WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

விழுதல் என்பது எழுகையே... பகுதிகள் 12-13 எழுதுபவர் கனடா குரு அரவிந்தன்  அவர்கள்.  


விழுதல் என்பது எழுகையே ...  


தொடர் - 12- 13 எழுதியவர்  


 திரு. குரு அரவிந்தன் - கனடா அவர்பற்றிய 


அறிமுகம்ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்.  இவர் நடேஸ்வராக்கல்லூரி’ மகாஜனாக்கல்லூரி’ பட்டயக்கணக்காளர் நிறுவனம் போன்றவற்றின் பழைய மாணவராவார். மகாராஜா நிறுவனத்தின் முன்னாள் நிதிக்கட்டுப்பாட்டாளர். இலக்கிய ஈடுபாடும்  பன்முக ஆளுமையும் கொண்ட இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து குடும்பத்துடன் கனடாவில் வசிக்கின்றார். கணக்காளராகவும்  பகுதி நேர ஆசிரியாகவும் ரொறன்ரோவில் கடமையாற்றுகின்றார்.

இவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்;:

விகடன் தீபாவளி மலர்இ விகடன் பவளவிழா மலர்இ ஆனந்தவிகடன்இ கலைமகள்இ கல்கிஇ குமுதம்இ யுகமாயினி (தமிழ்நாடு)இ தாய்வீடுஇ தூறல்இ உதயன்இ தமிழர் தகவல் (கனடா);இ தினக்குரல்இ வீரகேசரிஇ வெற்றிமணி(யேர்மனி)இ புதினம்(லண்டன்)இ உயிர்நிழல்(பாரிஸ்)இ வல்லினம் (மலேசியா)இ காற்றுவெளி (லண்டன்)இ பதிவுகள்(இணையம்) திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்)


விருதுகள் - பரிசுகள்:

தங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி - கனடா

சிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் இதழ் (2000)

சிறுகதைபோட்டி - முதற்பரிசு: ‘சுமை’ கனேடிய தமிழ் வானொலி-2007

சிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி-2008 (தமிழ்நாடு)

குறுநாவல் போட்டி: ‘அம்மாவின் பிள்ளைகள்’ (சிறப்புப்பரிசு) - யுகமாயினி-2009 (தமிழ்நாடு)

ஓன்ராறியோ முதல்வர் விருது : 10 வருட தன்னார்வத் தொண்டர் விருது - 2010 (கனடா)

குறுநாவல் போட்டி கலைமகள் விருது:(தமிழ்நாடு)’தாயுமானவர்’ - ராமரத்தினம் நினைவுப் பரிசு-2011

‘புனைகதை வித்தகன்’: சிறப்புக் கௌரவம் - கனடா பீல் தமிழர் அமைப்பு-2011

பாரிஸ்; கல்வி நிலைய வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி- ‘கனகலிங்கம் சுருட்டு’ (சிறப்புப்பரிசு) -2012

தமிழர் தகவல் கனடிய இலக்கிய விருது – 2012 கனடா.

ஞானம் சிறுகதைப் போட்டி சிறப்புப் பரிசு (பரியாரிமாமி)- 2013

ஓன்ராறியோ முதல்வர் விருது : தன்னார்வத் தொண்டர் விருது - 2013 (ஒன்ராறியோ)


வெளிவந்த நூல்கள்: தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுரவெளியீடுகள்:

சிறுகதை தொகுப்புக்கள்  இதுதான் பாசம் என்பதா? (2002இ 2005)   என் காதலி ஒரு கண்ணகி (2001)  நின்னையே நிழல் என்று! (2006)

நாவல்கள் - ஒலிப்புத்தகங்கள்: (மூன்று ஒலிப்புத்தங்கள் - குறும்தட்டு)


திரைப்படம் - கதைஇ திரைக் கதை வசனகர்த்தா.

(இந்திய-கனடிய கூட்டுறவு தயாரிப்பு)

மேடையேறிய நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)

அன்னைக்கொருவடிவம்இ (சித்தங்கேணி ஒன்றிய ஆண்டுவிழா)

மனசுக்குள் மனசு. (மாகஜனக்கல்லூரி நூற்றான்டு விழா – மொன்றியல்இ ரொறன்ரோ)

மேடையேறிய சிறுவர் நாடகம்: (கதைஇ வசனம்இ நெறியாள்கை)


சிறுவர் இலக்கியம்:

ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் 25 பக்கங்களில் வெளிவந்த இவரது நீர் மூழ்கி.. நீரில் மூழ்கி.. என்ற பெரியகதைக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் கிடைக்காத பாக்கியமாகும்.


கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவராகக் கடமையாற்றும் இவர் பீல் பிரஜைகள் சங்கத்தின்  உபதலைவராகவும்இ ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும்இ சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகள் பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

தகவல்

திரு.இக.கிருட்ணமூர்த்தி

www.pannagam.com

----------------

குரு அரவிந்தன் அவர்களின் கதை

தொடர்கிறது  பகுதி 12


ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனான் சீலன். 


சற்றும் எதிர்பார்க்காத ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது மறுபக்கம் கேட்ட அந்த இனிய குரல்.


‘நான்.. நான்.. உங்கள் பத்மகலா கனடாவில் இருந்து கதைக்கிறன்.’ அவனால் நம்பமுடியாமல் இருந்தது. 


கலாவா! எப்படி இவ்வளவு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு அவள் கனடாவிற்கு வந்தாள் என்பதைக் கூட சிந்திக்காமல் ‘உங்கள் பத்மகலா’ என்ற அவளது வார்த்தைகள்தான் அவனைக் குளிர வைத்தது. 


அந்த இரண்டு வார்த்தைகள் மட்டும் செவிகளில் விழுந்து அவனது உயிரை வருடிச் சென்று உச்சியைக் குளிரவைத்தது. இவ்வளவு காலமும் அவள் எங்கிருக்கிறாள் என்று அறிய முடியாத துடிப்பு அந்தக் குரலைக் கேட்டதும் பேசமுடியாது வாயை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு வார்த்தைக்காகத்தானே இத்தனை காலமும் அவன் ஏங்கிக் கொண்டிருந்தான். 


கற்பனையில் பறந்து கொண்டிருந்த இவனது மௌனம் மறுபக்கத்தில் அவளை அமைதி இழக்க வைத்தது.


‘சீலன் நீங்கள்தானே, ஏன் மௌனமாக இருக்கிறீங்க, கதையுங்களேன்..!’


‘ஓம்.. ஓம்.. கலா நான் தான். என்னால நம்பமுடியவில்லை. நீ எப்படி இருக்கிறாய்?’ தன்னைத் தானே சுதாரித்துக் கொண்டு உரிமையோடு அழைப்பது போல் ஒருமையில் அழைத்தான்.


‘நல்லாய் இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீங்கள்?’


‘நலம், நலமறிய ஆவல்.’ 


“கேட்கவில்லை, என்ன சொன்னீங்க?’ வேண்டுமென்றே கேட்டாள். 


‘நீ இங்கு சுகமே.. நான் அங்கு சுகமா..?’ அவன் வாய்க்குள் மெல்ல அந்தப் பாடலை முணுமுணுத்த போது இருவரும் தங்களை அறியாமல் சிரித்து விட்டு சிறிது நேரம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தனர். 


பத்மகலாவைப் போலவே சீலனும் நன்றாகப் பாடக்கூடியவன். மருத்துவக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக இருவரும் முதன் முதலாக மேடையில் பாடிய பாட்டு அதுதான் என்பதால் அவர்களால் அந்தப் பாடலை மறக்க முடியாமல் இருந்தது. 


எப்பொழுதுமே முதற்பார்வை,  முதல் சந்திப்பு, முதற்தொடுகை என்று எல்லாமே காதலர்களுக்கு இனிமையானதுதான். ஏனென்றால் காதலர்கள், காதலர்களாய் இருக்கும்வரை எப்பொழுதும் நல்ல பக்கத்தையே பார்த்துப் பழகுவதுண்டு, மறுபக்கம் பார்ப்பதில்லை. அதனால்தான் காலாகாலமாய்த் தொடரும் காதலைப்பற்றி ‘காதலுக்குக் கண்ணில்லை’ என்று நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தைக் கொண்டு சொல்லியிருக்கலாம்.


‘எப்போ கனடா வந்தாய்? அங்கே யாருடன் தங்கியிருக்கின்றாய் கலா..?’ 


படபடவென்று கேள்விகளை அடுக்கினான் சீலன்.


