைத்து பின் நெகிழந்;து எரிந்தது மனம். காதலின் சூடு சுமகானதுதான். பிரிவின் துயர் இதமாகுமா? வெற்றிபெற்றுக் குடும்பமாகி காதலில் தோல்வியடைந்த காதலைவிட காதல்பிரிவினால் உணர்வுகளில் வாழும் காதலின் சுகத்தை, இன்பத்தை இனிமையை அவன் அனுபவிக்கத் தொடங்கிவிட்டான். 


ஓம்.....தொடுகையற்ற தமிழ்காதல் உணர்வுகளில் தொடுகையால் உயிர்க்கும், உள்ளமதில் தளிர்க்கும், மனமதில் தவிக்கும், உயிரையே எடுக்கும். சுடும் நினைவுகள் சுகம் தந்தன. உடலால் ஒன்றிணைந்து உறவுகாணும் காதல் சோடிகளிடையே தனிமையில் தன்னவளின் நினைவுகளுடன் இனிமையாக சுகந்தமாக சுகம்கண்டான் சீலன். கற்பனையில் காணும் காதலின் சுகம் கண்ணெதிரே கிடைப்பதில்லை. தன்காதலி கலாவை உள்ளத்தால் உண்டு கொண்டிருந்தான். மனமெனும் மாளிகையின் உப்பரிகையில் முகர்ந்து கொண்டிருந்தான். நிமிடங்கள் நீறாயின. கணங்கள் கரைந்தோடின.


தொடர்ந்தும் கலாவின் நினைவுகள் அவனைக் கலைத்துக் கொண்டே இருந்தது. கடைசிநாள்..... கலாவைக் கடசியாகக் கண்ணுற்ற நாள்..... காதல் கண்ணீராய் கசிந்தொழுகிய அந்நாள் அவனை வதைத்துக் கொண்டே இருக்கிறது. கண்ணீரால் அவள் விடைதந்த காட்சி பசுமரத்தாணியாய்;, பாறைகளில் சிற்பமாய் உணர்வின் உயிராய் நின்று அவனை உருக்கிக் கொண்டிருந்தது.


உதிரமூட்டி வளர்த்த அந்த உன்னதத்தாயின் உணர்வுகளும் அலைமோதின. உலக வரைபடத்தில் எல்லைக் கோடுகள் வரையப்பட்ட தாயின் முகம், சுருக்கம் அவள் வாழ்வையே சுருக்கியுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியது. சிறைக்குள் பிடிபட்ட சிட்டுக்குருவியான தன்மகனுக்காய் தீய்ந்துபோன காய்ந்த உடல், வேகுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. குளிவிழுந்த கண்களில் பழிவிழுந்த வாழ்வு. மகனுக்காகவே உயிர் சுமக்கும் உடல்கூடு. அவ்வெலும்புக் கூடுகளுக்குள் என்னை விட்டுவிடு விட்டுவிடு என லப் டப் லப் டப் என்று தட்டிக் கொண்டிருக்கும் இதயம். அங்கே ஒற்றையரசனாய் வீற்றிருப்பான் மகன். இதுவே அவன்தாய்.  


விமானத்தில் அவன் வானமேறும்போது கண்கள் கண்ணீரை மட்டுமல்ல காட்சிகளையும் சுமந்து அவன் இதயத்துள் எங்கே ஒரு மூலையில் பதுக்கி வைத்துக்கொண்டது. உணர்வுகளை மீட்டு அசைபோட்டுக் கொள்கிறான்.


விமானம் வானில் உயர உயர அவனை அறியாமலே மனதில் ஒரு ஏக்கம், இனம்புரியாத தாக்கம். அது என்ன என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஏதோ ஒன்றை இழப்பது போன்ற உணர்வு. காலன் ஓய்வின்றி ஓவட்டைம் செய்யும் தேசத்தில் இவன் இழப்பதற்கு என்ன இருக்கிறது? தன்தாயையும் காதலி கலாவையும் தன்நெஞ்சுக் கூட்டில் பூட்டியபடி பயணம் செய்யும் இவனுக்கு இன்னுமொரு இனந்தெரியா ஏக்கம் அவனை ஆட்டிகொண்டுதான் இருந்தது. மண்.. மண்....மண்.


உண்டு கழித்த மண். தவழ்ந்து, உண்று, உருண்டு, புரண்ட மண்ணைப்பிரிகிறோம் என்ற உணர்வும் அவனை வாட்டத்தொடங்கியது. அவனை வாழவைக்காத மண்ணை எண்ணி எண்ணங்களில் வாழத்தொடங்குகிறான். குனிந்து பார்த்தான் தன்தாய்திருநாட்டை. அழகாக கடலில் ஒற்றைக் கண்ணாக பச்சைப்பசேல்  என்று அலைகடல் தாலாட்ட படுத்துக் கிடக்கிறாள்.  அமைதியாக, நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் ஈழத்தாய். கொதிக்கும் எரிமலைகளையும், கொப்பளிக்கும் பூகம்பங்களையும், கொந்தளிக்கும் சுனாமிகளையும் தன்னில் அடக்கிக் கொண்டு எப்படி அவளால் அமைதிக, நிம்மதியாய்த் தூங்க முடிகிறது. தன்னையறியாலே தன்கைகளை அசைத்து விடைபெற்றுக்கொள்கிறான். விமானம் முகில்களுக்குள் மூழ்கி முக்கிக் கொள்கிறது.


