WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

விழுதல் என்பது எழுகையே... பகுதிகள் 14-15  எழுதுபவர் டென்மார்க் திருகே.எஸ்.துரை அவர்கள்

விழுதல் என்பது எழுகையே…. தொடர் 14 - 15


எழுதியவர் டென்மார்க் துரை அவர்களின் அறிமுகத்துடன் தொடர்கிறது.


அலைகள் டென்மார்க் துரை


கடந்த 45 வருடங்களாக எழுதி வருகிறார்.. சமீபத்தய இருபது வருடங்களாக தினசரி எழுதுவதும் பல நூறு பக்கங்கள் படிப்பதும், மொழி பெயர்த்து தமிழில் எழுதுவதும் தினசரி ஐந்து மணி நேர வாழ்வியற் கடமை..


109 மேடை நாடகங்கள் ... எழுதி இயக்கியது.. இவருடைய நூறாவது நாடகத்தில் நடித்தவர்கள் எண்ணிக்கை 100.


11 நூல்கள் வெளியாகியுள்ளன.. நாவல்கள் 3 சிறுகதைத் தொகுப்பு 1, கவிதை 1, மற்றையவை கட்டுரை நூல்கள்.


மூன்று திரைப்படங்களை தயாரித்து திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். பூக்கள், இளம்புயல், உயிர்வரை இனித்தாய்.


அலைகள் இணையத்தின் ஆசிரியர், ஐ.பி.சி டென்மார்க் செய்தியாளர்..


பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர், சமுதாயவியல் உதவியாளர். மனைவி பாடசாலை உதவியாளர், மூன்று பிள்ளைகள்.. மகன் வஸந்த் டென்மார்க் ஒல்போ பல்கலைக்கழக விரிவுரையாளர், இசையமைப்பாளர் திரைப்பட நடிகர், மகள் அர்ச்சனா பைலட் - பின்னணிப் பாடகி, மகள் மிதிலா உயர்நிலைக்கல்வி மாணவி.


தகவல்

திரு.இக.கிருட்ணமூர்த்தி

வி.எ.எ வெளியீட்டு இணைப்பாளர்

-------------------------------------


தொடர் 15 எழுதியவர் திரு. டென்மார்க் துரை


தொடர்கிறது விழுதல் என்பது எழுகையே….


சீலன் இப்ப நான் உன்னைத் தள்ளிவிட்டால் என்ன செய்வாய்...?

மௌனம்...

இல்லை நீ என்னைத் தள்ளிவிட்டால்...?

சீலன் அதற்கும் பதில் சொல்லவில்லை...

இந்த மௌனம்தான் நம்பிக்கை.. உன்னை நானும் என்னை நீயும் தள்ளிவிடமாட்டம் என்ற நம்பிக்கையிலதான் இந்தளவு உயரத்திற்கு வந்திருக்கிறம்..

உனது காதலி பத்மகலா.. இந்த நாட்டு அகதி வாழ்வு.. தாயகம் என்று ஆங்கங்கு சிதறிக்கிடக்கும் சிக்கல்களை வெற்றிகொள்ள உனக்கும் இப்படியொரு நம்பிக்கைதான் அவசியம்..

வா கொஞ்சம் நடப்பம்... இந்த உச்சிப்பகுதியைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமோ..?

இல்லை..

அருகில் இருந்த குன்றில் இருந்து கொண்டு.. நெடு நேரம் ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

சீலன் றிச்சாட் பெய்ன்மானை எதாவது கேள்விப்பட்டிருக்கிறியா..?

தெரியாது..

உன்னைப்போலத்தான் அவனும் ஒரு புலம் பெயர்ந்த மனிதன்.. அமெரிக்க யூதன்.. உலகப்புகழ் பெற்ற வேதியல் விஞ்ஞானி.. பல கண்டுபிடிப்புக்களுக்கு சொந்தக்காரன்.. நோபல் பரிசு பெற்றவன்.. இப்பிடி அவன் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம்...

சேர் நான் மெடிக்கல் பக்கல்டி... பயோ சயன்ஸ்.. உங்களுக்கும் தெரியும்தானே...

அதுதான் என்னுடைய கவலை... நீ என் டாக்டருக்கு படிக்க வேணும்.. டாக்டராகவேணுமெண்டு விருப்பமா..?

இல்லை.. பெற்றோருக்காக.. சமூகத்துக்காக..

