WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

பன்னாட்டு எழுத்தாளர்கள் கூடி எழுதும்  பெருந் தொடர் 
விழுதல் என்பது... 
பெருந் தொடர்   

பகுதி 1 , பகுதி 2

தொடர் 3 - 4  பகுதியை எழுதுபவர் திருமதி நிவேதா உதயராயன் .   இலண்டன்
அவர் பற்றிய அறிமுகம் .

திருமதி. நிவேதா உதயராயன்

தமிழ்மொழி ஆசிரியையாக இலண்டனில் : 22 வருடங்கள்
பன்முக படைப்பாளி  : சிறுகதைகள் , கவிதைகள் , நாடகங்கள்
பயிற்சிப்பட்டறை ஆசிரியராக :  தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையில்
ஆய்வாளராக :  சுமேரியர் பற்றிய ஆய்வை இரண்டு வருடங்களாக மேற்கொண்டு வருகிறார்
செய்தி  வாசிப்பாளர்:  உயிரோடை வானொலியில்   இது போன்ற பன்முக  சமூக சேவையாளரான திருமதி. நிவேதா  தொடர் 3 இல்தனது பேனாவைத் தொடர்கிறார்.  

தொடர்கிறது விழுதல் என்பது….

அவர் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே என்ன? தம்பி யாழ்ப்பாணமோ? என்றார்.

அவரின் சிரிப்பும் இயல்பான பேச்சும் சீலனுக்கு அந்த நேரத்துக்கு தேவையாகவே இருந்தது. ஓமண்ணை என்று மனதில் சிறு தெம்பு எட்டிப் பார்க்கக் கூறினான். என்ன பேர் தம்பி என்றார் அவர் தொடர்ந்து. முழுப்பேர் தருமசீலன். நீங்கள் என்னைச் சீலன் எண்டு கூப்பிடுங்கோ என்றுவிட்டு உங்கள் பெயரைச் சொல்லவில்லையே என்றான்.

’’நான் தவம் ஆறு மாதமா இங்க இருக்கிறன். இனி வெளியில விடுவாங்கள். வெளியில போய்த்தான் ஏதும் வேல வெட்டி பார்க்க வேணும். நீர் என்னத்தில வந்தனீர்’’ என்று விடுப்புக் கேட்கத் தொடங்க நானும் ஆர்வத்தோடு நடந்தவற்றை விபரித்தேன்.

’’இங்க ஒவ்வொரு கிழமையும் சாப்பாட்டுடன் சாமான்கள் தருவாங்கள். உடுப்புகள் வாங்கவும் கொஞ்சப் பணம் தருவினம். கவனமா வங்கி வச்சுச் சமைச்சுச் சாப்பிடவேணும். குசினியும் டொயிலட் பாத்ரூம் எல்லாம் எல்லாருக்கும் பொது......”

தவத்தார் இடைவெளி விடாமல் சொல்லிக் கொண்டு போக சுவிஸ் மொழி இடைநிறுத்தியது அவரின் பேச்சை. அவன் கூறியது ஒண்டும் எனக்கு விளங்கேல்லை எண்டாலும் விளங்கின மாதிரிக் கண் வெட்டாமல் அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன் நான். அவன் கூறி முடித்ததும் தவத்தார் என்னைப் பார்த்து “ இண்டைக்கு பெட்சீற்றும் தலாணியும் தருவினம். வாங்கிக் கொண்டுவந்து வச்சுபோடும். என்ர அறையில ஒரு கட்டில் இருக்கு. உம்மை அங்கை விடச் சொல்லி அவனிட்டைக் கேட்கிறன். என்று சொல்லிவிட்டு என் சம்மதம் கேட்காமலேயே அவனுடன் சுவிஸ் பாசையில் எதோ கதைத்துவிட்டு வாரும் தம்பி. உமக்கு உம்மட கட்டிலைக் காட்டிறன்’’

 என்றபடி முன்னால் நடக்க சீலனும் பின்னல் நடந்தான்.
 
