WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

விழுதல் என்பது...
பகுதி  5 

விழுதல் என்பது ....

பகுதி 5 எழுத்தாளர் பற்றிய அறிமுகம் .

இயற்பெயர்: திரு.நா.தெய்வேந்திரம்
புனைப்பெயர்: வண்ணை தெய்வம்

எழுத்தாளர், நாடக நடிகர், குறும்பட கலைஞர், வானொலிக் கலைஞர், தொலைக்காட்சிக் கலைஞர்.

பல் துறையாளர்.
நடித்த நாடகங்களும், எழுதி நடித்த நாடகங்களும் ஊரிலும் புலத்திலும்:

வீரம் விளைந்தது, தங்கையா? தாரமா?, இதயமற்றவன், மன்னபதி மன்னன், ஜயா மேடைக்கு வருகின்றார், பண்டாரவன்னியன், சாவுக்குச் சவால்!, கிழமைச்சீட்டு, வாழவேணும், நீ ஒரு பெக்கோ, நல்வாழ்வு, சதுரங்கம,; சங்கிலியன்,மாலிகபூர்,இதயமற்றவன், தங்கையா? தாரமா?, இசைமன்னன் நீரோ சங்காரம், பாதை தெரியுது பார், குழப்பத்தில் திருப்பம், நாங்கள் திருந்தமாட்டோம்,விளக்குமாறு, ஒளிபிறந்தது,வேலை வேணும், இன்னும் ஏழு நாடகங்கள்
எழுதிய நூல்கள்: விடிவை நோக்கி, கலைப்பாதையில் இவர்,கதாநாயகன், கலைத்துறையில் இரு மலர்கள்,கொந்தல் மாங்காய்,பொல்லாத மனிதர்கள்,வானலையில் எங்கள் கவிதைகள்,யாழ்ப்பாணத்து மண் வாசனை, தாயக தரிசனம்,
ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் சஞ்சிகைகள்: முற்றம் (பாரீஸ்) அகரம் (ஜேர்மனி) நந்தவனம் (தமிழகம்)
பணியாற்றிய வானொலி தொலைக்காட்சி ஊடகங்கள்: முத்தமிழ் மன்ற வானொலி (பாரீஸ்) ரிஆர்ரி (பாரீஸ்)ஏபிசி வானொலி (பாரீஸ்) ரிஆர்ரி தொலைக்காட்சி (பாரீஸ்)ரிரிஎன் (பாரீஸ்)
நடித்த சின்னத்திரைப் படங்கள்: நீதியின் சோதனை, ராஜாவின் ராகங்கள், தனிப்புறா, நீ ஒரு தெய்வம், தீ மழை

-----------------------
5வது பகுதியை எழுதியவர் பிரான்ஸ்சில் இருந்து வண்ணை தெய்வம் அவர்கள்

தொடர்கிறது பகுதி 5 விழுதல் என்பது….

வெளிநாடு செல்வதற்காக வீட்டைவிட்டுப் புறப்பட்டடு இருபது நாட்களுக்கு மேலாகிவிட்டது. கடைசியாக கண்ணீருடன் விடைகொடுத்த தாயின் முகம் இன்னமும் அவன் கண்களுக்குள் நிழலாடிக்கொண்டிருக்கின்றது.

தாயின் கண்ணீருக்குப்பின் இருந்த கண்களில் இருந்த ஏக்கம்! அது மகனைப் பிரிவதை எண்ணிய துயரமும், பிரிந்தாலும் எங்காவது உயிருடன் வாழட்டும் என்ற பரிதவிப்பும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததுதான் அந்தக் கண்ணீர்!


இருபது நாட்களுக்குப் பின்னர் இன்று இரண்டு நிமிடங்களதான்; தாயுடன் பேசியுள்ளான்.

இனி எப்பொழுது பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்போகின்றதோ?

கடிதங்களில்த்தான் அதிகம் பேசவேண்டியிருக்கும். தாயின் நினைவுகளை அவன் மறக்க முயன்றான் இப்பொழுது கலாவின் நினைவுகள் துளிர்க்க ஆரம்பித்தன. பத்மகாலாவை அவன் கலா என்றுதான் அழைப்பான்.


யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் சீலன் மருத்துவபீட மாணவன். கலாவும் அவனுடன் படிக்கும் சக மாணவி. அழகானவள்! வசதியானவள்! அடக்கமானவள்! அனேகமான பணக்காரப் பெண்கள் எப்பொழுதும் தங்களைச் சுற்றி நான்கைந்து பேர்களை வைத்துக்கொண்டு தாங்களே அதிகம் கதைத்துக்கொண்டிருப்பார்கள்.