ஏன் குடும்பத்துக்கு ஒரு பெருமை தேட என்று உண்மையைச் சொல்ல மறுக்கிறாய்...?

நல்லவேளை ஆரோ ஒருதன் உன்னைக் காட்டிக்கொடுத்து பூஸா முகாமுக்கு அனுப்பினது.. இல்லாவிட்டால்.. போலிக் கௌரவத்திற்கான ஒரு தப்பான டாக்டர் இந்த சமுதாயத்திற்கு வந்திருப்பான்.. ஒப்புக் கொள்கிறாயா..?

ஓம்..

உண்மை... மகிழ்ச்சி தருது... தாங்ஸ்... நீ டாக்டரா வாறதைவிட வேறு ஏதோவா வரப்போகிறாய்.. காலம் அதுக்குத்தான் வழி காட்டுது... சிறையில் இருந்தபோதாவது சிந்தித்துப் பார்த்தியா..?

சீலன் அமைதியாக இருந்தான்..

ஓ..கே.. இந்தப் புலம் பெயர் வாழ்வு பற்றி நீ என்ன நினைக்கிறாய்...?

எல்லாரும் சொல்கிறார்கள்... இது அவலமான வாழ்வென்று.. அடிமை வாழ்வென்று... எங்களுடைய அழகான தேசத்தை இழந்துவிட்டோம்.. அங்கை இருந்தா நாம் எவ்வளவு சந்தோஷமா இருந்திருப்பம்... இதுதான் இதுவரை நான் கேட்ட புலம் பெயர் ஒலி..

எல்லோரும் சொல்வதாலை ஒரு கருத்து உண்மையாகிவிடாது... உன்னுடைய கருத்தென்ன..

மௌனம்..

இதை அவலமாக பார்க்கிறதைவிட இந்த வாழ்வை வெற்றியாக மாத்த வேண்டுமென்று யாராவது சிந்திக்கிறார்களா..?

நான் சந்திக்கவில்லை...

அப்பிடி ஒருதனை நான் சந்திக்க ஆசைப்படுறன்... ஏன் அவன் நீயாக இருக்கக்கூடாது..

சேர் பத்மகலா..

புண்ணாக்கு.. முதல்ல முதுகில இருக்கிற பழைய மூட்டைகளை உருட்டிவிடு..

இந்த வாழ்வை நம்பிக்கையுள்ள வாழ்வாக மாற்றலாம் என்ற இரகசியத்தை கண்டு பிடித்து ஒரு புது விளக்கை ஏற்றும் மானிடன் தேவை.. அவனுக்கான வெற்றிடம் காலியாக இருக்குது.. ஏன் நீ அவனாக இருக்கக்கூடாது..?

சீலன் திடுக்கிட்டான்... தொங்கும் வண்டியொன்று புதிதாக வந்து நிற்க யாரோ இரண்டுபேர் இறங்கினார்கள்... அவர்கள் தமிழர்கள் அல்ல..

வா.. இன்னம் கொஞ்சம் நடப்பம்..

சேர் றிச்சாட் பெயின்மானைபற்றி ஏதோ சொல்ல வந்தியள்.. சொல்ல இல்லை..

உனக்கு ஆர்வம் இருந்தால் கேட்பாய்... அதுதான் வெயிட்பண்ணி நடந்தனான்.. உனக்கு ஏதோ ஒரு பிரகாசமான வாழ்விருக்கு அதுதான் அதை அறிய ஏதோ ஆவல் வந்திருக்கு.. பலபேருக்கு வாறதில்லை..

சீலன் ஒரு சுவீங்கத்தை வாயில் போட்டுக்கொண்டான்... அல்ப்ஸ் காற்றோடு சுவீங்கத்தை குழைத்து சப்ப இனம்புரியாத புதிய சுகமாக இருந்தது.. கதை கேட்க தயாரானான்.

அமெரிக்காவின் சலஞ்சர் ராக்கட்டுக்கள் பல தடவைகள் ஆகாயத்தில் வெடித்துச் சிதறியதைக் பேப்பரிலை படிச்சிருப்பாய்..

ஓம்...

அதந்த ராக்கட்டுக்கள் புவியீர்ப்பை தாண்டும்போது ஏன் வெடிக்கின்றன என்ற காரணத்தை கண்டு பிடித்துத் தரவேண்டுமென றிச்சாட் பெய்மனிடம் கையேந்தி நின்றார் அமெரிக்க முன்னாள் அதிபர் றொனாட் றேகன்.. அது தெரியுமோ..