மீண்டும் தான் அமர்ந்திருந்த ப+ங்காவுக்கே நினைவுகள் நகர்ந்து வந்தன. வெள்ளைக்காரப் பழக்கவளக்கத்தில் கொள்ளைபோன ஒரு இளம் தமிழ்பெண்ணும் அப்பூங்காவில் தன் காதலனுடன் வாயினுள் வாய்வைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டிருந்தனர்;. அவன் அருகில் இருக்கிறான் என்பதைப்பற்றி அவள் அலட்டிக்கொள்ளவேயில்லை. 


அலைபாயும் எண்ணங்கள் அவனுள் ஆர்ப்பரித்தன. இத்தமிழ் பெண்ணைப்பார்த்த கணம் அவனுக்கு தன்னுடன் ஒஸ்றியாவில் தங்கியிருந்த உடன்பிறவா ஒரு சகோதரியின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. கவலைகளின் ரேகைகள் முகத்தில் கோடிட்டன. எண்ணங்கள் நெஞ்சில் பீறிட்டன.


ஒஸ்றியாவில் வந்து இறங்கிய சீலனை முகவர் ஒருதனிப்பட்ட வீட்டில் ஒருபெரிய அறைக்குள் பலருடன் இருக்க விட்டார். ஏற்கனவே பலநாட்டவர்கள் இருந்தபோதும் அவன் கண்ணில்பட்டது ஒரு தமிழ்பெண்பிள்ளை மட்டும்தான். பேச்சுக்குக் கூட ஒரு தமிழன் கிடையாது. அந்த அறைக்குள் நுழையும் போது அவளது கண்கள் அவனை விழுங்கிக் கொண்டது. பேசுவதற்கு ஒரு துணை அவசியம் இவர்களுக்குத் தேவைப்பட்டது. புன்னகைத்தபடி அவளருகில் சென்றான்.வெட்கத்துடன் மௌனமாய் கடைக்கண்ணால் அவனைப் பார்த்துச் சிரித்தாள். ஏனிந்த நாணம்?; ஏனிந்த வெட்கம்? ஆண்களுடன் பழக்கம் இல்லாதவள் போலும். 


ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி படுக்கைகளை தாறுமாறாகக் கிடந்தன. ஆடு மாடுகளை பட்டி கட்டி விட்டதுபோல் ஒரு அறை. குதிரைத் தொழுவம்போல் வியர்வை நாற்றம். மனிதவாடைகள் இத்தனையையும் உள்வாங்கியும் அசையாது இயங்கிக் கொண்டிருக்கும் சுவாசப்பைகள். உடைமாற்றக் கூட இடமில்லை. இருக்கை, உடுக்கை, படுக்கை எல்லாமே அங்குதான். அவள் அருகில் இருந்த கதிரையில் சென்று அமர்ந்தபடி


”நீங்கள் தமிழா?”

”ஓம் நீங்கள்”

”நானும் தமிழ்தான். நீங்கள் எப்போ எங்கிருந்து வந்தீர்கள்”

”என்னை ஏயென்சீ இரஸ்சியாவில் இறக்கி பின் இன்னுமொரு நாட்டுக்கு காரில் கொண்டுவந்து மீண்டும் விமானம் எடுத்து இங்கே கொண்டு வந்து விட்டார்கள். ஒரு கிழமையாக நான் இங்குதான் இருக்கிறேன்.”

”உங்களுடன் வேறுயாரும் வரவில்லையா”

”வந்தார்களே. சிலரை அங்கேயே இரஸ்சியாவிலும் மற்ற நாட்டில் சிலரையும் விட்டு விட்டு என்னை மட்டும் இங்கு கூட்டி வந்தார்கள்» 

”நீங்கள் தனியத் துணிந்து வந்துவிட்டீர்களே!”

”என்ன செய்வது வேறுவழியில்லையே”

”ஏன்....” ஆவலுடன் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

” இல்லை என்னை வந்து இந்தியாவில் திருமணம் எழுதியவர் நோர்வேயில் இருக்கிறார். அவருக்கு இன்னமும் நிரந்தர வதிவிட வசதி கிட்டாததால் என்னைக் கள்ளமாக ஏயென்சி மூலம் காசுகட்டிக் கூப்பிடுகிறார்”

”அப்ப நீங்கள் திருமணம் செய்வதற்காக நோர்வே போகிறீர்கள்”

”ஆமண்ணா.... நீங்கள்...?” பதிலுக்காகக் காத்திருந்தாள்.

”எனக்கென்றொரு நாடில்லை. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்திருக்கிறேன் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணதோடு”

”அப்ப நீங்கள்......போராளியா”

”போராளிதான் போராடாத போராளி”

”அது எப்படி அண்ணா”

அவன் தன்கதையை விபரமாக விளக்கிக் கூறினான். 


