WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

விழுதல் என்பது எழுகையே... பகுதிகள் 16-17  எழுதியவர் அவுஸ்திரேலியா  
 திரு. முருகபூபதி அவர்கள்

விழுதல் என்பது எழுகையே... பகுதி 16  எழுதயவர் அவுஸ்திரேலியா   

 திரு. முருகபூபதி அவர்கள்.


பகுதி 16 எழுதியவர் திரு.முருகபூபதி அவர்களின் அறிமுத்துடன் தொடர்கிறது


இலக்கியப்படைப்பாளி ஊடகவியலாளர் லெட்சுமணன் முருகபூபதி

 

இலங்கையில் நீர்கொழும்பில் 1951 ஆம் ஆண்டு பிறந்த முருகபூபதி 1970 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். அக்காலப்பகுதியில் வீரகேசரி நாளிதழின் நீர்கொழும்பு பிரதேச நிருபராகவும் பணியாற்றி ஊடகவியலாளரானவர்.

1972 இல் இவரது முதலாவது சிறுகதை கனவுகள் ஆயிரம்  மல்லிகை இதழில் வெளியானது. 1975 இல் இவரது முதலாவது கதைத்தொகுதி சுமையின் பங்காளிகள்நூலுக்கு இலங்கையில் தேசிய சாகித்திய விருது கிடைத்தது.

1977 இல் வீரகேசரி நாளேட்டில்  இணைந்து முதலில் அங்கு ஒப்புநோக்காளராகவும் பின்னர் துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். வீரகேசரி வாரவெளியீட்டில் ரஸஞானி என்ற புனைபெயரில் இலக்கியப்பலகணி என்ற பத்தி எழுத்தை தொடர்ந்து வாரம்தோறும் எழுதிய முருகபூபதிரிஷ்யசிருங்கர் என்ற புனைபெயரில் கலை (இசை, நடனம், நாடகம், சினிமா) சார்ந்த விமர்சனங்களும் எழுதியிருப்பவர்.

1984 இல் தமிழ்நாட்டுக்கும் 1985 இல் சோவியத் நாட்டுக்கும் பயணித்து பயண இலக்கியத்தொடர்களை எழுதினார்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து கொழும்பு மாவட்ட செயலாளராகவும் நீர்கொழும்பு இலக்கியவட்டத்தின் செயலாளராகவும் இயங்கியவர்.

1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த முருகபூபதி தொடர்ந்தும் பல்வேறு சமூகப்பணிகளுடன்  கலை இலக்கியப்பணிகளையும் தொடருகின்றார்.

2002 இல் இவரது முதலாவது நாவல் பறவைகள் நூலுக்கு தேசிய சாகித்திய விருதைப்பெற்றார்.

இதுவரையில் சிறுகதை, நாவல், கட்டுரை, பயண இலக்கியம், கடித இலக்கியம், சிறுவர் இலக்கியம், நேர்காணல், முதலான துறைகளில் 20 நூல்களை எழுதியிருக்கிறார். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாகியிருக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் கழகம், தமிழர் ஒன்றியம், தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை மாணவர் கல்வி நிதியம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் முதலான அமைப்புகளை தோற்றுவிக்க முன்னின்று உழைத்தார்.

இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு 1989 முதல் உதவி வரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஸ்தாபகருமான முருகபூபதி உருவாக்கிய அவுஸ்திரேலியா தமிழ் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இங்கு ஆண்டுதோறும்  எழுத்தாளர் விழாக்களை நடத்திவருகிறது.

இவர் மேற்கொண்ட பல சமூகப்பணிகளுக்காக அவுஸ்திரேலியாவில் சில பொது அமைப்புகளின் விருதுகளையும் விக்டோரியா மாநில பல்தேசிய கலாசார ஆணையத்தின் விருது மற்றும் டெறபின் மாநகர சபையின் சிறந்த பிறஜைக்கான விருது என்பவற்றையும் பெற்றுள்ளார்.


எழுத்தாளர் பற்றிய தகவல்கள்

திரு.இக.கிருட்ணமூர்த்தி - வெளியீட்டு இணைப்பாளர்

திரு.எலையா முருகதாசன் - ஒருங்கிணைப்பாளர்


கதை தொடர்கிறது பகுதி 16 


பேராசிரியர் குமாரவேலை வழியனுப்பிவிட்டு விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்தான் சீலன். விமான நிலைய கட்டிடத்தை திரும்பிப்பார்த்தான். அதன் பிரமாண்டத்தின் முன்னால் தான் ஒரு சிறிய புள்ளிதானே என நினைத்தான்.