இல்லை..

ஒரு நாட்டு அதிபரே தன் வீடு தேடிவந்து உதவி கேட்குமளவுக்கு புலம் பெயர் வாழ்வை சிகரங்களுக்குக் கொண்டுபோக முடியுமெண்டு காட்டியது அவன்தான்..

இவையெல்லாம் தெரியாது அருகில் இருக்கும் மனிதர்களுடன் சேர்ந்து கண்ணீர்க்கடலில் பாய்ந்து நீச்சலடித்ததை நினைக்க சீலனுக்கு சிறிது நாணமாக இருந்தது.

இதையேன் சொல்லுறன் தெரியுமோ.. புலம் பெயர் வாழ்வால் சிகரங்களைத் தொடலாம்..

குமாரவேல் கதையைத் தொடர்ந்தார்...

அப்போது றிச்சாட் பெயின்மான் றொனால்ட் றேகனைப் பார்த்து சிரித்தான்..

ஏன்...?

அவன் இறப்பதற்கான நாட்கள் குறிக்கப்பட்டுவிட்டன.. புற்றுநோய் அவன் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேலும் சில தினங்களே இருந்தன... இது றேகனுக்குத் தெரியாது... அதுதான் சிரித்தான்..

நான் இறக்கப்போகிறேன்... மனைவி பிள்ளைகளுடன் இறுதி நாட்களை கழிக்கப் போகிறேன்... பிளீஸ் வேறு யாரையாவது பாருங்கள் என்று அவன் சொன்னானா.. இல்லை... கண்டு பிடித்தான்.. அதுதான் றிச்சாட் பெயின்மான்..

சேர் ராக்கட் ஏன் வெடித்தது...?

ராக்கட்டுக்களின் எரிபொருள் தாங்கி சதுரவடிவில் அமைக்கப்பட்டிருந்தது.. ராக்கட் இரட்டிப்பு வேகம் எடுக்க விளிம்புப்பகுதிகளில் ஏற்படும் உராய்வு காரணமாக வெப்பம் அதிகரித்து பெற்றோல் ராங் வெடித்துச் சிதறுகிறது.. ராங்கின் வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும்... இதுவே அவனுடைய கண்டு பிடிப்பு..

மனிதன் ஆபத்தின்றி ஆகாயத்தைக் கடக்க உதவியதே அவன் வாழ்வில் எஞ்சியிருந்த ஒரு சில நாட்கள்தான்.

சீலனின் தேகம் புல்லரிப்பது போன்ற உணர்வு...

கண்டு பிடித்ததும் அவன் இதே மலை உச்சிக்குத்தான் மனைவி பிள்ளைகளுடன் வந்தான்... இந்த ஆகாயத்தைப் பார்த்துச் சிரித்தான்.. தான் ஒரு சில நாட்களில் இறக்கப்போகும் இரகசியத்தை இந்த மலை உச்சியில் வைத்துத்தான் அவர்களிடம் முதல் தடவையாகச் சொன்னான்..

சேர் அவன் தப்பியிட்டான்தானே..? சீலனில் சிறிய பதட்டம்..

நோ.. இது உபகதை இல்லை.. உண்மைக்கதை.. சொன்னபடியே அவன் சில தினங்களில் இறந்து போனான்..

சில நொடிகள் நிசப்தம்...

அவனுடைய சிரிப்பும், நம்பிக்கையும் இந்த மலை உச்சியிலைதான் கலந்திருக்கு அதுதான் உன்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்து இந்தக் கதையைச் சொன்னனான்..

இந்தக் காற்றைச் சுவாசி.. அப்பதான் உன்னுடைய விடிவை இன்னொருவனின் கையில் கொடுத்துவிட்டு வெளிநாட்டில் நின்று அழும் உனக்கும் ஒரு புது நம்பிக்கை பிறக்கும்..

அல்ப்ஸ் மலையில் முட்டி மோதிய அந்த விஞ்ஞானியின் குரல் எங்கோ எதிரொலிப்பது போன்ற பிரமை..

சீலன் வாழ்க்கை முடியப்போற கடைசி நிமிடத்தில கூட அவன் இந்த வாழ்க்கையைப்பற்றி கண்ணீர் விட்டானா..?

இல்லை...

ஏன்...?