அதை அருகிலிருப்பவர்கள் ஆமாம் போட்டு கேட்கவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

ஆனால் கலா அதற்கு எதிர்மாறானவள்! தேவையில்லாமல் யாருடனும் அரட்டையடிக்கமாட்டாள். அதற்காக பேசாமூஞ்சி என்றும் சொல்லிவிட முடியாது. அளவோடு பேசினாலும் அந்தப் பேச்சில் ஒரு கவர்ச்சி இருக்கும். அர்த்தம் இருக்கும். ஒருமுறை அவளுடன் பேசினால் இன்னொருமுறை பேசவேண்டும் என்னும் ஆவலைத் தானாகவே தூண்டும்.


சீலனுடைய குணாபாவங்களும் அப்படித்தான். இதனால்தானோ என்னவோ கலா சீலனை தனது நண்பனாக்கிக் கொண்டாள். ஆரம்பத்தில் இவன் அந்த நட்பை கொஞ்சம் தூரமாகத்தான் வைத்திருந்தான். காரணம் அவனுடைய குடும்பநிலை அப்படி! தகப்பன் இல்லாத தன்னை தனக்குக் கிடைக்கும் பென்சன் பணத்தில் குடும்பச் செலவையும் பார்த்துக்கொண்டு தன் சக்திக்கு மீறி தனது படிப்புச் செலவையும் பார்த்துக்கொள்ளும் தன் தாயாரின் கனவை நிறைவேற்றி தான் ஒரு மருத்துவனாக வேண்டும் என்பது மட்டும்தான் அவனின் இலட்சியம். அதற்கு இடையில் காதல் கத்தரிக்காய் என எதிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்பதற்காகவே பெண்களை நண்பராக்கிக்கொள்ள அவன் விரும்பவில்லை

குழந்தைப் பருவத்தில் இனிப்பின்மீது ஆசை வருவதும், வாலிபப் பருவத்தில் காதலில் வசப்படுவதும் தவிர்க்கமுடியாதவையே! சீலனும் அதற்குத் தப்பவில்லை. சாதாரண நட்பு பின்னர் நெருக்கமான நட்பாகி அதுவே காதலாகிவிட்டது.

கலாவின் காதலுக்காக எத்தனையோ சக மாணவர்கள் அலையாய் அலைந்திருக்கின்றார்கள்! அதேபோல் சீலனின் காதலைப் பெறுவதற்காகவும் பல பெண்கள் முயற்சி செய்திருக்கின்றார்கள்! ஆனால் காலமோ
காதலையே விரும்பாத இருவரையும் காதலர்களாக்கிவிட்டது.

இந்த நினைவுகளுடனேயே இருந்த சீலனை தவத்தார் ஏதாவது கேட்டு அவனுடைய எண்ணங்களை குழப்பியபடியே இருந்தார். தவத்தாருக்கு இப்பொழுது பெரும் சந்தோ~ம்! தனக்கு கதைத்துக்கொண்டிருப்பதற்கு நல்லதொரு துணை கிடைத்துவிட்டதென்பதால். ஆனால் இயற்கையாகவே தனிமையை விரும்பும் சீலனுக்கு இப்பொழுது அந்த தனிமை இன்னும் அவசியாக தேவைப்பட்டது.

'அண்ணை பக்த்திலை பூங்கா ஒண்டும் இல்லையோ?" தவத்தாரின் கவனத்தை வேறுபக்கம் திருப்பி தனது தனிமைக்கான இடத்தை அவரிடம் கேட்டான் சீலன். 'ஏனில்லை கொஞ்சத் தூரம்தான் ஒரு சின் பார்க் இருக்கு நாளைக்கு கூட்டிக்கொண்டுபோய் காட்டுறன்" சாதாரணமாகப் பதில் சொன்னார் தவத்தார்.

பொதுவாகவே சீலனிடம் உள்ள நல்ல குணங்களில் ஒன்று நாளை என்று எதையும் ஒத்திவைப்பதில்லை. இது பொழுதைக் கழிப்பதற்கானதற்காகவே இருந்தாலும் அது இப்பொழுதோ அந்த தனிமை அவனுக்கு தேவையாக இருந்தது.
'இல்லை அண்ணை நீங்கள் எப்பிடிப் போகவேணும் எண்டு குறிப்பைச் சொல்லுங்கோ நான் போயிற்று வாறன்"

'தம்பி உமக்கு இந்த இடங்கள் இன்னும் பழக்ப்படேல்லை லேசிலை புடிக்கமாட்டீர்"

'அண்ணை முன்பின் வழி தெரிஞ்சே சுவிஸிற்கு வந்தனான்? பத்தாயிரம் கிலோமீற்றர் தூரத்தைத் தாண்டி வந்திட்டனாம், பக்கத்திலை இருக்கிற பார்க்கை கண்டுபிடிக்கமாட்டேனோ? நீங்கள் சொல்லுங்கோ அண்ணை நான் போயிற்று வாறன்".