மௌனம் அவர்களை விழுங்கிக் கொள்கிறது. வேதனைகளை ஐPரணித்துக் கொள்ள மௌனம் தேவைப்பட்டது. மெல்ல மௌனத்தைக் கலைத்தான் சீலன்.


”உங்களின் பெயர்”

”சாந்தி”

”எப்போ உங்களை இங்கிருந்து அழைத்துப் போவார்கள். அல்லது உங்களின் அவர் இங்கே வந்து அழைத்துப்போவாரா”

”இல்லை ஏயென்சிதான் முழுக்கச் செய்வார்கள் எல்லாம் அவர் ஒழுங்கு செய்திருக்கிறார்”

”நீங்கள் காதல் திருமணமா அல்லது பேசிச்செய்ததா”

”இரண்டுந்தான் அண்ணா........(மௌனம்)...முதலிலை காதலித்தோம் பின் பெற்றோரின் சம்மதத்துடன்தான் பதிவுத்திருமணம் செய்தோம்”

”அப்ப சீதனம் இல்லாமல் சரிக்கட்டிப்போட்டியள் என்று நினைக்கிறன்”

”என்ன பகிடியா விடுகிறியள். சுளையாய் இருபதுலட்சம் கொடுத்தனாங்கள். அதோடை வீடு வளவு நகை எண்டு.... என்னை பெத்தவர்கள் சும்மா அனுப்பேல்லை.” முகத்தில் சிறுகடுப்பு.


காதலித்துச் செய்தாலும் சீதனம். அகதிக்குக் கூடச்சீதனம். எந்த நாட்டில் அகதி என்பதைப் பொறுத்து சீதனம் ஏறும் இறங்கும். அதிலும் பி ஆர் (நிந்தரவதிவிடம்) பெற்றவர்களுக்கு பத்துமடங்கு கூட. கொடுப்பதற்கு நீ நான் என்று போட்டிகளும் வேறு. பறந்த பறந்து படித்துப் பட்டம் பெற்றாலும் பட்டம் விடுவது அகதிகள்தான். அகதிக்குத் தானே சீதன அந்தஸ்து அதிகமாக இருக்;கிறது. 


இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன்தான் தனது ஏயென்ட் என்பதை சாந்தி சுட்டிக்காட்டினாள். அவன் சீலனை அழைத்துவந்த முகவன் அல்ல. இவர்கள் ஒரு குழுக்களாகச் செயற்படுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.


”உங்களுக்கு அவனைத் தெரியுமா? எந்த நாட்டவன்?”

”அவர்; இலங்கையைச் சேர்ந்தவர் பெயர் கனீபா.இவர்கள் தமிழ் சிங்களப் பக்கங்களின் தொடர்புகளைக் கொண்டவர்கள். நன்றாக சிங்களம் தமிழ் இரண்டும் பேசுவான். என்னை எனக்குப்பக்கத்தில் இருந்து இடித்து இடித்துப் பேசிக் கொண்டு வந்தான்”

”இதை உங்களின் அவரிடம் சொன்னீர்களா?”

”இல்லை எனது மொபில் பாஸ்போட் எல்லாத்தையும் வாங்கி வைத்திருக்கிறான்.”

”இதைப் பார்க்கப்போனால் பலர் கூட்டாகச் சேர்ந்துதான் கடத்தல்களை நடத்துகிறார்கள். என்னை அழைத்து வந்தவர்கள் இருவர் ஒருவர் பெயர் சந்திரன் மற்றவர் பெயர் என்னை அப்புகாமி என்று ஒரு சிங்களப ;பெயரில்தான் அழைத்துவந்தார்கள்;. அது உண்மையில் அப்புகாமி என்பவரின் பாஸ்போட்டுத்தான் அதில் எனது படம் ஒட்டப்பட்டிருந்தது.”


இவர்கள் பேசிப் கொண்டிருப்பது சாந்தியின் ஏயென்ட்டுக்குப் பிடிக்கவில்லையோ என்னவோ அவர்களை நோக்கி வந்தான்.  


தொடர் தொடரும் 7 இல் விழுதல் என்பது…….--------------------------------------------------------------------

திரு.நோர்வே நக்கீரன் எழுதிய தொடர் 6 இன் மிகுதி  தொடர் 7 ஆக தொடர்கிறது 


பகுதி - 7


”சாந்தி உனது சாமான்களை ஆயத்தம் செய் நாளை நாங்கள் புறப்படவேண்டும். இப்ப உடன் எனது அறைக்கு வா. பாஸ்போட் பற்றிக் கதைக்கவேணும்.”


தன் காதலனை, எதிர்ககலக் கணவனை கனவுகளை அடையப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் புள்ளிமான் போல் துள்ளி ஒடினாள் சாந்தி. அவளைப் பார்த்து இரசித்தவண்ணமே விறைத்துப்போய் நின்றான் சீலன்


காதலின் வலுவையும் சக்தியையும் அறிந்தவன் அவன். அழைத்துச் செல்லப்பட்ட சாந்தி ஒரு அறையில் அமரவைக்கப்பட்டாள். 