இருக்கிற நாளை சரியாகப் பயன்படுத்தத்தான் இந்த வாழ்க்கை நாட்கள் தரப்பட்டிருக்கு.. மற்றவர் உயிர் கொடுத்து தேடும் விடிவு என்றோ வரும் என்ற காத்திருத்தலுக்காக இல்லை..

வெளிநாடு வந்தும் அதே செக்குமாட்டு வாழ்வை வாழ்ந்து அதே பழைய கண்ணீரைத்தான் விட வேண்டுமென்றால் உன் வாழ்க்கைக்கு அர்த்தமென்ன.. அந்தமான் தீவில நின்று நீ அழுதிருக்கலாமே..?

வருமானம்...?

நல்ல வருமானமும் வேணும்.. இடைக்கிடை அழவும் வேணும்.. தாய்நாட்டுக்கு விடிவும் வேணும்.. இப்ப விளங்குதோ பிழை எங்கை இருக்கெண்டு...?

தெரியுது.. நல்லவேளை உங்களைச் சந்தித்திருக்காவிட்டால் கண்டுபிடித்திருப்பனோ தெரியாது..

சரி பத்மகலாவை என்ன செய்யப்போறாய்...? அவளைக்காப்பாற்றத்தான் நீ பிறந்திருக்கிறாயா.. இப்படி உலகம் முழுதும் எத்தனை பத்மகலாக்கள்.. இவர்களை காப்பாற்றியவர்கள் இறுதியில் எட்டித்தொட்ட இலக்குகள் என்ன..? அவர்கள் எல்லாம் இப்போது எங்கே..?

சீலனுக்கு சிறிது வெட்கமாக இருந்தது, சமாளித்துக்கொண்டான்.. எல்லோராலையும் சாதிக்க முடியாது.. பத்மகலாக்களும், சீலன்களுமாக நிறைந்து கிடப்பதுதானே இந்த வாழ்க்கை..?

சபாஷ்.. நீ அப்படிப்பட்ட ஒரு சாதாரண சீலனா.. இல்லை அதிலிருந்து வேறுபட்ட ஒருவனா.. முதலில் அந்தக் கேள்விக்கு விடை தேடு.. தற்ஸ்சோல்... புறப்படலாமா..?

மலை உச்சிக்கு வந்த ரயில் பெட்டி ஒன்று கீழே இறங்கத்தயாரானது.. இருவரும் ஏறிக்கொண்டனர்...

சீலனைப்பிடித்திருந்த எல்லாச் சுமைகளும் அல்ப்ஸ் மலையில் இருந்து ஒவ்வொன்றாகக் கீழே விழுந்து கொண்டிருந்தன..

மலையடிவாரத்தைத் தொட முன்னரே சீலன் முற்றாகவே மாறிப்போயிருந்தான்...

சேர்..

சொல்லு...

நான் செக்கு மாடில்லை வித்தியாசமானவன்...

நீங்க அடுத்த முறை சுவிஸ் வரும்போது என்னில அந்த மாற்றம் தெரியும்..

ஆயிரத்தில் ஒருவனால்தான் இயல்பு வாழ்வில் இருந்து புதுமை வாழ்வை முன்னெடுக்க முடியும்.. உனக்குள் அந்த வரம் மறைந்திருக்கிறது.. கண்டுபிடி..

நன்றி சேர்..

சீலன் நான் இரவு கனடாவுக்கு பிளைட் எடுக்கிறன்.. பத்ம கலாவுக்கு ஏதாவது எழுத்தித்தாறதெண்டால் தா.. அவளையும் உனக்காக ஒரு தடவை சந்தித்துப் பேசுறன்..

சீலனின் கண்களில் ஒரு சொட்டு நீர்..

கண்ணீரைத்துடை... நீ கடிதத்தை எழுது.. நான் குளித்து பிளைட்டுக்கு ரெடியாகிறன்..

விமான நிலையம்... பிரியும் நேரம்..

சீலன் காதல் என்றால் உன்னுடைய கரத்தை அவள் பிடிக்க வேணும்.. அவளுடைய கரத்தை நீ பிடிக்க வேணும்..

அவள் சமுதாயத்திற்கும், குடும்பத்துக்கும் பயந்து கோழையா இருக்க நீ மட்டும் படாதபாடுபட்டு அவளுடைய கரத்தைப் பற்றினால் அது காதல் இல்லை.. பத்மகலாவுக்கு முகவரியிட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டார்.