சீலனின் வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கை தவத்தாரை வியக்கவைத்தது! அவர் சொன்ன விபரங்களை மனதிற்குள் குறித்துக்கொண்டு சீலன் தனிமையைத் தேடி அறையை விட்டு வெளியேறி வீதியில் நடக்கத் தொடங்கினான்.

சிறிய பூங்காதான் ஆனால் அழகாக இருந்தது! அந்தப் பூங்காவைப் பொறுத்தவைரை ஆட்கள் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் அமைதியாக இருந்தது! காகம் குருவிகளின் கீச்சல் சத்தங்களின்றி பூங்காவிற்கருகில் சலசலத்தோடும் நீரோடையும், தூரத்தே தெரியும் ஓங்கி நிமிர்ந்த மலை முகடுகளும், பூங்காவின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தல்களில் பூத்துக் குலுங்கிக்கொண்டிருக்கும் அழகுமிகு செடிகளும், மென்மையாக வருடிக்கொடுத்த இதமான குளிர் காற்றும் அவனுக்கு ஆறதலாக இருந்தது.

அழகு படைத்த அந்தப் பூங்காவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் எல்லாவற்றிலும் பல Nஐhடிகள் அமர்ந்திருந்தார்கள். சிலர் திருமணத்தை எதிர்நோக்கிக் காதலிப்பவர்கள்! வேறு சிலர் திருமணமாகி காதலித்துக் கொண்டிருப்பவர்கள். இன்னும் சிலரோ இரண்டுமே இல்லாமல் பொழுது போக்குக்காக காதலிப்பவர்கள்! அந்தக் காதலர் கூட்டத்திலே சீலன் மட்டும்தான் தனியொருவனாக அமர்ந்திருந்தான்.

இந்தக் காட்சிகளெல்லாம் சீலனுக்கு புதுமையான அனுபவங்கள்! ஊரில் பல்கலைக்கழக வளாகத்தினுள் மட்டும்தான் அவன் கலாவுடன் அருகருகே நின்று சுதந்திரமாக கதைத்திருக்கின்றான். வீதியில் நடக்கும்போதுகூட இருவருக்கும் இடையில் இரண்டடி இடைவெளி இருக்கும்! இங்கோ அருகில் இருப்பவர்களைப்பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதெல்லாம் சீலனுக்கு புதுமையான அனுபவங்கள்…!

அங்கிருந்த எல்லோரும் ஆண் பெண் Nஐhடிகளாக காதலித்துக் கொண்டிருந்தார்கள். சீலன் மட்டும் தப்பித்தவறி தண்ணீருக்குள் விழுந்த வண்டு தத்தளிப்பதைப்போல ஊர் நினைவுகளை இரைமீட்டிக் கொண்டிருந்தான்.

தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்குடன் அரசாங்கம் போடுகின்ற முட்டுக்கட்டைகள்! அதை எதிர்த்து மாணவர்கள் நடாத்துகின்ற போராட்டங்கள்! இதனையே காரணமாக வைத்து அடிக்கடி இராணுவம் விசாரணை என்ற போர்வையில் மாணவர்களை கைது செய்வதும், எச்சரிக்கை செய்து விடுவிப்பதும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் தொடர் கதையாகவே இருந்தது. மாணவர்களின் போராட்டங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது!.

....................................
அப்படித்தான் அடுத்து நடக்கவிருந்த இலங்கையின் சுதந்திரதின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முதல்நாள் இரவு ஒன்றுகூடிய மாணவர்கள் பல்கலைக் கழக வழாகம் முழுக்க கறுப்புக் கொடிகளாக தொங்கவிட்டிருந்தார்கள். மறுநாள் வளாகத்தில் மாணவர்களைவிட இரண்டு மடங்கு இராணுவத்தினர் குவிக்கப்டிருந்தனர்!

விடுதியில் தேடுதல்கள்! விசாரணைகள் என்று ஒரே அமர்க்களம்! இராணுவத்தினர் எல்லா மாணவர்களையும் விளையாட்டு மைதானதுக்கு வரவழைத்தார்கள்.

மனித நடமாட்டத்தைக் கண்டவுடன் புற்றுக்குள் ஒடுங்கிக்கொள்ளும் பாம்பைப்போல சீலன்; மாணவர்களின் பின்வரிசையில் தன்னை மறைத்துகொள்ள முயற்சித்தான்.

 அதுதான் இராணுவத்தினருக்கு அவன்மேல் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்போல…

பின்வரிசையில் நின்றவர்களையும் பயந்து பயந்து நின்றவர்களை முன்வரிசைக்கு அழைத்தார்கள்… முடிவில் சந்தேகத்தின் பேரில் பத்தொன்பது மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்கள்!