அவர் கதவைத் திறப்பால் திறந்துகொண்டு ஒரு அறைக்குள் நுழைய அவனும் கூடவே நுழைந்தான். அறை பெரிதாக இருந்தது. மேலும் கீழுமாக ஆறு கட்டில்கள் போடப்பட்டிருந்தன. ஒரு சுவர் பக்கமாக ஒரு மேசையும் இரண்டு கதிரைகளும் மட்டும் காணப்பட மேசையில் தண்ணீர்ப் போத்தல்கள் யூஸ் பெட்டிகள் பழங்கள் என அடுக்கப்பட்டிருந்தன. இன்னொரு பக்கத்தில் கட்டில்களுக்கு இடையே இரு மீற்றர் அகலமுள்ள இரு அலுமாரிகளும் வேறொரு மூலையில் இரு அலுமாரிகளும் இருந்தன.
அறைக்குள் ஒரு வித வீச்சத்துடன் காற்றோட்டம் இல்லாமல் இருந்ததும் சீலனுக்கு மூச்சடைப்பது போல் இருக்க சுற்றிவரப் பார்த்தான்.

மேசை இருந்த பக்கமாக இரு சாளரங்கள் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தன. ‚

’’ஏனண்ணை ஜன்னல் திறக்காமல் வச்சிருக்கிரியள் என்றபடி ஜன்னலைத் திறக்கப் போக தம்பி தம்பி அதைத் திறக்காதையும். ஒரே புழுதியும் சத்தமும் கேட்கும். அந்தப்பக்கம் விரைவுப்பாதை. அதுதான் பூட்டியே கிடக்கு’’

 என்றவர் ’’இந்தாரும் இதுதான் உம்மட கட்டில் என்று வலதுபக்கக் கட்டிலைக் காட்டினர்’’. ’’கட்டிலுக்குப் பக்கத்தில் தனது பாக்கைக் கொண்டு போய் வைத்தவனுக்கு ஊரிலிருந்த வீடு மனக்கண் முன்னே வர நீண்டதொரு பெருமூச்சை விட்டான்.

அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட ’’தவத்தாரும் என்ன தம்பி செய்யிறது. போர்ச் சூழலால அங்க வாழ்ந்துகொண்டிருந்த  நல்ல வாழ்க்கையை விட்டுப்போட்டு இவங்களிட்டைப் பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறம்’’ என்றபடி அவரும் பெருமூச்சை விட்டுவிட்டு ’’சரி வாரும் கீழே போய் சாமான்களை எடுத்துக்கொண்டு வருவம்’’ என்று வெளியே செல்ல அவனும் அவருடன் சென்றான்.

புத்தம் புதிதாக படுக்கைக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் ஒரு பெரிய பொலித்தீன் பையுள் போட்டுக் கொடுக்க அதைக் கையில் வாங்கியவன் விபரிக்க முடியாத ஒரு உணர்வுக் கொந்தளிப்புக்கு ஆளானான். இது நாள்வரை அன்னியர் யாரிடமும் கையேந்தாமல் நிம்மதியாய் போய்க்கொண்டிருந்த வாழ்வு இப்போது கையேந்தியபடியே நகர்கிறது. உலகில் நாம் எண்ணியபடி எதுவும் நடப்பதே இல்லை என்ற உண்மை அவன் மனதை பிசைய நூலறுந்த பட்டமாய் அவன் மனம் எதையும் எண்ணும் மனநிலையிலிருந்து விடுபட்டது.

’’அண்ணை ஒருக்கா ஊருக்கு டெலிபோன் அடிச்சு நான் வந்து சேர்ந்த விஷயத்தை அம்மாக்குச் சொல்லவேணும்’’ என்றான். ’’உங்களின்ர வீட்டில டெலிபோன் இருக்கே’’ என்று அவர் வியப்பானார். ’’என்ர வீட்டுக்குப் பக்கத்தில விதானையாரின் வீடு’’. ’’அவையிட்டைச் சொன்னால் அம்மாவைக் கூப்பிடுவினம்’’ என்றான். இப்ப அவசரமே? ’’பின்னேரம் நாலு மணிபோல போனால் காணும்தானே’’ என்றவர் இவனின் பதிலை எதிர்பாராது படிகளில் ஏறத் தொடங்கினார். அவனும் வேறுவழியின்றி அவரைத் தொடர்ந்தான்.