காதலை வெல்வதல்ல வாழ்க்கை... வாழ்க்கையை வெல்வதால் காதலுக்கு மகுடம் சூடுவதே வாழ்க்கை.. குட் பாய்..

நேரமிருந்தால் முருகன் ஓர் உழவன் என்ற நாவலிலை நிலாவொளியும் தத்துவ விசாரணையும் என்றொரு அத்தியம் இருக்கு படிச்சுப்பார்..

குமாரவேல் அவனை அன்போடு கட்டித்தழுவினார்.. திருவருள் குரு வடிவில் அவனை அணைத்துவிட்டது போன்ற பிரமை..

விழுதல் ஆரம்பித்ததோ என்னவோ சூரியன் பொத்தென விழுந்தது..

நாளைய காலை ஒரு புதிய சீலனைப் பார்க்கப்போகிறேன் என்ற அவசரத்தில்தான் அப்படி விழுந்ததோ..?


தொடரும்... 17-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பகுதி 14 கதை தொடர்கிறது… 


கனடாவுக்கு தொலைபேசியில் கதைத்த பின்பு எதிலுமே பிடிப்பில்லாமல் நடந்து கொண்டிருந்தான் சீலன்.

அவன் முன் சொர்க்கத்தின் பிம்பமாக சுவிற்சலாந்து...


வாழ்க்கைப் பாரம் தோள்களை அழுத்தியதால் அந்த மூட்டையை சுமக்க மனமின்றி இயற்கையை அவதானித்தன கண்கள்..

நீர் சுனைகளில் இருந்து விசுறும் தண்ணீர்.. ஆகாயத்தை நோக்கி பொழியும் மழையல்லவா...

நீரைக்கிழித்தோடும் வண்ண வண்ணமான இயந்திரப்படகுகள், பாற்குடம் பொங்கியது போல பொங்கிச் சிரிக்கும் குளிர்நாட்டில் பிறந்த குமரிகள்.. நல்ல மனம்போல பூத்து காற்றில் கன்னத்தோடு கன்னம் உரசும் மலர்க் கொத்துக்கள்...

பூமிப்பந்தில் கோடை வரைந்த ஓவியமாய் சுவிஸ் நாடே பூப்படைந்திருந்தது..


தூரத்தே தெரியும் அழகான அல்ப்ஸ் மலையின் கூரிய சிகரங்கள்தான் அந்த இயற்கை மகளின் மார்பகங்களோ...

அவனுக்காக பருவமெய்தி நிற்கும் அந்த அழகியைப் பார்க்காது அன்றாடப் பிரச்சனை என்னும் சின்னச்சின்னப் பிணங்களை மனதில் சுமந்து குருடனாகிவிட்டான் சீலன்..


சுவிஸ் மண்ணில் கால்வைத்த பின் இப்படியொரு கற்பனை வராவிட்டால் அவன் மனித ஜடம்.. என்று நோர்வேஜிய கவிஞன் ஒருவன் சொன்னது நினைவில் வந்தது..


திருக்கை வாலினால் யாரோ அவன் முதுகில் குறியிழுப்பது போன்ற வலியொன்று குருவி வாணமாய் ஓடி மறைந்தது..

ஒரு யாழ்ப்பாணத்து கிடுகு வேலிக்குள் செருகிவைத்த கொக்கச் சத்தகம்போல அவன் மனதும் வளைந்து கிடப்பது அந்த இயற்கையின் வெளிச்சத்தில் தெரியாமல் தெரிந்தது.


இதுதான் சுவிஸ் மண்ணில் கால் வைத்த பின் அவனுக்குத் தெரிந்த முதல் வெளிச்சம்..


பத்மகலா, வில்லனான முரளி, காதல், பறிபோன செல்லாக்காசு டாக்டர் படிப்பு, பல்கலைக்கழகம், காட்டிக்கொடுப்பு, சிறை, போராட்டம், புலப் பெயர்வு என்று இதுவரை சுழன்றுவிட்ட தனது வாழ்வை ஒரு தடவை ஒரே அச்சாணியில் கோர்த்து கடகடவெனச் சுழலவிட்டான்..


செக்குமாடொன்று சுத்தோ சுத்தென்று சுற்றுவது தெரிந்தது.. இப்படியே விட்டால் இந்த மாடு திரும்பத்திரும்ப இதே வழியில்தான் சுற்றும்...