‘அக்கா குடும்பத்தோடுதான் தங்கியிருக்கின்றேன். அக்கா, அத்தான், பிள்ளைகள் எல்லோருமே ரொம்ப பாசமாய் இருக்கிறாங்கள்’ என்றாள் கலா.


‘அப்படியா? படிப்பெல்லாம் எப்படிப் போகிறது கலா, முடிஞ்சுதா? டாக்டர் ஆகிவிட்டாயா?’ என்றான் சீலன்.


கலாவிடம் இருந்து பதில் கிடைக்கவில்லை. மௌனம் சற்று நீடித்தது.


‘கலா என்ன மௌனமாகிவிட்டாய்... ஏன் என்னாச்சு?’ ஆவலுடன் கேட்டான்.


‘இல்லை சீலன், நாட்டு நிலமை தெரிந்ததுதானே! மேற்கொண்டு அங்கே என்னால் படிக்க முடியவில்லை, டாக்டர் ஆகவேண்டும் என்ற என்னுடைய கனவுகளை எல்லாம் அவங்கதான் கலைச்சிட்டாங்களே.’


சீலனிடம் இருந்து நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.


‘உண்மைதான் கலா, உன்னுடைய கனவுகள் மட்டுமல்ல, ஒவ்வொருவரின் கனவுகளையும் திட்டமிட்டே கலைத்து விட்டார்கள். சுருங்கச் சொன்னால் சொந்த பந்தத்தை மட்டுமல்ல, நாங்கள் வாழ்க்கையையும் தொலைத்து விட்டு திக்குத்திக்காய் இன்று அகதிகளாய் நிற்கின்றோம்.’ உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான் சீலன்.


‘ஓம் சீலன், இங்கேயும் அதே நிலைதான். என்ன இருந்தாலும் தஞ்சம் தந்த புகுந்த நாட்டை மறக்க முடியாதல்லவா? அவர்களுக்கு ஏற்றமாதிரி நாங்களும் அனுசரித்துப் போவது நல்லதல்லவா?’


‘நிச்சயமாக, கடைசிவரை இவர்களுக்கு நாங்கள் நன்றி உள்ளவர்களாக இருப்போம். உலகமெல்லாம் இன்று தமிழர்கள் பரந்து வாழ்வதற்குக் காரணம் இந்த உள்நாட்டுப் போர்தான். தீமைகள் இருந்தாலும் அதில் சில நன்மைகளும் உண்டு. சரி கலா.., இனிமேல் என்ன செய்வதாக யோசனை?’


‘பாதியில் விட்ட படிப்பைத்தான் இனித் தொடர வேண்டும். இங்கே மருத்துவக்கல்லூரயில் இடம் எடுப்பது என்பது மிகவும் கஸ்டம். ஆனால் மேற்கிந்திய தீவுகளில் உள்ள அமெரிக்க வைத்திய கல்லூரியில் தொடர்ந்து மிகுதியைப் படித்து முடிக்கலாம் என்று சொன்னார்கள். விண்ணப்பித்திருக்கின்றேன், 


செலவுதான் கொஞ்சம் அதிகமாகுமாம், அதுதான் யோசனையாக இருக்கின்றது.’ அவள் குரலில் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை தெரிந்தது.


‘கலா இந்த நிலையில் உனக்கு உதவி செய்ய முடியவில்லையே என்றுதான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது.’ வேலையற்ற நிலையில், அவளது லட்சியத்தை நிறைவேற்றத் தன்னால் முடியவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கிருந்தது.


‘நான் இப்ப உங்களை உதவி செய்யுங்க என்று கேட்டேனா?’


‘இல்லை கலா, உதவிகூடச் செய்ய முடியாத நிலைக்குப் போயிட்டேனே என்று நினைக்கத்தான் மனசுக்கு வேதனையாக இருக்கிறது’


‘இல்லை சீலன் மனதைத் தளரவிடாதையுங்கோ, எனக்குத் தெரியும் உங்களால எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் உங்கடை நல்ல மனசுக்கு ஒரு நாள் நீங்க நல்லா இருப்பீங்க, புகுந்த மண்ணில் அதற்கான எல்லா வழிகளும் திறந்தே இருக்கிறது, உங்களால் முடியும் சீலன்..!’