அவன் அறையுள் வந்ததும் அறையைச் சாத்தியவர் தம்பி தேத்தண்ணி ஒண்டு போடட்டே என்றார். அவனுக்கும் அது தேவையாக இருந்தது. கட்டிலில் கொண்டுவந்த பொருட்களை வைத்துவிட்டு வாரும் குசிணியைக் காட்டிறன் என்று சொல்லியபடி செல்லும் அவரைப் பின் தொடர்ந்தான்.

குசினி பெரிதாக இருந்தது. மூன்று செட் அடுப்புக்களும் இரு மரப் பெட்டகங்களும் மூன்று துவைக்கும் இயந்திரங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் மரப் பெட்டகத்தின் பூட்டைத் தன்னிடமுள்ள சாவியால் திறந்து அதற்குள் உள்ள பாத்திரம் ஒன்றை எடுத்து இருவருக்கும் அளவாக நீரை நிரப்பி மின்னடுப்பில் வைத்துவிட்டு இரு தேநீர் குவளைகளை வெளியே எடுத்து வைத்தார். அவன் தன கண்களால் அறியத் துளாவினான்.

அடுப்பு சூடேற ஆரம்பித்ததும் பின் பக்கமிருந்து சில கருப்பு நிறப் பூச்சிகள் வெளியே வந்து தகர மூடிகளில் ஊரத் தொடங்கின. அவற்றைப் பார்த்ததும் அவனுக்கு ஒருவித அருவருப்பு ஏற்பட, ’’ அண்ண உங்க பூச்சிகள்’’ என்று கத்தினான். ’’தம்பி பயப்பிடாதை’’ என்று சொல்லிக்கொண்டே அவனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்து விட்டு  இந்தக் குசினியை எல்லா நாட்டவரும் பாவிக்கிறது. உவங்கள் எங்கடை ஆட்கள் மாதிரி இல்லை. சரியான குப்பை. நாங்கள் தான் கொஞ்சம் கழுவித் துடைச்சு விடுறது. கோப்பை சட்டி எல்லாம் அப்பிடியே வச்சிட்டுப் போவிடுவாங்கள். நாங்கள் வந்து பார்த்தா எங்கட பொருட்கள் ஒண்டும் கிடவாது. அதுக்குப் பிறகுதான் பூட்டுப் போட்டு எங்கட சாமான்களை கவனமா வச்சிருக்கிறம்’’ என்றார்.

அவன் வந்த அன்றே என்னத்தைச் சொல்வது என்று தெரியாமல் தலையை ஆட்டியபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான். என்ன இவர் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து கதைத்தபடியே இருக்கிறார். இவருடனே தானே நான் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணியபடி மணிக்கூட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். இன்னும் ஒன்றரை மணித்தியாலம் இருக்கு நாலு மணிக்கு. எதுக்கும் இன்னொருதரம் போன் செய்வது பற்றிக் கேட்டுப் பார்ப்போமா என்று எண்ணியபடி அண்ணை உங்களுக்கு இப்ப ஏதும் அலுவல் இருக்கோ என்றான்.

„ நான் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் படுத்துப் பழகிட்டன். நித்திரை கண்ணைச் சுத்துது. ஒரு மணியத்தியாலம் ஆவது  படுக்க வேணும். நீரும் முகத்தைக் கழுவிக் கொண்டு கொஞ்சம் உம்மட சாமான்களை அந்த மூலைக் கபேட்டில் அடுக்கிக் கட்டிலையும் விரிச்சு உறைகளையும் போடும். ஒரு மணித்தியாலத்தில எழும்பிடுவன்“ என்றபடி அவர் போய் படுத்துவிட்டார்.

தொடரும்  பகுதி 4……………

தொடர் 4 

 தொடர்கிறது எழுதியவர் நிவேதா உதயராயன் இலண்டன்

விழுதல் என்பது......

சீலன் அவர் குறிப்பிட்ட அலுமாரியில் தன் பொருட்களை ஐந்து நிமிடத்தில் அடுக்கிவிட்டான். அவன் விடுமுறையைக் கழிக்கவா வந்தவன்?.

 இரண்டு காற்சட்டைகளும் இரண்டு சேர்ட்டுகளுடன் இரண்டு உள்ளாடைகள்;, போட்டிருப்பதைவிட ஒரு சோடி சொக்ஸ், ஒரு சவர்க்காரம், சீப்பு, இரண்டு சாரங்கள், இரண்டு துவாய்கள் என இவற்றை அடுக்க மணிக்கணக்கு தேவை இல்லைத்தானே.