”சாந்தி கோப்பி ரீ சோடா என்ன வேண்டும்”

”எனக்கு ஒன்றும் வேண்டாம் என்னை அவருடன் சேர்ப்பித்துவிடுங்கள் அது போதும்”

”நாங்கள்  என்ன மாட்டம் என்றா சொல்லுறம். அதுக்குக் கால நேரம் எல்லாம் கூடித்தானே வரவேணும். அதோடை உன்ரை அவர் முழுக்காசும் கட்டேல்லை” இப்படியே கதைத்தபடி சென்று கதவைத் உள்ளே பூட்டித் துறப்பை சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்கிறான்.

”ஏனண்ணா கதவைப் பூட்டுகிறியள். இவர் சொன்னவர்தானே நான் நோர்வேக்கு வந்து சேர்ந்தவுடன் மீதி அரைவாசிக் காசையும் தருவதாக”

”அதிலை எனக்கு நம்பிக்கை இல்லை டியர்” என்றபடி அவளின் கைகளை விரல்களால் வருடினான். 

”என்னடா பண்ணுறாய் பன்றி. நான் கல்யாணம் கட்டப்போகிறவள். நீ என்னை பாஸ்போட் பற்றிக் கதைக்க என்றே கூட்டிவந்தாய். நீ என்னை அந்த மாதிரிப் பெண் என்று எண்ணிவிடாதே. நான் நெருப்பு எட்ட நில்லடா”

”நீ நெருப்பாரு கொதி கூத்தாடு இங்கே யாரும் வரப்போறதில்லை. இது எனது சாம்ராட்சியம். நான் உன்னை கொன்று போட்டாலும் கேட்பதற்கு நாதியில்லை”

”தயவுசெய்து என்னை விட்டிவிடு நீ பெண் சகோதரங்களுடன் பிறக்க வில்லையா?”

”பாவம் பார்த்தால் நாம் எதையும் சாப்பிட ஏலாது பிள்ளை. கத்தரிக்காய் வெண்டிக்காயுடன் வயிறு கழுவவேண்டியதுதான். நீ பெரிதாக ஒன்றுமே செய்யவேண்டாம் மிரண்டு பிடிக்காமல் இருந்தால்சரி”

”டேய் நான் பூசைக்காக எழுத்துவரப்பட்ட புஸ்பமடா என்னை விட்டுவிடு”

”நான் இல்லை என்று சொல்லவில்லையே. பூசையை இங்கேயே முடி என்றுதான் சொல்கிறேன். இங்கே நடந்தது யாருக்கும் தெரியாது உன்னையும் என்னையும் தவிர. கணவனுடன் போய் கம் என்று சத்தம் சந்தடி இல்லாமல் யாலியாக வாழ். யார் வேண்டாம் என்றார்?”

”நான் என்னவருக்காக எத்தனை காலமாகத் குண்டு மழைக்குள் தவம் கிடந்தேன் தெரியுமா?”

”மயிலே மயிலே என்றால் இறகு போடாது. அதைப் பிடுங்கித்தான் எடுக்க வேணும் என்றால் எடுத்துத்தான் ஆகணும்”.


எட்டி அவள் கையைப் பிடித்தான்.அறையைச்சுற்றி ஓடத் தொடங்கிளாள். மான்வேட்டை ஆரம்பமாகிவிட்டது. ஆண்டவன் கொடுத்து ஆயுதங்களான பல் நகங்களை பயன்படுத்தனாள். பீதி அச்சம் புதிய இடம் மொழி தெரியாத் தேசம் உதவியற்ற கையறுநிலை, இருப்பினும் இறுதிவரை போராடினாள். இறுதியில் மயங்கிப்போனாள்.


பலமணி நேரமாகியும்; போனவளைக் காணவில்லை. சாந்திக்கு என்ன நடந்திருக்கும் என்ற ஏக்கத்துடன் காத்திருந்தான் சீலன். மனம் கொள்ளவில்லை எழுந்து சென்று அவள் உள்நுழைந்த அறையைத் தட்டினாள். நிசப்தம் ...... நிசப்தம். எங்கு போயிருப்பாள் என்ற எண்ணத்துடன் மீண்டும் வரமுயலும் போது கிளாஸ் ஒன்று விழுந்து நொருங்கிய சத்தம் கேட்டு நின்று நிதானித்தான். 


‘ஓ’ யாரோ உள்ளே இருக்கிறார்கள்;’ அமைதியாக நின்று நிதானித்து மீண்டும் கதவைத் தட்டினான். அங்கே மீண்டும் அமைதி


அமைதி இழந்தவனாக தன் இருக்கைக்கு வந்தான். அப்போது பிற்பகல் மூன்று மணி. கதவு திறபடும் சத்தம் அவனைத் திரும்பச் செய்தது. கலைந்த கூந்தலும், கண்ணீர் வடித்த முகமும் கசங்கிய உடையுடன் உடலிலே சக்தி இல்லாதவளாக தள்ளாடியபடி பொதுவறையில் சீலன் இருந்த அறையினுள் நுழைகிறாள். அங்கிருந்த அனைவரும் அவளையே உற்று நோக்கினர். சீலனைக் கண்டதும் 

”அண்ணா அண்ணா என்னைக் கெடுத்துப்போட்டான் அண்ணா” 

என்றபடி ஓடிவந்தவள் அவனின் தோழில் சாய்ந்ததும் மயங்கிப்போனாள். அனைவரும் அவனையே பார்த்தபடி தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் கேள்விகளை கணைகளாக எறிந்தனர். அங்கிருந்த வேறுநாட்டுப் பெண்கள் மட்டும் நிலமையைப் புரிந்து கொண்டார்;கள். எழுந்து வந்து உதவ முயன்றும் மொழி அவர்களை விலக்கி வைத்தது. 