அவள் கொடுத்த நம்பிக்கை அவனுக்குள் உற்சாக ஊற்றை வரவழைத்தது. இந்த வயதில் பிடித்தமான ஒரு பெண்ணின் வார்த்தைகள் எப்பொழுதும் ஒருவனுக்கு உயிரூட்டுவதாகவே இருக்கும். அதுவே சில சமயங்களில் அவனது எதிர் காலத்தை நிர்ணயிப்பதாகவும் இருக்கலாம்.


‘நான் காத்திருப்பேன் சீலன்..!’


‘உண்மையாகத்தான் சொல்கிறாயா கலா..?’ மீண்டும் வார்த்தைகளால் அவனது மனதைத் தொட்டாள் பத்மகலா. சீலன் அப்படியே உருகிப்போனான். ஒரு காதலியின் வார்த்தைகளுக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதைக் காலாகாலமாய் சரித்திரம் சொல்லிக் கொண்டுதானே இருக்கிறது. சீலனும் அதற்கு விதிவிலகல்லவே..!


‘நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க, விழுகிறது ஒன்றும் தப்பில்லை விழுந்தவங்க எழும்பாமல் இருக்கிறதுதான் பெரிய தப்பு என்று, அது உங்களுக்கும் பொருந்தும் தானே?


தொடரும் பகுதி 13-------------------------------------------------------

பகுதி 13 எழுதியவர் கனடா திரு.குரு அரவிந்தன் அவர்கள் 

தொடர்கிறது விழுதல் என்பது எழுகையே ……………


‘நிச்சயமாய், நான் விழுந்து கிடக்கமாட்டேன் சீக்கிரம் எழுந்து காட்டுவேன் கலா..!’ வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. அடுத்த வாரம் மீண்டும் தொலைபேசியில் அழைப்பதாகச் சொல்லிப் பத்மகலா விடை பெற்றாள்.  யாரிடமிருந்து தனது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டாள் என்பதைக் கேட்க மறந்து விட்டதைப் பின்புதான் சீலன் நினைத்துப் பார்த்தான்.


முதலில் வேலை ஒன்று தேடவேண்டும், அப்புறம் கொஞ்சமாவது பணம் சேகரித்து பத்மகலாவிற்கு அவளது படிப்புச் செலவிற்காவது அனுப்ப வேண்டும். ஊருக்குப் பணம் அனுப்பி காணியை மீட்டெடுக்க வேண்டும். தங்கையின் திருமணம், பெரிய பொறுப்புத்தான் ஆனால் திட்மிட்டு ஒவ்வொன்றாகச் செய்து முடிக்க வேண்டும். அந்த நிமிடமே தனது எதிர்காலம் பற்றி அவன் தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான்.

முரளியின் மாமனார் குடும்பத்தினர் கனடாவில் இருந்தார்கள். பத்மகலாவின் அக்காவின் குடும்பமும் அவர்களின் குடும்பமும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர். முரளியின் திருமணம் ஏமாற்றத்தில் முடிந்ததை இவர்கள் அறிந்திருந்தனர். அன்;று வெள்ளிக்கிழமை, றிச்மன்கில் விநாயகர் ஆலயத்திற்கு கலாவின் அத்தான் குமார் சென்ற போது அங்கே மாமாவின் குடும்பத்தை சந்தித்துக் கொண்டார். வாராவாரம் சந்திப்பதற்கு ஏற்ற பொது இடமாகக் கோயில்தான் இருந்தது. பூசை முடிந்து பிரசாதம் எடுப்பதற்காக நிலவறைக்குச் சென்றபோது மாமா குடும்பத்தவர்களும் அங்கே நின்றிருந்தார்கள். என்னதான் தொலை பேசியில் மணித்தியாலக் கணக்காகப் கதைத்தாலும் நேரேபார்த்துக் கதைப்பதுபோல வராதல்லவா? எனவே வசதியான நேரம் பார்த்து வீட்டிற்கு வரும்படி மாமா குடும்பத்தினருக்கு குமார்  அழைப்பு விடுத்திருந்தார்.

அவர்கள் சொன்ன நேரத்தில் இருந்து சற்றுத் தாமதமாகவே மாமா குடும்பத்தினர் வந்திருந்தனர்.

‘சொறி, 401 நெடுஞ்சாலையில் ஒரு விபத்து, அதுதான் கொஞ்சம் தாமதமாய்போச்சு,’ தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டனர்.