விமானங்கள் பயணிக்க ஓடுபாதையில் அவை நகரும்பொழுதும் தரையிறங்கும்பொழுதும் பாதுகாப்பு பணிகளில் தயாராக நிற்கும் ஊழியர்கள், விமானங்களை செலுத்தும் விமானிகள், முகம்சுழிக்காமல் இன்முகத்துடன் இயங்கும் விமானப்பணிப்பெண்கள், பயணங்களுக்கு தயாராகும் பயணிகள், தரையில் இறங்கும் பயணிகள், அங்கு அமைந்துள்ள உணவுச்சாலைகள், கோப்பி பார்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்பவர்கள்..... 

எல்லோருக்கும் உழைக்கும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும். விமானங்களும் விமான நிலைய கட்டிடமும் ஓடுபாதைகளும் அப்படியல்ல. மக்களால் இயங்குபவை. இயக்கப்படுபவை.

இலட்சக்கணக்கில் இந்த விமான நிலையத்தின் ஊடாக வெளியே வந்தவர்கள் உட்புகுந்து பறந்து சென்றவர்கள் அனைவரும் சில கணங்கள் நின்று மனித உழைப்பு பற்றி யோசித்திருப்பார்களா?

விமானத்தில்  ஏறும்  -    இறங்கும் அவசரம்தானே அனைவரது மனங்களிலும் வியாபித்திருக்கும்.

இன்று மட்டும் நான் ஏன் இப்படி யோசிக்கின்றேன்? சீலன் தனக்குள் கேட்டுக்கொண்ட கேள்விக்கு பதிலாக அன்று சந்தித்த பேராசிரியர் குமரவேலின் முகம்தான் வந்து நின்றது.

சில மணிநேரங்களுக்குள் அவர் சீலனின் மனதில் எத்தனை எண்ணக்கருக்களை விதைத்துவிட்டார்?

மரணிக்கும் வேளை நெருங்கியபொழுதும் அதற்காக அலட்டிக்கொள்ளாமல் இயங்கிய விஞ்ஞானி ரிச்சார்ட் கூட ஒரு யூத இனத்து அகதிதான். யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் விடுதலைவேண்டி களம் இறங்கிய இயக்கங்களின் தலைவர்களும் தமிழ்த்தேசியம் பேசிய பல்கலைக்கழக மாணவர்களும் அடிக்கடி உச்சரித்த சொல் யூதர்கள்.

யேசுவும் கார்ல் மார்க்ஸ_ம் யூத இனத்திலிருந்து வந்தவர்கள்தான். மருத்துவபீடத்தில் மாணவர் தலைவனாக வந்தபின்னர் தெரிந்துகொண்ட அரசியல் பத்மகலா மீதான காதலுக்குப்பின்னர் தன்னைப்பாதிக்கவில்லையே என்று சீலன் ஆழ்ந்து யோசித்தான்.

சுவிஸ் வந்த பின்னர் அடுத்தடுத்து தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை மனதில் அசைபோட்டவாறே பஸ்தரிப்பிடத்திற்கு வந்தான் சீலன்.

தன்னைக்காட்டிக்கொடுத்த முரளி, கனடாவுக்கு சென்றுவிட்ட காதலி பத்மகலா, எதிர்பாராமல் சந்தித்து விடைபெற்ற பேராசிரியர் குமாரவேல், தஞ்சமடைந்த அறையில் சந்தித்த தவம் அண்ணர், தவத்தின் நண்பர்கள் வட்டம், எதிர்பாராமல் திடீரென்று கிடைத்துவிட்ட புகலிடத்திற்கான அனுமதிக்கடிதம்.......

வாழ்க்கை எத்தனை மனிதர்களை எத்தனை அனுபவங்களை தருகின்றது. அனுபவங்களைத்தானே அந்த விஞ்ஞானியும் தனது புத்திக்கொள்முதலாக்கியிருக்கவேண்டும். அந்தச்சிந்தனையைத்தானே குமாரவேல் சேரும் மனதில் விதைத்துவிட்டு விடைபெற்றார்.

உனக்கும் கீழே வாழ்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற எழுதிவிட்டுச்சென்ற கவியரசர் கண்ணதாசனும் தனது வாழ்வில் எத்தனை அனுபவங்ளை சந்தித்திருப்பார். அவரும் அகதியாக நடோடியாக தன்னைப்போன்று அலைந்திருப்பின் யேசுகாவியம் மாத்திரமல்ல அகதிகளின் காவியமும் பாடியிருப்பார்.