சீலன் சமையலறைக்குள் சென்று தண்ணீர் எடுத்துவந்து முகத்தில் தெளித்து குடிக்கவும் கொடுத்தான். அவள் மேற்கொண்ட எதுவுமே பேசவில்லை. அதற்கு அவளிடம் சக்தியில்லை. மெதுவாக அவளை வாங்கொன்றில் படுக்கவைத்துவிட்டு விசிறிக்கொண்டிருந்தான் சீலன். உணவு வந்தது ஊட்டிவிட்டான். தென்பு பெற்றவள் நடந்ததை விபரித்தாள்.


”இனி நான் வாழ்ந்து பிரயோசனமில்லை. யாருக்காக, எவருக்காக, எதற்காக புதிய புஸ்பமாக இத்தனை தவங்களின் பின்பு இங்கே வந்தேனோ அது பறிக்கப்பட்ட பின் வாழ்ந்து என்ன பிரயோசனம் அண்ணா”

”அப்படிச் சொல்லாதை அம்மா. இவ்வளவு பணத்தைக் கட்டிவிட்டு உனக்காகக் காத்திருக்கும் உன்னவரை நீ போய் அடையத்தான் வேண்டும். இது நீ விரும்பித் தெரிந்து செய்த தவறில்லை. விபத்து...ஒரு விபத்து. இதை ஒரு கனவாக மறந்து நோர்வேக்குப் போ. உன்னை அனுப்பிவிட்டு மடியிலை நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பார்கள் உன் பெற்றோர். தயவு செய்து இப்படிப் பேசாதே.”

”இந்த நிலையில் அவருடன் போய் வாழச் சொல்கிறீர்களா? இது பாவம் இல்லையா? நான் செய்யும் துரோகமில்லையா?”


குற்றம் செய்தது யாரோ தண்டனை அனுபவிப்பது இவளா? அனுபவித்தது யாரோ அழுவது, அவலப்படுவது இவளா? படைப்பில் கூட இத்தனை முரண்பாடுகளா? தண்டிக்கப்படவேண்டியவன் பிரமனே. நீதியற்ற சமநிலையற்ற படைப்பு இதைப் போலவே சமூகமும். பெண்களுக்கு உலகில் எங்கே விடுதலை உண்டு? இயற்கை கூடப் பெண்ணுக்குத் தண்டனை கொடுக்கிறதே தவிர எங்கே விடுதலை கொடுதத்து. வெறுத்துப்போகிறான் சீலன்.


”அண்ணா! மனச்சாட்சியைக் கொன்று விட்டு வாழச் சொல்கிறீர்களா? ஒவ்வொரு முறையும் அவர் என்னருகில் வரும் போது இந்தக ;காடையனின் நினைவுதானே வரும். நான் அப்பவும் சொன்னனான் நான் வேறு யாரோடையும் வெளிநாடு வரமாட்டன் எண்டு. கேட்டாரோ.... இல்லையே அண்ணா.”


சீலனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பற்களை நறுநறு என்று கடித்துக் கொண்டான். வேகமாக எழுந்தான்

”தமிழ்பேசும் ஒருநாய் பன்றி இப்படி நடந்து கொண்டானே. பொறுக்கி உன்னை விடமாட்டேனடா” என்றபடி சமையல் அறையில் கிடந்த பொல்லென்றை தூக்க ஓடினான். சாந்தி அவனை இழுத்து மறித்தாள்.


”அண்ணா எனக்காக நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். நீங்கள் ஊரில் பட்ட அவலம் போதும். பெரும்பணத்தைப் புரட்டி கடன் வாங்கித் தந்த காத்துக் கொண்டிருப்பார் உங்கள் அம்மா. எனது பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன். இவன் தமிழனே இல்லை. இவனைவிட சிங்ளவர்;கள் எவ்வளவோ மேல். கூடவிருந்து குழிபறிக்கும் கொச்சைக் கூட்டம் இருக்கும் வரை எமக்கு மனித இனத்துக்கே விடுதலை கிடையாது அண்ணா”


தான் பாவிக்கப்பட்ட பொருள் போல் தன்னை உணர்ந்தாள், வெட்கப்பட்டாள், வேதனைப்பட்டாள், ஆத்திரப்பட்டாள், பெண் பேதையால் என்னதான் செய்வாள்.