‘401 எப்பவுமே இப்படித்தான். அதை நம்பித் திட்டம் போட்டு எதையுமே செய்ய முடியாது.’

‘407 இல வந்திருக்கலாம், ஆனால் அது காசைத் திண்டிடும்’

போக்குவரத்து பற்றிய கதை சுகதுக்கம் விசாரிப்பதில் முடிந்தது. பத்மநிலா என்று கலாவின் அக்கா தன்னைத்தானே அறிமுகப் படுத்திக் கொண்டாள். கலாவைப் போலவே அவளும் அழகாக இருந்தாள். 

‘வீட்டிலே அப்படித்தான் கூப்பிடுவாங்களா?’ முரளியின் மாமியார் கேட்டார்.

‘இல்லை, நீங்கள் நிலா என்றே என்னைக் கூப்பிடலாம்’ என்று தனது பெயரைச் சுருக்கிச் சொல்லிக் கொண்டாள்.

மருமகன் முரளி வைத்திய கலாநிதிக்குப் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பதாகவும், தற்சமயம் சுவிஸில் நிற்பதாகவும், விரைவில் கனடாவிற்கு வரவிருப்பதாகவும் சொன்னார்கள்.

சொன்னது போலவே பத்மகலா அடுத்தவாரம் தொலைபேசியில் அழைத்திருந்தாள். சீலன் அவளிடம் கேட்க நினைத்ததை உடனேயே கேட்டுவிட்டான்.

‘அதுசரி, உனக்கு எப்படி என்னுடைய போன் நம்பர் கிடைச்சுது?’ ஆவலுடன் கேட்டான் சீலன்.

‘அதுவா, எங்களுடைய சீனியர் முரளியை ஞாபகம் இருக்கா, அவர் அங்கேதானே இருக்கிறார், அவர்தான் கொடுத்தார்.’ என்றாள் கலா.

‘முரளியா?’ சீலனின் மனதில் காரணமில்லாமல் இனம் தெரியாத பயம் பிடித்துக் கொண்டது.

‘முரளியின் மாமா குடும்பத்தினர் இங்கே கனடாவில்தான் இருக்கிறார்கள். அவற்ரை தம்பியும் அவையோடதான் இருக்கிறாராம். எங்கட அத்தான் குமாருக்கு அவர்களை ஏற்கனவே தெரியும். இப்போ எங்க குடும்ப நண்பராகி விட்டார்கள். போன கிழமை எங்க வீட்டிற்கு வந்திருந்தார்கள். முரளியின் கலியாணம் நின்று போனதைப் பற்றி எல்லாம் கதைத்தார்கள்.’

‘அப்படியா, வேறை என்ன கதைச்சினம்?’

‘வேண்டாம் சீலன், அவை கதைத்ததை நான் கணக்கில் எடுக்கவில்லை, விட்டிடுங்கோ’

‘நீ எதையோ சொல்லத் தயங்குகிறாய் கலா, என்ன என்று சொல்லேன் பிளீஸ்..!’

மறுபக்கத்தில் கலா தயங்கினாள். 

சொன்னால் சீலனின் மனம் நோகும், சொல்லாவிட்டால் எதையோ நான் மறைப்பதாக அவன் தப்பாக நினைக்கலாம். என்ன செய்வது என்பதில்தான் அவளது தயக்கம் இருந்தது.

‘நான் தப்பாய் நினைக்க மாட்டேன், சொல்லு கலா.’ 

‘முரளிக்குக் கனடாவில்தான் பெண் பார்க்கிறாங்களாம். அதுவும் டாக்டருக்கு ஒரு டாக்டர் பெண் என்றால் நல்லதென்றும் அக்காவிடம் சொன்னாங்கள்.’ தயக்கத்தோடு சொன்னாள் கலா.

‘அப்படி என்றால்..?’

‘மறைமுகமாக எதையோ கேட்கத்தான் இங்கே வந்திருந்தாங்கள் போல எனக்குத் தெரிஞ்சுது.’ 

சீலனுக்குச் சில விசயங்கள் புரிய ஆரம்பமாச்சு. ‘டாக்டருக்கு டாக்டர்தான் மாச்சாகுமாம்’ என்ற திருமணத்திற்கான புதிய அடைமொழி சீலனைச் சிந்திக்க வைத்தது.

