WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-6

பாடசாலை அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ள, 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது.

இது குறித்து நேற்றைய தினம் அம்பாறை வலய கல்வி அலுவலகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. கடந்த 18 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்ற வலய கல்வி கணக்காய்வாளர்களின் கூட்டத்தில் கொடுப்பனவை இடைநிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அம்பாறை வலய கல்வி அலுவலகத்தின் கணக்காய்வாளர் எல்.ரி. சலித்தீன் ZEO/AAC/CC/01 என்ற கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அதிபர்கள், பௌத்த குருகுல பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்களுக்கு வழங்கும் சம்பள துண்டுச்சீட்டில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அது சம்பளத்தில் கிடைக்காது எனவும் கடிதத்தில் கணக்காய்வாளர் கூறியுள்ளார்.

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில்  நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால் ,மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள்.

உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட நாம் மத்தியில் தங்கி நிற்கும் நிலையில்,வடக்கு மாகாணத்தில் ஆளுநரை பயன்படுத்தி இப்போது புதிய நாடகங்கள் இங்கு நடைபெறுகிறது.

ஆரியகுளத்தில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வது, அரசியலமைப்பை மீறுகிறது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆரிய குளம் யாருடைய சொத்து உள்ளிட்ட பல கேள்விகளை ஆளுநர் இப்போது முன்வைத்துள்ளார்.

நாங்கள் இங்கு கேட்கின்றோம்,  இலங்கை போன்ற நாட்டிலே மத நல்லிணக்க பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே அதனை பகுத்தாராய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று நாவற்குழியில் விகாரை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரிய குளத்தில் மத ரீதியான குழப்பங்களை அரசு ஏற்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இது நடக்கிறது. முன்னரும் கூட குளத்தின் நடுவில் மத நல்லிணக்க மண்டபத்தை கட்டுவதற்கு தேரர் ஒருவர் மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் அமைப்பில் உள்ளதை இதற்கு மட்டுமே பயன்படுத்து நோக்கில் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார். வேண்டும் என்றால் பகிரங்க வாக்கெடுப்பை எடுக்கட்டும். இங்கு என்ன செய்வது இப்படி ஒரு மத நல்லிணக்கம் வேண்டுமா என்று. பொது மக்களுக்கு தேவை நிம்மதி. அவர்களுக்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை இல்லை” என்றார்.

பிரித்தானிய மகாராணி மறைவிற்கு பின்னர் நாட்டின் பணத்தாள்களில் (பவுண்டுகள்) என்ன மாதிரியான மாற்றங்கள் வரும் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

அதன்படி மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு அவரது மகன் சார்லஸ் அரச பொறுப்புக்கு வருவார் என்றே அரண்மணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடக்கும் பட்சத்தில் நாட்டில் பயன்படுத்தப்படும் பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும்.

ஏனெனில் தற்போது மகாராணியின் முகமே அதில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் அரச பதவிக்கு வரும் பட்சத்தில் அவர் முகம் தான் பவுண்டுகளில் பதிக்கப்படும்.

பின்னர் பழைய நாணயங்கள், பணத்தாள்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, புதிய நாணயங்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்படும்.

பழைய நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் சேதமாகும் போது மெதுவாக புழக்கத்தில் இருந்து அகற்றப்படும், இருப்பினும் அவை ஒரு குறிப்பிட்ட திகதி வரை சட்டப்பூர்வமாக இருக்கும் (மகாராணி மறைவிற்கு பின்னரே இது உறுதிப்படுத்தப்படும்).

இந்த நாணய மாற்றங்கள் பிரித்தானியாவில் மட்டும் நிகழாது. கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல நாடுகளின் நாணயங்களிலும் மாற்றங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருளின் விலையேற்றம் உட்பட முக்கிய பிரச்சினைகளை மையப்படுத்தி - அதனை கண்டித்து நாட்டின் பிரதான நகரங்களில் மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி) ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

அதன்படி குறித்த ஆர்ப்பாட்டங்களை இன்றும், நாளையும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இன்றைய தினம் மகரகம, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நீர்கொழும்பு, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேனை ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் பதுளை, திருகோணமலை, பாணந்துறை, குருநாகல் மற்றும் சிலாபம் உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் நாளைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.