சப்பாத்தைக் கழற்றும் போது வியர்வை நாற்றம் அவனையே முகம் சுளிக்க வைக்க சாரத்தையும் துவாயையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு முகம் கழுவும் இடம் தேடிப் போனான்.

கதவைத் திறந்ததும் ஒரு அடைசல் மணம் மூக்கைத் தாக்க உள்ளே காலை வைக்கவே அருவருப்பாக இருந்தது. பாட்டாச் செருப்பைக் கொண்டு வந்திருக்கலாம் என மனதில் எண்ணியபடியே ஒருவாறு முகம் கைகால்களைக் கழுவி முடித்து சாரத்துடன் வந்து தன் கட்டிலில் இருந்தவன் தன்னை அறியாமலே அதில் சாய்ந்தான்.

இரும்பாலான கட்டில் படுத்தவுடன் கிரீச் என்று ஒரு சத்தம் எழுப்பியது. தவத்தார் பத்து நிமிடங்களிலேயே நல்ல நித்திரைக்குள் போயிருந்தது மெலிதாகக் கேட்ட அவரின் குறட்டைச் சத்தத்திலேயே தெரிந்தது.

கண்களை மூடிய அவனுக்கு மனதில் ஒரு நிம்மதி ஏற்பட்டாலும் தன்னை அனுப்ப தாய் பட்ட கஸ்டங்கள் மனக்கண்ணில் ஓட கடைக்கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பாவம் அம்மா என் உயிரைக் காப்பாற்ற எத்தனை பேரிடம் கெஞ்சி மன்றாடி தன்னுடைய தாலிக்கொடி நகை நட்டெல்லாம் விற்று என் உயிருக்கு உத்தரவாதம் தந்திருக்கிறா.

என்னை உவங்கள் திருப்பி அனுப்பாவிட்டால் எப்பாடுபட்டாவது அம்மாவின்ர கடன்களை அடைச்சுப் போடுவன்.

இனி என்னை என்ன செய்வாங்கள் என்று தவம் அண்ணையைக் கேட்க வேணும் என்று எண்ணியபடியே தன்னை அறியாது தூங்கிவிட்டான்.

யாரோ தோளைத் தொட்டு உலுப்புவதை உணர்ந்து திடுக்கிடலோடு எழுந்தவனைப் பார்த்துச் சிரித்தபடியே தவத்தார் நின்றார்.

„என்ன சீலன் பதகளிச்சபடி எழும்புறீர்“ என்று சிரித்தவரை „எத்தனை நாட்களுக்குப் பிறகு நிம்மதியோட இருக்கிறன் அண்ணை, என்னைப் போல இளம் ஆட்கள் எல்லாம் நிம்மதியாக தூங்கி எத்தனை வருசமாச்சு „ என்று பெருமூச்சு விட்டவன் தன் உடைகளை மாற்றிக் கொண்டான்.

ஏற்கனவே தவத்தாரும் வெளிக்கிட்டு நின்றபடியால் அவனைக் கூட்டிக் கொண்டு போன் செய்வதற்காக வெளியே கிளம்பினார்.
அவனிடம் இருந்தது அமெரிக்கன் டொலர்தான்.

அவன் „அண்ணை இதை மாத்த வேணும் எங்க மாத்தலாம்“ என்றபடி காசை அவரிடம் நீட்டினான்.“இப்ப நான் தாறன், பாங் இப்ப பூட்டியிருக்கும் நாளைக்கு மாத்தி தாருமன்“ அருகிலிருந்த கடை ஒன்றுக்குள் சென்று தன்னிடமிருந்த தாள்காசை சில்லறையாக மாற்றிக் கொண்டு  டெலிபோன் பூத்தொன்றிற்குள் நுழைந்தார்.

இரண்டு பிராங்; குற்றிகளை அதற்குள் போட்டுவிட்டு அவனிடம்  இலக்கத்தை வாங்கி டயல் செய்து காதில் வைத்தால் சிங்களத்திலும் தமிழிலும், இப்பொழுது நீங்கள் தொடர்பு கொண்ட இலக்கத்துடன் பேச முடியாது என்ற அறிவித்தல் வந்தது.