இந்த முரளி நல்லவன் இல்லை என்பதை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதே சீலன் அறிந்து கொண்டான். சீலனுக்கு முரளியைத் தெரியாது என்று முரளி நினைத்தாலும், சீலன் அவனை நன்கு அறிந்தே வைத்திருந்தான். சிலபேரை சிறிது நேரம் பழகிய உடனேயே அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சிலரால் புரிந்து கொள்ள முடியும். சரியோ பிழையோ ஒருவரின் குணத்தைப் பற்றி ஓரளவு ஊகித்து வைக்கும் அந்தத் திறமை சீலனிடம் இருந்தது. வெளியிலே நண்பன் போலச் சிரித்துச் சிரித்து கதைத்து சந்தர்ப்பம் பார்த்து முதுகிலே குத்தக் கூடியவன் முரளி என்பதைச் சீலன் பல தடவைகளில் அவதானித்து இருக்கின்றான். முரளி ஏன் அவசியமில்லாமல் பத்மகலாவின் வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்கின்றான் என்பதுதான் சீலனுக்கப் புரியாமல் இருந்தது.

கடைசியாக பத்மகலாவைச் சந்தித்த நிகழ்வு மனக் கண்முன்னால் நிழலாடியது. அவனது படிப்பு பாதியில் கலைந்து விட்டாலும் பத்மகலாவின் லட்சியமாவது நிறைவேற வேண்டும் என்று அப்போது வேண்டிக் கொண்டான். ‘அடுத்த முறை உன்னைச் சந்திக்கும் போது உன்னை ஒரு டாக்டராகவே பார்க்க வேண்டும்’ என்று அவன் தனது விருப்பத்தை அவளிடம் அப்போது தெரிவித்திருந்தான். விருப்பங்கள் எதுவுமே நிறைவேறாதபடி யார் போட்ட சாபமோ, எல்லாமே நிலை குலைந்து போயிருந்தது. திக்குத் திக்காய் உறவுகளைச் சொந்த பந்தங்களைப் பிரித்துப் போட்டு விட்டு விதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அகதி என்ற பெயர் சுமந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாடுநாடாய் ஓடவேண்டிய அவலநிலை ஈழத்தமிழனுக்கு வந்தது. அந்த அவலத்திலும் சில நன்மைகள் கிடைத்தன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதற்காகச் சிலர் கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டனர்.

மருத்துவக்கல்லூரி இறுதியாண்டு மாணவனான முரளிக்கு முதலாம் ஆண்டு மாணவியான பத்மகலாவில் ஒரு கண் இருந்தது. அவளது அழகும் அடக்கமும் அவனையும் கவர்ந்ததில் வியப்பில்லை. முதலாம் ஆண்டு மாணவர்களான சீலனும் பத்மகலாவும் அடிக்கடி ஒன்றாகத் திரிவதை முரளி அவதானித்துக் கொண்டே இருந்தான். அவர்களுடன் நட்போடு பழகுது போல நடித்தாலும் சீலனை அவளிடம் இருந்து தனிமைப்படுத்தவே சந்தர்ப்பத்தைப் பார்த்துக் காத்திருந்தான். எத்தனையோ வழிகளில் அவன் முயன்றாலும் அது பலன் தரவில்லை. சீலனோ மாணவர் தலைவனாக இருந்ததால் எல்லா மாணவர்களுடனும் அன்பாகப் பழகினான். சீலன் மீது இனம்புரியாத ஏதோ ஒருவித வெறுப்பு முரளிக்கு இருந்தது. ஒரே பெண்ணையோ அல்லது ஆணையோ இருவர் விரும்பும்போது அவர்களுக்குள் இத்தகைய பொறாமை ஏற்படுவது சகஜம்தான். சிலர் அடிதடிக்குப் போவார்கள், சிலர் மௌனமாக இருந்து  சாதிப்பார்கள். முரளியோ இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். அதனால் சீலனை எப்படியாவது ஓரம் கட்டவேண்டும் என்று முரளி நினைத்தான். எப்படியாவது சீலனை மாட்டி விடுவதற்கு ஏதாவது காரணம் கிடைக்குமா என்று எதிர் பார்த்திருந்த போதுதான் அவனுக்கு எதிர்பாராத ஒரு சந்தர்பம் கிடைத்தது. அது எவ்வளவு தவறான முடிவு என்று அவனது மனச்சாட்சி சொன்னாலும் பத்மகலாமீது வைத்திருந்த அவனது ஒருதலைக் காதல் அந்தத் தவற்றைச் செய்ய அவனைத் தூண்டியது. ‘சொல்லாத காதல் ஒருபோதும் கனிவதில்லை’ என்பார்கள். உண்மைதான், பத்மகலா மீது கொண்ட ஒருதலைக் காதலால் முரளி தனது மனச்சாட்சியின் கண்களை இறுக மூடிக்கொண்டு செயலாற்றினான். 