சீலன் பஸ்ஸில் ஏறி தவத்தாரைப்பார்க்கச்சென்றான். தவமண்ணையிடம் மனம்விட்டுப்பேசுவதற்கு அவனிடம் பல விடயங்கள் இருந்தன. பத்மகலா கனடாவிலிருந்து பேசியது. பேராசிரியர் குமாரவேலரின் சந்திப்பு, அவர் குறிப்பிட்ட விஞ்ஞானி ரிச்சர்ட், பத்மகலாவை அடையத்துடிக்கும் முரளி.... இப்படிப் பல. தவத்தாரைச்சந்தித்தவுடன் எதிலிருந்து தொடங்குவது எதில் வந்து முடிப்பது என்று தனது மனதிற்குள்ளே ஒத்திகை நடத்தியவாறு பஸ்ஸிலிருந்து தெருவைப்பார்த்தான். நகரம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. பச்சைக்கம்பளம் விரித்ததுபோன்ற புற்தரைகளும் ஆங்காங்கே மரங்களும் செடிகளும் புதர்களும் நீரோடைகளும் பூத்துக்குலுங்கும் மலர்களும் வாகனங்களின் ஹோர்ண் சப்தமேயற்ற நிசப்தமும் சீலனின் மனதிற்கு ஒத்தடமாகவிருந்தன. 

குமாரவேல் சேர் போன்று பல அறிவுஜீவிகள் புகலிடத்தில் தஞ்சமடைந்திருப்பவர்களை சந்தித்தால் அவர்களின் வாழ்வில் அர்த்தமுள்ள அதிசயங்கள் நிகழுவதற்கு வாய்ப்புகள் இருக்கும். அவர் கனடா சென்று பத்மகலாவை சந்திக்கவேண்டும் என்று சீலனின் மனம் பிரார்த்தனை செய்தது.

சுவிஸ் புறப்படுவதற்காக அம்மா ஊரில் பட்ட கடனை அடைக்கவேண்டும். தங்கச்சிக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவேண்டும். அதற்குப்பிறகுதான் காதல்.

பத்மகலா எனக்கு கிடைப்பாள் என்பது விதியானால் கிடைப்பாள். இல்லையென்றால்....?

சீலனுக்கு யோசிப்பதற்கு சங்கடமாகவிருந்தது.

தவத்தார் இடம்மாறி தங்கியிருந்த வீட்டுக்கு வந்தவுடன் சீலன் நேரத்தைப்பார்த்தான். மாலை 5 மணி கடந்திருந்தது. 

' சீலன்.... இப்பத்தான் வேலையால் வந்தனான். இரும். தோய்ஞ்சிட்டு வாரன்." அவர் தொலைக்காட்சியை முடுக்கிவிட்டு குளியலறைக்குள் சென்றுவிட்டார்.

தொலைக்காட்சியில் செய்திகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சீலனுக்கு சுவிஸ் மொழியை கருத்தூன்றி கற்கவேண்டும் என்ற உணர்வை தூண்டியதும் தொலைக்காட்சிதான்.

தனக்கு முன்னால் விரிந்து நீண்டு பரந்திருக்கும் பொறுப்புகளை யோசித்து மலைத்துப்போனான். சுவிஸ் மொழி படிக்கவேண்டும். வருமானத்திற்கு ஒரு தொழில் தேட வேண்டும். உழைக்கவேண்டும். கிடைக்கும் வேலை இரவிலா, பகலிலா, நடுச்சாமத்திலா?

படிக்க ஒரு நேரம், உழைக்க ஒரு நேரம், உறங்க ஒரு நேரம், உணவு சமைக்க ஒரு நேரம், வீட்டுச்சாமான் சமையல் சாமான் வங்க கடைத்தொகுதிகளுக்குச்செல்ல ஒரு நேரம். அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கிவிட்டால் கார் ஓட்டப்பழக ஒரு நேரம். அம்மாவுடனும் தங்கச்சியுடனும் தொலைபேசியில் பேசுவதற்கு ஒரு நேரம், இவ்வளவுக்கும் மத்தியில் கனடாவிலிருக்கும் காதலி பத்மகலாவுடன் பேசுவதற்கு பொருத்தமான நேரமும் தேட வேண்டும்.

இதற்குத்தானா புல்பெயர்ந்தவர்கள் எல்லோரும் நேரத்துடன் போராடுகிறார்கள் என்பது பேசுபொருளாகியிருக்கிறது.

(தொடரும்  பகுதி 17)