அவள் கூறியதில் நியாயம் இருந்தது. இருப்பினும் மனச்சாட்சி, இனவுணர்வு மனிதநேயம் சீலனுள் எழுந்து சம்காரம் செய்தது. கடமை அவனை முடமையாக்கியது. பாசம் உணர்வுக்குப் பாடைகட்டியது. காதல் அவனைக் கட்டிப்போட்டது


”தங்கைச்சி நீ வேறு எந்தத்தப்பான முடிவுக்கும் வரமாட்டாயே”

”இல்லையண்ணா. ஆனாலும் அவனை என்னால் மன்னிக்க முடியாது. ஏதாவது அவனுக்குச் செய்யவேணும். நான் தமிழிச்சி என்பதை காட்டவேண்டும். ஓர்; மயிர் நீர்த்தாலும் உயிர்வாழாது இக்கவரிமான்”

”தங்கைச்சி இப்பதான் சொன்னாய் ஒன்று செய்யமாட்டேன் என்று உயிர் நீர்ப்பதைப் பற்றிப் பேசுகிறாய் பயமாக இருக்கிறது சகோதரி.”

”அண்ணை ஒன்றுக்கும் பயப்படாதையுங்கோ. பயந்தால் வெளிநாடு வெளிக்கிடக் கூடாது. வெளிக்கிட்டா எல்லாத்துக்கும் தயாராக இருக்கு வேணும். நான் ரெடி அண்ணை”


வாய்க்கு வாய் அண்ணை அண்ணை என்றவள் அழுகையை நிறுத்திக் கொண்டு எதற்கோ, எதற்கும் தயாராகிவிட்டாள். அவளின் துணிவில் அவள் தற்கொலை செய்யமாட்டாள் என்பது மட்டும் உறுதியாகி விட்டது. 


”தங்கைச்சி! இதையெல்லாம் பெரிசு படுத்தாது ஒரு கனவுபோல் மறந்து எதிர்காலத்தை கணவனுடன் களிப்பாக மகிழ்ச்சியா நடத்து. இதை உன் கணவர் கூட அறியமாட்டார். நீ சொல்லாதவரை”

”பெண்ணாக இருந்தால் தான் என் நிலைபற்றிப் புரியமுடியும். அண்ணை என்னைத் துரோகம் செய்யச் சொல்கிறீர்களா? எனக்கும் மனச்சாட்சி இருக்கண்ணை. நான் கற்பிழந்தவள். நான் கற்பிழந்தவள். பறிக்கப்பட்டவள் பயன்படுத்தப்பட்டவள்”


”நீ கற்பிழந்தவள் இல்லை பறிக்கப்பட்டவள். கற்பு என்பது உடலுக்குரியது அல்ல. உள்ளத்துக்குரியது. மனதளவில் நீ உன் கணவனுக்காக கற்புடன்தான் இப்பவும் இருக்கிறாய். இதில் சந்தேகமே இல்லை. கற்பெனப்படுவது சொற்திறப்பாமை என்று இலக்கியங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். நீ உன்கணவருக்குக் கொடுத்து வாக்குப்படியே நடக்கப்பார். கண்டபடி மனதை அலைபாயவிடாது நோர்வேக்கு போகும் வழியைப் பார்த்துக்கொள்”.


”நீங்கள் படித்தவர் வரைவிலக்கணம் எல்லாம் அழகாகச் சொல்கிறீர்கள். எனக்கு என் நெஞ்சுக்கு வஞ்சகமா நடக்க முடியாது. என்னைக் கெடுத்தவனையும் சும்மா விட இயலாது.”

”அப்போ என்ன செய்யப்போகிறாய்?”

”என்னால் என்ன செய்யமுடியும், பெண்ணாகப்பிறந்து விட்டேனே. இந்த எழியவனை நம்பி வந்துவிட்டேனே. என்தலைவிதி...என்தலைவிதி யாரைத்தான் நோவது” மீண்டும் அழத் தொடங்கினாள். சீலன் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான். சாந்தியை இழந்த சாந்திக்காக சீலனின் இதயம் கீலம் கீலம் ஆனது. இருந்தும் மனதில் ஒருபயம் இவள் ஏதாவது செய்து விடுவாளோ என்ற எண்ணம் மனதில் ஓடிமறைந்து கொண்டிருந்தது.


இரவுணவு வந்தது சாந்தி சாப்பிட மறுத்தாள்.

”சாப்பிடாமல் இருந்து சாகவா போகிறாய் சாப்பிடம்மா. தென்பாக இருந்தால்தான் நாளைக்கு நோர்வே போறதுக்கான ஆயத்தங்களைச் செய்யலாம். பிடி சாப்பிடம்மா” சீலன் ஊட்டி விட்டான். 