புலம் பெயர்ந்தும் தோள்களை அழுத்தம் செக்கிலிருந்து வாழ்வை விடுவிப்பதே சரியென்று மனதில் கேட்டது ஓர் ஒலி...

வெறுமையாகக்கிடந்த ஒரு வீதியோர வாங்கில் அமர்ந்து தன்னை மறந்துவிட்டான்..


எல்லாம் நின்றுவிட்டது போன்ற பிரமை.. ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில் நின்று மனது வாழ்வைப் பார்த்தது...

சாப்பாட்டு மேசையில் விரித்திருக்கும் கறி கொட்டிய கடாதாசியை சுருட்டிக் குப்பையில் வீசியதைப்போல மனது இதுவரை நடந்த அனைத்தையும் சுருட்டிக் குப்பையில் வீசிவிட்டு.. ஒரே நொடியில் புத்தம்புதுப் பளிங்கு மேசை போல பளபளத்தபடி சரேலெனச் சுழன்றது...


எல்லாம் தொலைந்தது.. பாரமில்லாத தேகம் பஞ்சு போல இருந்தது.. இனி வீடு போகலாமா..?

பனம்பழம் விழப்போகும் நேரம் பார்த்து பறந்துவரும் காகம்போல அவன் வீட்டுக்குப் போக நினைக்கவும் பேருந்து வண்டி ஒன்று ஏன் அவன் முன்னால் நின்றது..?


வரவேண்டிய வண்டி வந்துவிட்டது.. பாய்ந்து ஏறி.. உள்ளே நடந்தான்..


ஆங்காங்கு வெள்ளை நிற மனிதர்கள், கிழவிகள்.. கிழவர்கள்... நடுத்தர வயது.. இளம் பெண்கள் சிலர்..

தனியாக இருக்க விரும்பினான்... ஆசனங்கள் எதுவும் இல்லை...


யாரோ ஒருவரின் பக்கத்தில் அமரத்தான் வேண்டும்... அவனை ஒரு இளம் பெண் கடைக்கண்ணால் பார்த்தாள்..

அவள் விழிகள் கண்டிப்பாக அவன் தனக்கு அருகில்தான் இருக்கப்போகிறான் என்று கணக்குப்போட்டிருக்க வேண்டும்...


அவளுக்கு அடுத்த ஆசனத்தில் தலையில் தொப்பி, குறுந்தாடியுடன் அவனைப்போலவே ஒருவர்.. தமிழராக இருக்கலாம்... ஆவலை அடக்கி, அவளை ஓர் எட்டுத்தாண்டி அவருக்குப் பக்கத்தில் இருந்தான்...


எதிரே வந்த பச்சை விளக்கில் வண்டி வலது பக்கமாகத் திரும்பியது...


அப்போதுதான் அந்த மனிதரைத் திரும்பிப் பார்க்க வசதியாக இருந்தது..


இப்படி எத்தனை திருப்பங்கள் வாழ்வில்...


எங்கோ பார்த்தபோலவும்... பார்க்காதது போலவும் இருந்தது... நினைவுக்கதிர்களால் உருவத்தைப் பற்ற முடியவில்லை... உருகிய பனிக்கட்டியாய் வழுகியது.


இப்போது பேருந்து மறுபக்கமாகத் திரும்பியது...


இது அந்த மனிதர் அவனைப் பார்க்க வேண்டிய திருப்பம்... பார்த்தார்... அவரின் நினைவுக்கதிர்களும் ஒரு படி முன்னே நகர்ந்தது.. பிடிக்க முடியவில்லை..


இப்படிப் பல திருப்பங்கள் இங்கும் அங்குமாக... இருவருக்குமே தெரிகிறது ஆனால் பற்றிக்கொள்ள இயலவில்லை.

தீர்க்கமான கண்கள்.. காலத்தைத் துழாவி ஓடும் திறப்பண அலகுகள் போன்ற முன்னேறும் பார்வை... கட்டையும், நெட்டையுமில்லா உருவம்... திராவிட நாசி.. இந்த மனிதரை எங்கோ பார்த்திருக்கிறேனே..


அவர் முந்திக்கொண்டார்... நீ சீலன்தானே... ஜப்னா யூனிவர்சிட்டி மெடிக்கல் பக்கல்டி..


அதற்குமேல் தாமதிக்க வேண்டியதில்லை அவருடைய குரலை வைத்து பிடித்துவிட்டான்.. சேர் நீங்கள் புரொபெசர் குமாரவேல்தானே...