“தம்பி நீங்கள் தந்த போன் நம்பர் பிசியாக இருக்கு“என்று சொல்லி முடியமுதல் அவர் போட்ட பணம் உள்ளே இழுக்கப்பட்டு தொடர்பு துண்டிக்கப்பட்டது. „

போட்ட காசை மிசின் விழுங்கிப் போட்டுது என்றவண்ணம் இன்னொருக்கா அடிச்சுப் பாப்பம்“ என்றவாறு மீண்டும் இரண்டு பிராங் குற்றிகளை போட்டுவிட்டு இலக்கங்களை அழுத்தினார்.மீண்டும் அதே நிலை.

„சா.., வீணா நாலு பிராங் போட்டுது என்று சலித்தபடி, வாரும் அங்கால ஒரு கடை இருக்கு. கதைச்சு முடியக் காசு கட்டலாம்“ என்று கூறியபடி நடக்கத் தொடங்கினார். அவன் எதுவும் கதைக்காமல் சேர்ந்து நடந்தான்.

கடையை அண்மித்ததும் „ இதுதான் கடை, நல்ல காலம் சனம் இல்லை வாரும்“ என்றபடி உள்ளே நுழைந்து சுவிஸ் மொழியில் ஏதோ கூற அங்கிருந்தவன் ஒரு அடைப்புடன் இருந்த அறை போன்ற ஒன்றைக் காட்டினான்.

 அதற்குள் இருவரும் சென்று இலக்கங்களை அழுத்த தொடர்பு கிடைத்தது.

இவனுக்கு படபடப்புடன் யார் தொலைபேசியில் வருகிறார்கள் என ஆவல் உந்த கலோ கலோ என்றான். ஏழாவது தரம் மணி அடிக்கும்  சத்தத்தைத் தொடர்ந்து போன் எடுக்கப்பட்டு விதானையார் „கலோ „ என்றார். அவன் „நான் சீலன் கதைக்கிறன், நான் வந்து சேர்ந்திட்டன் சுவிசுக்கு... அதுதான் அமமாட்டை ஒருக்கா கதைக்க“என்று இழுத்தான்.

சரி அஞ்சு நிமிசத்தில திருப்பி அடியும் நான் அம்மாவைக் கூப்பிடுறன் என்று கூறியபடி விதானையார் போனை வைத்துவிட்டார். அவனுக்கு மனம் முழுவதும் ஒரு மகிழ்வு பரவியது. இப்ப இரவு எட்டு மணிதானே அங்க. அம்மா என்ன எல்லாம் யோசிச்சுக் கொண்டு இருக்கிறாவோ என்று எண்ணியபடி மணிக்கூட்டைப் பார்த்தான்.

„ இன்னும் ஒரு மூண்டு நிமிசம் முடிய அடிப்பம், தற்செயலா உம்மட அம்மா வராட்டி வீண் காசுதானே“  என்று அவர் கூறுவதும் சரியெனப்பட பொறுமையாக மனதுள் எதை எதையோ எண்ணியபடி காத்திருந்தான்.

அவன் காத்திருப்பு கரைய „சரி அடிப்பம்“ என்றபடி மீண்டும் அவரே இலக்கங்களை அழுத்தி ரிங் போக அவனிடம் போனை நீட்டினார்.

தாயின் குரல் அழுகையுடன் „தம்பி சுகமாய்ப் போய்ச் சேர்ந்தியளோ“ என்று ஒலித்தது. அவனுக்கும் அழுகை வந்தாலும் அடக்கியபடி „பிரச்சனை இல்லை அம்மா, காம்ப் ஒண்டில்தான் இப்ப விட்டிருக்கிறாங்கள்.

இனிப் போகப் போகத்தான் தெரியும்.

இங்க எனக்கு தவம் அண்ணை எண்டு ஒருத்தர் உதவி செய்யிறார்.

நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்காதைங்கோ, பிறகு ஆறதலா எடுக்கிறன்“ என்று ஏக்கங்களை மனதில் நிரப்பியபடியே போனை வைத்தான்.

தொடர்ந்து விழுதல் என்பது… தொடர் 5 எழுதவிருப்பவர் வண்ணை தெய்வம் அவர்கள்  பிரான்ஸ் நாட்டில் இருந்து எழுதுகிறார்.

தொடரும் 5…