விசாரணையின் பின்னர் பத்துப்பேர் எச்சரித்து விடுவிக்கப்பட்டார்கள்! ஒன்பதுபோர்மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு! அதில் சீலனும் ஒருவன்!


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒரு மாதம்… பின்பு புரமோசன் கொடுக்கப்பட்டு ஒன்பதுபேரும் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் வாரத்தில் ஒரு தடவை சீலனின் தாயார் வந்து பார்த்துச் செல்வார். பூசா முகாம் சென்ற பின்னர் நான்கு மாதத்திற்குப் பின் ஒருநாள் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் தாயார் வந்திருந்தார்! முன்பு பார்த்ததில் இருந்து பாதியாக தேய்ந்துவிட்டார்!


வெட்டாத தலைமுடி! முகத்தினில் தாடியோடு சீலன்! ஏதிர்காலத்தில் டாக்டராகப் பார்க்கவேண்டியவனை சிறைக்குள்ளே ஒரு பரதேசியை;போல் பார்த்தவுடன் அந்தத்தாய் பதறிவிட்டாள்! பத்து நிமிடங்களை இருவரும் அழுதே கழித்துவிட்டார்கள்! அதன்பின் சில சம்பிருதாயமான நல விசாரிப்புக்கள்!

அதன்பின் வழக்கறிஞர் ஆறதலான ஒரு செய்தியைச் சொன்னார். அது 'விரைவில் வெளியில் வந்துவிடுவீர்கள்" என்பதுதான்.


ஆறுதலான செய்திதான் ஆனாலும் சீலன் அதை முழுமையாக நம்பிவிடவில்லை! நடக்கிறது நடக்கட்டும் என்று விரக்தியாகச் சிரித்துக்கொண்டான்! பார்வையிடுவதற்காக கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரம் முடிவடைந்ததால் அவர்கள் விடைபெற்றுக்கொண்டார்கள்!

அன்று இரவு முழுக்க சீலன் தூங்கவே இல்லை. தாயின் நினைவு மட்டுமல்ல? கலாவைப்பற்றிய  நினைவுகளும் அவனை தூங்க விடவில்லை!

தாயார் வந்து பார்த்துச் சென்ற இரண்டு வாரங்களிலேயே சீலனும் அவனோடு கைதுசெய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்!

அறு மாதங்கள் சீலனின் படிப்பு பாழாகிவிட்டது! இனி அடுத்த ஆண்டில் இருந்து புதிதாக ஆரம்பிக்கவேண்டும்! ஆனால் மருத்துவர் கனவையெல்லாம் சீலனின் தாயார் மறந்துவிட்டார்! மகன் மருத்துவராக வாழ்வதைவிட அவன் உயிரோடு வாழவேண்டும் என்பதே அந்தத் தாயின் இப்போதைய சிந்தனை! அதற்காக மகனை வெளிநாடொன்றிற்கு அனுப்பிவைப்பதற்காக உறவுகளிடம் எல்லாம் உதவி கேட்டாள்.

 எதிர்பார்த்தவர்கள் எல்லாம் ஏமாற்றம் அளித்துவிட்டார்கள்.


கிடைத்த சொற்ப பணத்துடன் இருந்த நகைகளையும் தாயின் தாலிக் கொடியை  விற்றும் போதவில்லை. முடிவில் வாழ்ந்துகொண்டிருந்த வீட்டுக்காணியையும் ஈடு வைத்து எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் ஒரு வழியாக பாசத்தை தனது மனச்சிறையில் பூட்டி வைத்துவிட்டு சீலனை இலங்கையைவிட்டு நாடு கடத்திவிட்டார் அந்த அப்பாவித்தாயார்!.

இனிக்காத இரவும், சிரிக்காத பகலுமாக யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் சீலன் இருண்டு தடவைகள் கலாவை சந்தித்து பேசியிருக்கின்றான். முதல் சந்திப்பில் சிறை அனுபவங்களைப்பற்றிப் பேசியே நேரம் கரைந்துவிட்டது. இரண்டாவது சந்திப்பில் தன்னுடைய மருத்துவர் கனவுதான் இல்லாமல் ஆகிவிட்டது ஆனால் நான் மீண்டும் இலங்கைக்கு வரும்போது மருத்துவர் பத்மகலாவைத்தான் பார்க்கவேண்டும் என்று சொல்ல அவள் கண்ணீரால் விடைகொடுத்திருந்தாள்.

 அந்தக் கண்ணீர்த் துளிகள் இன்னமும் சீலனின் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது!.


(தொடரும் பகுதி 6)

பகுதி ஆறு 6 எழுதுபவர் நோர்வேயில் இருந்து  நோர்வே நக்கீரன் (திரு.திருச்செல்வம் திலீபன் அவர்கள்)