இதே சீன் யாழ்ப்பாணத்து 751 இலக்க பஸ்சில நடந்திருந்தா ஆளையாள் அடையாளம் கண்டிருப்பம்.. மனிதர்கள் ஒன்று பேருந்துகள் வேறு.. கொய்யாப்பழம் மாமரத்தில தொங்கினா அடையாளம் காண சிரமாத்தான் இருக்கும்.

நீங்கள்...


சுவீடன் உப்சலா பல்கலைக்கழகத்தில ஒரு வாரம் அதிதி பேராசிரியரா பணியாற்றிவிட்டு போனவாரம் சுவிற்சலாந்து வந்தனான்.. நாளைக்கு சுவிஸ் அல்ப்ஸ் மலை.. அடுத்த நாள் கனடா பயணம்..

அப்ப நீங்கள் தங்கியிருக்;கிறது...


ஹோட்டல் அல்ப்ஸ்.. நான் எப்ப யூரோப் வந்தாலும் இந்த அழகான நாட்டை ஒரு தடவை பார்க்காமல் போறதில்லை..

பாற்கடலிலை இருக்கிற மீனுக்கு தான் சாகா வரம் தரும் பாலுக்குள்ள இருக்கிற ரகசியம் தெரியாது.. அருகில இருக்கிற பாசியைக் கடிச்சு ஒரு நாள் செத்து மிதக்கும்.. அதுபோலதான் சுவிசிலை இருந்தும் அதன் அழகோடு சேர்ந்து வாழத்தெரியாத ஒரு ஜென்மம் நான்.. சீலன் வரட்சியாகச் சிரித்தான்.


ஆனாலும் அன்றொருநாள் அவர் சொன்ன சித்தாந்தக் கருத்தையே மறந்துவிடாமல் இன்றைக்கு சீலன் உதாரணமாக சொன்னது அவருக்கு திருப்தியாக இருந்தது..


உதாரணம் நல்லாயிருக்கு...


இருந்தாலும் இண்டைக்குத்தான் இந்த நாட்டின் அழகு என்னுடைய கண்களுக்குத் தெரிந்து.. மனதலில் ஒரு விடுதலை கிடைத்தது.. அந்த நேரம் பார்த்து நீங்கள் வந்திருக்கிறியள்...


பனம்பழம் கனிந்து விழப்போக... அந்த நேரம் பார்த்து அதிலிருக்க காகம் பறந்துவரும் அது இயற்கை..

சேர் தற்செயலா உங்களைப் பார்த்த உடனே அதையும் நான் நினைத்தனான்...


இதுதான் விழுதல் என்பது... இதைப்பற்றிப் பேசப்புறப்பட்டால் ஒரு நாள் போதாது.. நாளைக்கு அல்பஸ் மலையைப் பார்க்கப்போறன்.. எப்பிடி உனக்கு நேரம்..


உங்களைப் பார்த்தாப்பிறகு ஏது நேரம்..? இந்த நொடியில இருந்து இந்த நாட்டைவிட்டு நீங்கள் புறப்படும்வரை உங்களோடைதான்..


எவ்வளவோ கதைக்க வேண்டியிருந்தது..


தன் வாழ்வில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சொல்லி அவரிடம் யோசனை கேட்கவேண்டும் போல மனது துடித்தது சீலனுக்கு.

அடுத்தநாள் காலையில் அல்ப்ஸ் மலையின் உச்சி நோக்கி போவதற்காக தொங்கும் காரில் ஏறிப்புறப்பட்டபோதுதான் அவனுள் கிடந்த முட்டு மெல்ல மெல்ல அவிழ ஆரம்பித்தது..


இதுவரை அவனுடைய வாழ்க்கையென்ற ஆகாயத்தை மறைத்துக்கிடந்த முகில்களை விலக்கிக் கொண்டு வானமாம் மாமலையைக் கண்கள் பரவசத்துடன் பார்த்தன..


மறுபடியும் கீழே பார்த்தான் மலையடிவாரம் பாதளம்போல பயம் காட்டியது..

சுவிஸ் அல்ப்சின் உச்சிப்பகுதிக்கு வந்து சிறிது மூச்சு விட்டபோது சிகரட் குடித்தது போல வாயில் இருந்து மெல்லிய புகை..

யாருமே இல்லாத முகடு.. அங்கே தனியாக இருவர்..


தொடரும் பகுதி 15

-----------