இலங்கையில் இயக்கச் சண்டைகள் காரணமாக ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்த காலமது. பல்கலைக் கழகத்திலும் அது ஒரு தொற்று நோய் போல பரவிக் கொண்டது. பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டவர்கள் எப்பொழுதும், எங்கேயும் இருப்பார்கள் என்பதைப் பல தடவைகள் கண்முன்னால் நிரூபித்த நிகழ்ச்சிகள் பல அங்கே அரங்கேறின. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் சீலன் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டான். சீலன் அப்படி இயக்கம் ஒன்றிலும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாவிட்டாலும் மாணவத் தலைவனாக இருந்ததால் வலிய மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சீலன் வலிய மாட்டிக் கொண்டான் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், ஆனால் அப்படி மாட்டிக் கொள்வதற்குத் தகவல் கொடுத்தது வேறுயாருமல்ல முரளிதான் என்பது எவருக்குமே தெரியவில்லை. தகவலைப் புலன் விசாரனை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு எதுவுமே தெரியாதது போல முரளி நடந்து கொண்டான். வழமைபோல எல்லோரிடமும் அவன் கலகலப்பாகப் பேசி நடித்ததால் யாருமே அவன் மீது சந்தேகம் கொள்ளவில்லை. சீலன் இல்லாத காலத்தில் நட்போடு பழகுவது போலப் பழகிப் பத்மகலாவை அடைய முரளி எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தான். எதுவுமே பலன் தரவில்லை. பத்மகலாவோ எட்டாத கனியாகவே அவனுக்கு இருந்தாள். அதனால் மனசுக்குள் வெகுண்டெழுந்தவன், தனக்குக் கிடைக்காவிட்டாலும் பத்மகலா சீலனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். சீலன் சிறைக்குச் சென்றதால் பத்மகலாவிடம் இருந்து பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தது. சாதாரண பிரிவல்ல, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சீலன் கைது செய்யப்பட்டதால், அவனுடன் தொடர்பு கொள்ள எல்லோரும் தயங்கினார்கள். சீலனை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கூட அறிந்து கொள்வது கடினமாக இருந்தது. உண்மையான காதல் என்றால் பிரிவு என்பது காதலர்களை மேலும் மேலும் ஒன்றாகச் சேர வைத்திருக்கும் அனால் வெறும் போலியான காதல் என்றால் பிரிவு அவர்களைப் பிரித்து விடும். காதல் என்று அடம் பிடித்த எத்தனையோ காதலர்களைப் பெற்றோர்கள் இப்படித்தான் பிரித்து வைத்து நிரந்தரமாகவே அந்தக் காதலுக்குச் சமாதி கட்டிய கதைகள் பல உண்டு. உண்மையைச் சொன்னால் அது காதலே அல்ல, ஒருவரின் உடல் மீது கொண்ட வெறும் மோகம் அதாவது இன்பாக்சுவேஷன் என்று தான் அதைச் சொல்லவேண்டும்.

சீலன் சென்ற இடமெல்லாம் முரளி தொடர்ந்து கொண்டேயிருந்தான். உத்தியோகம் புருஷலட்சணம் என்பது போலப் படிப்பும் பதவியும் இருந்தால்தான் இந்த உலகம் மதிக்கும் என்ற நவீன தத்துவத்தை எதிர்கொள்ளச் சீலன் தயாரானான். ‘இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே’ என்பதைப் புரிந்து கொண்டு கடின உழைப்பிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான் சீலன். ஆனால் காலம் அவனுக்காகக் காத்திருக்கத் தயாராக இல்லை, சற்றும் எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று அவனுக்காகப் பத்மகலாவிடம் இருந்தது  

 தொடரும் 14 


தொடர் 14  எழுதுபவர் டென்மார்க்  கே.எஸ் .துரைஅவர்கள்------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------