”எனக்கொரு அண்ணை இருந்தால் உங்களை மாதிரித்தான் இருந்திருப்பான். அண்ணா உங்களை விட்டுப்பிரிய மனமில்லை அண்ணா. நாளைக்கு என்னை நோர்வேக்கு அழைத்துப் போவதாகத்தான் கூறினான். கள்ளவிசா சரிக்கட்டியிருந்ததையும் காட்டினான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அண்ணா” வீறிட்டு அழுதாள். அனைவரும் திரும்பிப்பார்த்தனர்


அவளைத் தேற்றிக் கொண்டிருந்த சீலன்

”நீ எப்பாடு பட்டாவது இந்த ஏயென்டுடன் நோர்வே போய் சேர். இதுவே உனக்கு உசிதமானது. அதன்பின் இதை நீ உன் கணவனுக்கு சொல்ல ஏதாவது செய்ய இயலுமா என்று பார். சொல்லாமலே விட்டாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை”

”யாருக்குத் தெரிவது தெரியாதது இல்லையண்ணா பிரச்சனை. என்னுணர்வுக்கு என்னிதயத்துக்கு என்மனச்சாட்சிக்கு நான் பதில் சொல்ல வேணுமண்ணா. ஒரு ஆணுக்கு இது இலகுவாக இருக்கலாம். இது என்னுடல் சம்பந்தமானது. உணர்வு சம்பந்தமானது. சரியண்ணா! எனக்கு நித்திரை வருகிறது தூக்கம் தூக்கமாக வருகிறது” போராடிய களைப்பு, மனதில் ஏற்பட்ட இளைப்பு, பெண்மையின் பொறுப்பு பயன்படுத்தப் பட்டோம் எனும் வெறுப்பு, உடல் உள்ள வேதனைகள், அவமானம், மானபங்கள் என அவளினுள் ஒரு குருசோத்திரமே நடந்து கொண்டிருந்தது.

”சரி நாளைக்குக் கதைப்பம்” ஓம் என்று தலையாட்டிவிட்டு சீலனின் அருகே இருந்த கட்டிலில் சாய்ந்து கொண்டாள். தூக்கம் கண்களைத் தழுவிக் கொண்டது. எப்படி இவளால் இத்தனைக்குப் பின்னும் தூங்க முடிகிறது?. இப்பதான் வல்லுறவுக்கு உள்ளானவள் எப்படித் தூங்குகிறாள்?


மனதின்காயம், அதிர்ச்சி, அனைத்தும் அவளின் உணர்வுகளுக்கு தடைவிதித்திருக்குமோ? அனைத்தையும் மறப்பதற்கு இயற்கை கொடுத்த மருந்தா தூக்கம்? உண்மையில் தூங்குகிறாளா என்பதை மெல்லிய வெளிச்சத்தில் பார்க்கிறான். இருந்தாலும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. உழன்று கொண்டான் மாறிமாறிப் புரண்டு படுத்தான். தூக்கம் அவனைத் தூக்கவில்லை. இருந்தாற்போல் சீலன் தன்னையறியாமலே தூங்கிவிட்டான்


இரவு 11மணி தூங்குவது போல் நடித்தவள் சமையல் அறைக்குச் சென்று நீர் குடித்துவிட்டு அங்கிருந்த ஒரு கத்தியையும் எடுத்து வந்த தன் தலையணை அடியில் சொருகிக் கொண்டாள். அவன் மீண்டும் வருவான் என்று உள்மனம் உரைத்திருக்க வேண்டும். ருசிகண்ட பூனை சும்மாவா இருக்கும்? அவளை நோர்வே அனுப்புவதற்கு முன் அவளைத் தின்று, உணர்வுகளைக் கொன்று விடவேண்டும் என்று எண்ணியவன் சும்மாய் இருப்பானா? அவள் எதிர்பார்த்தது போல் ஏயென்சிக்காரன் இரவு 11:30 மணிபோல் மெல்ல மெல்ல மம்மல் இருளில் வருவது அவளுக்குத் தெரிந்தது. எதிர்பார்த்திருந்தவள் தயாரானாள். சீலன் உலகையும் தன்னையும் மறந்து தூக்கிக் கொண்டிருந்தான். 


அவளருகில் வந்த ஏயென்சிக்காரன் 


”சாந்தி....சாந்தி ..... சாந்தி கோலுக்கு வெளியே வா. நான் ஒன்றும் செய்யமாட்டேன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். மனச்சாட்சி குத்துகிறது, நாளை எட்டுமணிக்கு நோர்வேக்கு வெளிக்கிடவேணும்” என்று மெல்லிய தாழ்ந்த குரலி;ல் பேசினான். சாந்தியும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஆரளவம் கேட்காதவாறு நகர்ந்து அவனுடன் இணங்குவதுபோல் சென்றாள். அவன் அவளை 7ம் மாடியில் இருந்து 8ம் மாடிக்கு அழைத்துச் சென்றான். அது  அவனின் படுக்கையறை. பழைய குருடி கதவைத்திறவடி என்பது போலனது. இந்தமுறை அவன் கதவை தாழிட்டபோது சாந்தி சங்கடப்படவே இல்லை. 


”ஏன் என்னை இங்கே அழைத்து வந்தாய்? நீ என்னை ஒருதடவை கெடுத்தது போதாதா? நாங்களும் மனிதப்பிறப்புகளாடா கேவலம் கெட்ட பிண்டமே”

”ஒருதடவை கெட்டால் என்ன ஒன்பது தடவை கெட்டால் என்ன ஒன்றுதானே. முடிந்தது முடிந்துபோச்சு இன்னும் ஒருதடவை... ஒரே ஒரு தடவை உன் சம்மத்துடன்...முரண்டு பிடிக்காதை சாந்தி. இஞ்சை பார் பாஸ்போட்டை உன்படத்துடன்...விசா...அதுவும் செங்கன் விசா குத்தி வைத்திருக்கிறன். போனாலும் போனாய் என்னை ஒருதரம் சந்தோசப்படுத்திவிட்டு போவேன். மாதக்கணக்கில் வெளிநாடுகளில் நிற்காமல் உன்னை அனுப்புவதற்கு எவ்வளவு சிரமப்பட்டு காசுகளை விட்டெறிந்து விசா எடுத்தனான் தெரியுமோ”


விசாவுக்காக விபச்சாரம் செய்யக் கேட்கிறானா? என்று எண்ணிக் கொண்டவள், அனைத்தையும் அவதானமாகக் கேட்டுக் கொண்டு பேசாது நின்றாள் சாந்தி. சாந்தி சாந்தமாகவே நின்றாள். அவளை நெருங்கி அணைக்க வந்தவனை இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியால் குத்து குத்து எனக் குத்திக் குதறினாள். சத்தம் வராதவாறு குரல்வளையை அறுத்தாள். தன் ஆத்திரம் தீரும்வரை தன்னை நாசம் செய்தவனுக்கு நாராசமானாள். எதை தன்னாயுதமாகப் பாவித்தானோ அதைத் துண்டாடினாள். மெல்ல எழுந்து இரத்தத்தை அங்கிருந்த துடைதாளினால் துடைத்துவிட்டு மெல்ல நிதானமாக நடந்தாள் அந்த அறையை விட்டு... மிக நிதானமாக அமைதியாக எந்தப்பதட்டமும் இன்றி ஆளரவம் கேட்டாது 7ம் மாடியிலுள்ள தன்கோலுக்கு வந்தாள். சீலன் தன்னையறியாமலே தூங்கிக் கொண்டிருந்தான். 


கறைபடிந்தவளாகத் தன்னை உணர்ந்தவள் இரத்தக்கறைபடிந்த கரங்களுடன் புனிதமானாள். மெதுவாக வந்தவள் சீலனின் கால்களை தொட்டுக் கும்பிட்டு விட்டு தன்னுள் 


”அண்ணா....அண்ணா....அண்ணா....என்னை மன்னித்துவிடுங்கள். சீலன் அண்ணா நான் தூயமலராக புத்தம் புதுப்புஸ்பமாகவே என்னைச் சமர்ப்பிக்க வந்தேன். இக்கறையை வைத்துக் கொண்டு என்னால் காலம் பூராகக் கலங்கப்பட்டவளாக  செத்துச் செத்து வாழ இயலாது என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணா. எங்கிருந்தாலும் என் ஆத்மா உங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கும். உங்கள் ஆசீர்வாதத்துடன் நான் போகிறேன் அண்ணா. விடைதாருங்கள்”


அவளின் கண்ணீர் சீலனின் பாதத்தை நனைத்தது. திடுக்கிட்டு எழுந்தவன் கண்களைக் கசக்கி விழிப்பதற்கு முன் எட்டி ஒரு கால்வைத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு 7ம் மாடியில் இருந்து சாந்தி பாய்ந்து விட்டாள். பாயும் போது கூட

”சீலணண்ணா சீலண்ணா என்னை மன்னித்து விடுங்கள்”


அகிலம் அடங்கியது ஆத்மா அலறிது அதிர்ச்சியே அதிர்ந்து போனது. அவளின் அலறல் சுவர்களில் முட்டிமோதி எங்கும் வியாபித்திருந்தது. சூனியம் அங்கு சூழ்ந்து கொண்டது. உயிர்போகும் போது கூட அணண்ணாய் வரிந்து கொண்டவனை எண்ணிக்கொண்டல்லவா உயிரை விடத்துணிந்துள்ளாள். உண்மையண்ணனாய் அன்பு அண்ணனாய்; சீலனை சிந்தையில் ஏற்று சாகும் வேளை கூட அண்ணனின் நினைவுடன் தானே பாய்ந்திருக்கிறாள்.


அனைவரும் எழுந்து விட்டார்கள் என்ன நடந்தது என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவரை ஒருவர் விசாரித்துப் பரபரப்படையும் வேளை சீலனின் மனதில் சூனியம்.... சூனியம். சாந்தி பாய்ந்த கண்ணாடி யன்னலூடாக கீழே எட்டிப்பார்;த்தான். கைகள் கால்கள், உடல் உதறியடங்க நிட்டி நிமிர்ந்தபடி கிடந்தஅவளின் அவள் உடலில் இருந்து ஆத்மா அடங்கிக் கொண்டிருந்தது. 


பூசைக்கு பூத்தமலர் பூசிக்காது போனது- மிருகத்தின்

ஆசைக்கு அகப்பட்டும் அடிபணியாது சாய்ந்தது.

வழிமேல் விழிவைத்துக் காதலன் காத்திருக்க

பழிமேல் விதிசமைத்து வானுலகம் வென்றாளே.எழுதியவர் நோர்வே நக்கீரா (நக்கீரன், நக்கீரனார்)தொடர் 8 தொடரும் இதை எழுதுகிறார் திரு.கே.எஸ். சுதாகர் அவர்கள்